சிரியா போர்: கைபேசிக் காணொளிகள் மூலம் வெளியாகும் போர்க் குற்றங்கள்

சிரியா போர்: கைபேசிக் காணொளிகள் மூலம் வெளிவரும் போர்க்குற்றங்கள்

பட மூலாதாரம், AFP

    • எழுதியவர், ஜியர் கோல்
    • பதவி, பிபிசி பெர்ஷியா

வடகிழக்கு சிரியாவில், குர்து கிளர்ச்சியாளர்களுடன் சண்டை இட்டுவரும் துருக்கி ஆதரவுப் படைகள் போர்க்குற்றங்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. சமீபத்தில் வெளியாகத் தொடங்கிய கைபேசி காணொளிகளின் உதவியோடு இந்த குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன.

இத்தகைய செயல்பாடுகளுக்கு துருக்கியே பொறுபாக்கப்படும் என்று ஐ.நா எச்சரித்துள்ள நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்தபடும் என்று துருக்கி உறுதியளித்துள்ளது.

தாடி வைத்துள்ள ஒரு மனிதர், "அல்லாஹூ அக்பர்" (இறைவனே மேன்மையானவர்) என்று கோஷமிடுகிறார். இந்த செயல்களை கைபேசியில் காணொளியாக எடுக்கும் நபர், குர்து வீர்ரகளின் உடல்கள் உள்ள இடத்தில் நின்று, "நாங்கள் ஃபேலஹ் அல்-மஜித் பெட்டாலியனை சேர்ந்த முஜாஹிதீன் (போர் வீரர்கள்)" என்று கூறுகிறார். அதைத்தாண்டி உள்ள இடத்தில், ரத்த வெள்ளத்தில் உள்ள ஒரு பெண்ணின் உடலின் மீது கால்களை வைக்கிறது ஒரு ஆண்கள் குழு. அதில் ஒருவர், இவள் மிகவும் மோசமானவள் என்று கூறுகிறார்.

இஸ்லாமிய அரசு என்று தங்களை கூறிக்கொள்ளும் ஐ.எஸ் குழு தயாரித்த காணொளி போன்றே இதுவும் மிக மோசமாக உள்ளது. ஆனால், இந்த காணொளியில் உள்ளவர்கள் ஐ.எஸ் குழுவை சேர்ந்தவர்கள் இல்லை. இவர்கள், துருக்கியால் நிதியளித்து, பயிற்சி அளிக்கபட்ட 'சிரியா தேசிய ராணுவம்' என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள். துருக்கி ராணுவத்தின் கட்டளைக்கு கீழே இவர்கள் செயல்படுகிறார்கள்.

வடக்கு சிரியாவில் கடந்த அக்டோபர் 21ஆம் தேதி இந்த காணொளி எடுக்கப்பட்டுள்ளது. சிரியாவிலிருந்த ஐ.எஸ் படையை தோற்கடிக்க முக்கிய பங்காற்றிய குர்து போராட்டக் குழுவான ஒய்.பி.ஜேயின் பெண்கள் குழுவிலிருந்து சண்டையிட்டுவந்த அமாரா ரினெஸ் என்பவரின் உடலைத்தான் காணொளியில் அந்த வீரர்கள் மித்தித்துக்கொண்டு இருந்தனர். சமீபத்திய தாக்குதலில் அமாரா கொல்லப்பட்டார்.

அக்டோபர் 9ம் தேதி, அமெரிக்க அதிபர் டிரம்ப், சிரியாவில் இருந்து அமரிக்கப் படைகளை திரும்பப் பெறுவதாக அறிவித்த உடனே, துருக்கி படையும், துருக்கிக்கு ஆதரவான சிரியா கிளர்ச்சியாளர்கள் படையும் சேர்ந்து, குர்து ஆயுதப்படையை தாக்கினர்.

இந்த குர்து ஆயுதப்படைதான், அமெரிக்க ராணுவத்தின் நம்பிக்கையான கூட்டாளியாக இருந்து, அவர்களுடன் இணைந்து அங்கிருந்த ஐ.எஸ் படையை அழித்து வந்தது. இதே படைதான், கடந்த வாரம் கொல்லப்பட்ட ஐ.எஸ் தலைவரான அபு பக்கர்-அல் பாக்தாதி குறித்த ரகசிய தகவல்களை அளித்ததாகவும் கூறப்படுகிறது.

அமாரா ரெனஸ்

பட மூலாதாரம், YPG MEDIA CENTER

காணொளி மிரட்டல்கள்

துருக்கியின் தாக்குதல் நடந்த சில தினங்களுக்குப் பின், துருக்கிக்கு ஆதரவான படையினரால் பதிவு செய்யப்பட்ட பல காணொளிகள் சமூக ஊடகங்கங்களில் பரவத்தொடங்கின.

அதில் ஒரு காணொளியில், ஒருவீரர், "மத நிந்தனையாளர்கள், பற்றுறுதி இல்லாதவர்கள் தலையை எடுக்கவே இங்கு வந்துள்ளோம்." என்று கத்துவதை பார்க்க முடிகிறது.

மற்றொரு காணொளியில், மிகவும் பயந்த நிலையிலுள்ள ஒரு பெண்ணை கருப்பு ஆடை அணிந்த நபர் தூக்கிச்செல்கிறார். ஒருவர் அந்த பெண்ணை `பன்றி` எனத்திட்ட, மற்றவர்கள், "இவளின் தலையை வெட்டி எடுத்துச்செல்" என்று கூறுகிறார்கள். அந்த காணொளியில் காணப்படும் பெண்ணின் பெயர் சிசேக் கொபென். அவரும் ஒய்.பி.ஜெ படையை சேர்ந்தவரே.

இந்த காணொளிகள் சமூக வலைதளங்களில் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தின. காணொளி வெளியான சில நாட்களில், துருக்கியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிசேக் கொபென் சிகிச்சை பெறுவதுபோன்ற ஒரு காட்சியை துருக்கி ஊடகம் வெளியிட்டது.

இத்தகைய காணொளிகளில் வரும் சில காட்சிகள், போர்க்குற்றங்களில் சேரும் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

"துருக்கிக்கு ஆதரவாகவும், சிரியாவிற்கு எதிராகவும் செயல்படும் இந்த படைக்கு பயந்து பலர் அங்கிருந்து வெளியேறிவிட்டார்கள்" என்று, அமெரிக்க நாடாளுமன்றத்தில் சிரியாவிற்கான அமெரிக்காவின் சிறப்பு தூதர் ஜேம்ஸ் ஜெஃப்ஃபரி தெரிவித்தார்.

"துருக்கி கட்டுப்பாட்டில் இயங்கிவரும் இந்தப்படை, நிச்சயம் ஒரு நிகழ்விலாவது போர்க்குற்றம் செய்திருக்கும் என்பதை நம்மால் கூற முடியும்" என்றார் அவர்.

சிரியா போர்: கைபேசிக் காணொளிகள் மூலம் வெளிவரும் போர்க்குற்றங்கள்

முக்கியப்புள்ளி

"வெளிநாட்டு வீரர்கள், முன்னாள் ஜிகாதிகள் என 110 நாடுகளை சேர்ந்த வீரர்கள், சேர்ந்து 40ஆயிரம் பேர் சிரியாவில் போர் புரிய வந்தார்கள். அந்த திட்டத்தை நான்தான் செயல்படுத்தினேன். அவர்கள் அனைவருமே துருக்கி வழியாகவே வந்தார்கள்" என்று கடந்த மாதம் சி.என்.என் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், முன்னாள் அமெரிக்க அதிபரின் சிறப்பு தூதராக இருந்த பிரெட் மெக்கர்ட் தெரிவித்துள்ளார்.

கிளர்ச்சியாளர்களால் நடத்தப்பட்டதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்து துருக்கியிடம் விளக்கம் கேட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சந்தேகத்துக்குரிய வகையிலுள்ள எந்த ஒரு போர்குற்றம் குறித்தும் துருக்கி விசாரிக்கும் என்று துருக்கி அதிபர் அலுவலக செய்தித் தொடர்பாளரான இப்ராகிம் கலின் தெரிவித்துள்ளார். ஆனால், குர்து செயற்பாட்டாளர்கள், துருக்கி அரசின் மீதோ, அதன் ராணுவத்தின் மீதோ நம்பிக்கை இல்லை என்கின்றனர்.

"குர்துகளின் தன்னாட்சிக்காக பல ஆண்டுகளாகப் போராடிய பி.கே.கே என்று அழைக்கப்படும் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சிக்கு எதிராக கடந்த 40 ஆண்டுகளாக, துருக்கியின் பாதுகாப்புப் படையும், ராணுவமும், மிகவும் திட்டமிடப்பட்ட போர்க்குற்றங்களையும், மனித உரிமை மீறல்களையும் செய்துள்ளன என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் உள்ளன." என்கிறார், சஸ்ஸெக்ஸ் பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் துறையின் பேராசிரியரான கம்ரான் மட்டின்.

சிரியா போர்: கைபேசிக் காணொளிகள் மூலம் வெளிவரும் போர்க்குற்றங்கள்

பட மூலாதாரம், AFP

புறக்கணிப்பு

துருக்கி அதிருப்தியாளர்களான பல குர்துக்கள், கடந்த பத்து ஆண்டுகளில், துருக்கி ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைகளால், மிகவும் மோசமான முறையில் கொல்லப்பட்ட பல காணொளிகல் இதுவரை வெளியாகியுள்ளன.

சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஒரு காணொளியில், பி.கே.கே-வை சேர்ந்த, கொல்லப்பட்ட கிளர்ச்சியாளர் ஒருவரின் தலையை, துருக்கி வீரர் வெட்டி எடுத்தார். மற்றொரு காணொளியில், மலை முகட்டில் கைகள் கட்டப்பட்ட நிலையில் உட்கார வைக்கப்பட்ட இரு பெண் போராளிகளை, மிகவும் அருகாமையிலிருந்து சுட்ட துருக்கி வீரர், அவர்களை உதைத்து மலையிலிருந்து தள்ளிய காட்சிகளும் வெளியாகின.

கடந்த 2015 அக்டோபர் மாதத்தில், துருக்கியின் சிர்நக் பகுதியின் சாலைகளில், 24 வயது நடிகரான ஹகி லோக்மன் பிர்லிக்கின் உடலை துருக்கி பாதுகாப்புப் படையினர் கழுத்தில் கயிறு மாட்டி இழுத்துவந்த காட்சிகள் வெளியாகின. இந்த காணொளியின் ஒரு பகுதி காவல்நிலைத்தில் எடுக்கப்பட்டது போன்ற தோற்றத்தை அளித்தது. இது குறித்து கருத்து தெரிவித்த துருக்கி அதிகாரிகள், அவரின் உடல் களவாடப்பட்டிருக்கலாம் என்று கூறினர்.

துருக்கியின் செயல்பாடுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்காததற்காக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் மீது குர்து மனித உரிமை செயற்பாட்டாளர்கள் குற்றம் சாட்டினர்.

"துருக்கி அரசின் மனித உரிமை அத்துமீறல்கள் குறித்து ஐரோப்பிய யூனியன் எந்த கேள்வியும் கேட்காமல், கண்டும் காணாதது போல இருந்துவிட்டது. நேட்டோவில் துருக்கியும் அங்கம் வகிக்கிறது, அந்நாட்டுடன் உள்ள பொருளாதார ஒப்பந்தங்கள், இதுகுறித்து நடவடிக்கை எடுத்தால், ஐரோப்பிய நாடுகளில் வாழும் துருக்கி மக்களின் எதிர்ப்புகளை சந்திக்கும் தேவை ஏற்படும் சூழ்நிலை ஆகியவையே இதற்கு காரணம்." என்கிறார் கர்மான் மட்டின்.

சிரியாவின் உள்நாட்டுப் போர் தொடங்கியதிலிருந்து, துருக்கி அதிபர் எர்துவான், "ஐரோப்பிய கண்டம் முழுவதிலும் சிரியாவின் அகதிகள் வெள்ளமாக குவிவார்கள்" என்று மிரட்டி வருகிறார்.

ஐரோப்பிய நாடுகள் எந்த விலை கொடுத்தாவது இதை தவிர்க்கவேண்டும் என்றே விரும்புகின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :