"மலேசிய முன்னாள் பிரதமரும் விடுதலைப் புலிகள் ஆதரவாளரா?" - மலேசிய மூத்த அரசியல் தலைவர் கேள்வி

மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் துன் ரசாக்

பட மூலாதாரம், Ore Huiying

படக்குறிப்பு, மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் துன் ரசாக்
    • எழுதியவர், சதீஷ் பார்த்திபன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக - மலேசியாவிலிருந்து

கண்மூடித் திறப்பற்குள் அனைத்தும் நடந்து முடிந்திருக்கிறது. மலேசியாவில் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவாகச் செயல்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டின் பேரில் 12 பேரை கைது செய்துள்ளது அந்நாட்டுக் காவல்துறை.

இது தொடர்பாக அரசுத் தரப்பை நோக்கி பல்வேறு தரப்பினரும் பலவிதமான கேள்விகளை தொடுத்து வரும் நிலையில், விடுதலைப் புலிகள் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 12 பேரில், பி.சுப்பிரமணியம் என்பவர் சார்பாக, தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆட்கொணர்வு மனு ஒன்றை அக்டோபர் 21ஆம் தேதி (திங்கட்கிழமை) விசாரிக்க உள்ளது கோலாலம்பூர் உயர்நீதிமன்றம்.

இதுபோன்று மேலும் சில வழக்குகள் தொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கைதானவர்களில் இருவர் அந்நாட்டின் இருவேறு மாநிலங்களைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் ஆவர். மேலும், இருவரும் நாட்டை ஆளும் கூட்டணியில் அங்கத்துவம் வகிக்கும் ஜனநாயக செயல் கட்சியைச் சேர்ந்தவர்கள்.

இதனால் ஆளும் கூட்டணிக்குள் சலசலப்புகள் எழுந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், மதபோதகர் ஜாகிர் நாயக்கை நாடு கடத்த வேண்டும் என தாம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாலேயே விடுதலைப் புலிகள் விவகாரம் எழுந்துள்ளது என்கிறார் மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி.

Presentational grey line
Presentational grey line

மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் துன் ரசாக்கும் விடுதலைப் புலிகள் ஆதரவாளரா?

பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில், மலேசிய ஆளும் கூட்டணியின் முக்கிய உறுப்புக் கட்சியான ஜனநாயக செயல் கட்சியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங், விடுதலைப்புலிகள் விவகாரத்தில் பொய்யான செய்திகள், ஒன்றோடு ஒன்று தொடர்பு இல்லாத புகைப்படங்கள், காணொளிகள் ஆகியவற்றைக் கொண்டு தங்கள் கட்சி மீது பழிசுமத்தப்படுவதாகச் சாடி உள்ளார்.

ஜனநாயக செயல் கட்சியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங்

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, ஜனநாயக செயல் கட்சியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங்

அமெரிக்கா, இஸ்‌ரேல், விடுதலைப் புலிகள் ஆகிய சர்வதேச சதிகாரர்களுடன் ஜனநாயக செயல் கட்சிக்கும் தொடர்புள்ளது என்று மலேசிய எதிர்க்கட்சியான 'பாஸ்' (PAS) தெரிவித்துள்ள குற்றச்சாட்டு ஏற்றுக் கொள்ள முடியாதது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டானது பொய்யான, வெறுப்புணர்வைத் தூண்டும் குற்றச்சாட்டு என்றும் அவர் விமர்சித்துள்ளார். பாஸ் ஆதரவு ஊடகமான 'ஹராகா' (Harakah)வில் வெளியான கட்டுரை ஒன்றை லிம் கிட் சியாங் சுட்டிக்காட்டுகிறார்.

முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் கடந்த 2012ஆம் ஆண்டு இலங்கைத் தமிழர்களுக்காக ஒரு மில்லியன் அமெரிக்க டாலரை உதவித் தொகையாக அளித்ததைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், அப்படியானால் நஜிப்பும் கூட விடுதலைப் புலிகளின் ஆதரவாளரா? என்று தமது சமூக வலைத்தளப் பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.

"ஜனநாயக செயல்கட்சிக்கும், பாஸ் கட்சிக்கும் இடையே முன்பு கூட்டணி இருந்தது. ஏன் அப்போதெல்லாம் எங்கள் கட்சிக்கும், விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் தொடர்புள்ளதாக பாஸ் கட்சித் தலைமை ஏன் புகார் எழுப்பவில்லை?" என்பதும் கிட் சியாங்கின் கேள்விகளில் ஒன்றாகும்.

கடந்த 1976-லேயே விடுதலைப்புலிகள் இயக்கம் தோற்றுவிக்கப்பட்டதாகச் சுட்டிக்காட்டி உள்ள அவர், அதன் பிறகான 43 ஆண்டுகளில் அந்த அமைப்புக்கு ஜனநாயக செயல் கட்சி ( ஜசெக ) ஆதரவு தெரிவித்ததாக ஒருமுறை கூட குற்றம்சாட்டப்பட்டதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

"கடந்த 1983 தொடங்கி 2009 வரை இலங்கையில் உள்நாட்டுப் போர் நடந்த வேளையில், ஜசெக மீது எந்தக் குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை. கடந்த பத்து ஆண்டுகளிலும் அந்த அமைப்பினரோடு எங்கள் கட்சி உறுப்பினர்களுக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை.

விடுதலைப் புலி போராளிகள் (கோப்புப் படம்)

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, விடுதலைப் புலி போராளிகள் (கோப்புப் படம்)

"இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஜசெக மீது திடீரென பாஸ் கட்சியின் ஆதரவுப் பத்திரிகை ஏன் குற்றம்சாட்டுகிறது. தற்போது செயல்பாட்டில் இல்லாத எல்டிடிஈ, இஸ்ரேல், அமெரிக்காவுடன் ஜசெகவையும் தொடர்புப்படுத்தி அப்பத்திரிகை ஏன் செய்திகளை வெளியிட வேண்டும்?" என்றும் கிட் சியாங் மேலும் பல கேள்விகளை அடுக்கி உள்ளார்.

'நிதியளித்த மலேசியர்களை தவறாக நினைக்கக்கூடாது'

பொதுமக்களுக்கு உதவி செய்பவர்கள் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்று தவறாகக் கருதப்படுவது சரியல்ல என்று மலேசிய பிரதமர் துறை அமைச்சர் பொன். வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அத்தகையவர்கள் உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுதாபம் காட்டுபவர்களாக அடையாளம் காணப்பட வேண்டும் என்று நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.

"இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதித் தருணங்களில், சுமார் ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்டனர். அவர்களது குடும்பங்களைச் சேர்ந்த பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்," என்று அமைச்சர் வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

எனவே தான் இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கில் மலேசியர்கள் பலர் நிதி உதவி அளித்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், உதவி செய்தவர்களை தவறாக நினைக்கக் கூடாது எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

Presentational grey line
YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

Presentational grey line

கைதானவர்களுக்கு கைகொடுக்கும் மலேசிய இந்தியர் காங்கிரஸ் கட்சி

புலிகளுடன் தொடர்பு என்ற குற்றச்சாட்டின் கீழ் கைதாகி உள்ள ஜனநாயக செயல்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் இருவருக்கும் அதே கட்சியை சேர்ந்த ராம் கர்ப்பால் சிங், ஆர்எஸ்என் ராயர் ஆகிய வழக்கறிஞர்களை நியமித்துள்ளது ஜசெக தலைமை.

சட்டமன்ற உறுப்பினர்களை சொஸ்மா சட்டத்தின் கீழ் தடுத்து வைத்திருப்பது தவறு என்று இவர்கள் வாதிட உள்ளனர். இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்கள், எந்தவித விசாரணையும் இன்றி 28 நாட்களுக்கு தடுத்து வைக்கப்படலாம்.

இந்த விவகாரத்தில் மற்றொரு திருப்பமாக எதிர்க்கட்சிக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியும் (மஇகா) கைதான சாமானியர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளது. அவர்களுக்கு இலவச சட்ட உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சொஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதால், தங்களுக்கு 28 நாட்கள் அவகாசம் உள்ளது என்று காவல்துறை நிதானப் போக்கைக் கடைபிடிக்கக் கூடாது எனவும் மஇகா உள்ளிட்ட பல்வேறு தரப்புகள் வலியுறுத்தி உள்ளன.

ஏளனப்படுத்திய ராமசாமி மன்னிப்பு கோர வேண்டும் - ஜாகிர் தரப்பு

பினாங்கு ராமசாமி

பட மூலாதாரம், FACEBOOK

படக்குறிப்பு, பினாங்கு ராமசாமி

விடுதலைப் புலிகள், ஜாகிர் நாயக் விவகாரங்களை தொடர்புப்படுத்தி வெளிப்படையாகப் பேசி வருகிறார் பினாங்கு துணை முதல்வர் ராமசாமி.

இந்நிலையில், இவர் மீது கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார் ஜாகிர் நாயக்.

தம்மை பற்றி ஊடகங்களில் கருத்து தெரிவிக்க ராமசாமிக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும், ஏற்கனவே தெரிவித்த கருத்துக்களுக்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் தமது மனுவில் ஜாகிர் நாயக் வலியுறுத்தி உள்ளார்.

Presentational grey line
Presentational grey line

இதற்காக துணை முதல்வர் ராமசாமிக்கு, ஏழு நாட்கள் அவகாசம் அளித்துள்ளது ஜாகிர் நாயக் தரப்பு.

மலேசியாவின் பாதுகாப்புக்கு தாம் அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி, தம்மை ஏளனப்படுத்தி, மோசமாக சித்தரித்ததாகவும் ராமசாமி மீது ஜாகிர் நாயக் குற்றம்சாட்டி உள்ளார்.

ஜாகிர் நாயக் பெயரை ஏன் இழுக்க வேண்டும்?

இந்நிலையில், விடுதலைப் புலிகள் விவகாரத்தை மதபோதகர் ஜாகிர் நாயக்குடன் ஒப்பீடு செய்வது ஏன்? என பிரதமர் துறை துணையமைச்சர் டத்தோஸ்ரீ முஜாஹித் யூசோஃப் கேள்வி எழுப்பியுள்ளார்.

"புலிகள் விவகாரம் குறித்துப் பேசும்போது எதற்காக ஜாகிர் நாயக் பெயரை இழுக்கிறார்கள். அதற்கான காரணம் எனக்குத் தெரியவில்லை."

"தீவிரவாத தொடர்புகள் இருப்பின் முஸ்லீம் அல்லது முஸ்லீம் அல்லாதவர் எனும் பாகுபாடு ஏதுமின்றி காவல்துறை நடவடிக்கை எடுக்கும். தகுந்த ஆதாரங்கள் இருப்பின் இதற்காக யாரை வேண்டுமானாலும் போலீசார் தடுத்து வைக்கலாம்," என்று அமைச்சர் முஜாஹித் யூசோஃப் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு மலேசியாவில் புத்துயிரூட்ட சிலர் முயற்சிப்பதாக மலேசிய காவல்துறை தெரிவித்துள்ளது. அந்த இயக்கத்திற்கு நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் கிளைகள் இருப்பதாகவும், நிதி திரட்டுவது, பிரசாரம் மேற்கொள்வது போன்ற நடவடிக்கைகளில் சிலர் ஈடுபட்டு வருவதாகவும் காவல்துறை கூறியுள்ளது.

ஜாகிர் நாயக்

பட மூலாதாரம், ANADOLU AGENCY

இது தொடர்பாக காவல்துறை வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என சில தரப்பினர் வலியுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக கருத்துரைத்த துணை முதல்வர் ராமசாமி, ஜாகிர் நாயக் விவகாரத்திலும் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

இதையடுத்தே புலிகள் விவகாரத்தில் மதபோதகர் ஜாகிர் நாயக் பெயரை இழுப்பது சரியல்ல என்று அமைச்சர் முஜாஹித் யூசோஃப் கூறியதாகக் கருதப்படுகிறது.

ஜாகிருக்கு எதிரான ஆதாரங்கள்

ஜாகிர் நாயக்கின் குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் எதிர்கொள்ள தாம் தயாராக இருப்பதாக துணை முதல்வர் ராமசாமி கூறியுள்ளார்.

ஜாகிர் நாயக்கை ஏளனப்படுத்தவும், அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவும் தமது தரப்பில் எத்தகைய காரணங்களும் இல்லை என்கிறார் ராமசாமி.

"பின்வாசல் வழியாக மலேசியாவில் நிரந்தர வசிப்பிட உரிமை பெற்றுள்ள ஒருவர், இந்நாட்டிலேயே பிறந்து வளர்ந்த என் மீது வழக்குத் தொடுக்கிறார். பல்வேறு இனங்கள், மதங்களுக்கு மத்தியில் வெறுப்புணர்வையும் பதற்றத்தையும் அவர் ஏற்படுத்தி உள்ளார். என்னை நீதிமன்றத்திற்கு வரவழைக்க வேண்டும் என்பதற்காக சிலர் அவருக்கு தைரியம் அளித்துள்ளனர். எனவே நீதிமன்றத்தில் சந்திப்போம். என்னிடம் அனைத்து ஆதாரங்களும் உள்ளன," என்று ஜோர்ஜ் டவுனில் செய்தியாளர்களிடம் பேசுகையில் துணை முதல்வர் ராமசாமி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

ஜாகிர் நாயக் குறித்து தாம் கருத்து தெரிவிப்பதற்கு தடைகோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவையும் தாம் எதிர்கொள்ள தயாராக இருப்பதாகக் குறிப்பிட்ட ராமசாமி, தம்மிடம் உள்ள ஆதாரங்களை நீதிமன்றத்திடம் அளிக்கப் போவதாகக் கூறினார்.

"வங்கதேசம், இலங்கையில் நிகழ்ந்துள்ள பயங்கரவாத தாக்குதல் தொடர்பான ஆதாரங்கள் உள்ளன. மேலும், கிளந்தானில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜாகிர் நாயக் தெரிவித்த இனவாதக் கருத்துக்கள் குறித்தும் தெரிவிப்போம்."

"பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைக்காக ஜாகிர் நாயக்கை நாடு கடத்த வேண்டும் என இந்திய அரசு விரும்புகிறது. எனினும் அந்நாட்டைத் தவிர வேறு எந்த நாடும் அவரை விரும்பவில்லை," என்று துணை முதல்வர் ராமசாமி மேலும் தெரிவித்துள்ளார்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :