இந்தியாவை போன்று பொருளாதார மந்த நிலையால் தவிக்கும் சீனா - நடப்பது என்ன?

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் மற்றும் உள்ளூர் தேவை அதிகரிப்பு ஆகிய காரணங்களால் எதிர்பார்த்ததைவிட மூன்றாவது காலாண்டில் சீனாவின் பொருளாதாரம், மெதுவான வளர்ச்சியையே கண்டுள்ளது.
செப்டம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டின் முடிவில், கடந்த ஆண்டைவிட பொருளாதாரம் 6 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தரவுகள் கூறுகின்றன.
பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு வரிக்குறைப்பு போன்ற நடவடிக்கைகளை அரசு மேற்கொண்ட போதிலும், பொருளாதார மந்தநிலை ஏற்பட்டிருக்கிறது.
கடந்த மூன்று தசாப்தங்களில் இல்லாத மிக மெதுவான வேகத்தில் வளர்ச்சி கண்டிருந்த சீன பொருளாதாரத்திற்கு, தற்போது வெளியான இந்தத் தரவுகள் ஒரு அடியாகவே பார்க்கப்படுகிறது. உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடு சீனா என்பது குறிப்பிடத்தக்கது.

பட மூலாதாரம், Getty Images
ஆண்டு பொருளாதார வளர்ச்சி இலக்காக அரசு நிர்ணயித்த 6 மற்றும் 6.5 சதவீதத்திற்குள்தான் இது இருக்கிறது.
சீனாவின் பொருளாதார வளர்ச்சி உலகப் பொருளாதாரத்தில் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால், இது கூர்ந்து கவனிக்கப்படுகிறது.
கடந்த சில தசாப்தங்களாக உலக பொருளாதாரத்தில் சீனா முக்கிய பங்கு வகிக்கிறது. பல்வேறு பொருட்களுக்கு அந்நாட்டில் இருக்கும் தேவை, உலக பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவாக இருந்துள்ளது.
சீனாவின் இந்த பொருளாதார மந்தநிலை, உலக பொருளாதாரத்தை பாதித்து, அதிலும் மந்தநிலையை ஏற்படுத்தலாம் என்று சில ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
சீனப் பொருளாதாரத்தின் மீதான அழுத்தம், வரும் மாதங்களில் அதிகமாகும் என்று சீனாவின் மூத்த பொருளாதார நிபுணர் ஜுலியன் இவான்ஸ்-பிரிச்சர்ட் தெரிவித்தார்.
சீனா எதிர்கொள்ளும் சவால்கள் என்ன?
கடந்த ஓராண்டாக, அமெரிக்காவுடன் வர்த்தக போரை சீனா எதிர்கொண்டு வருவதால், அது பல தொழில்கள் மற்றும் நுகர்வோர் மத்தியில் அசாதாரண சூழலை உருவாக்கியுள்ளது.
அதே நேரத்தில் சீனா, தன் நாட்டிற்குள்ளேயே சில சவால்களை சந்திக்கிறது. உதாரணமாக பன்றிக் காய்ச்சல் அதிகம் பரவியதால், பணவீக்கம் அதிகரித்ததோடு, நுகர்வோர் செலவழிப்பதையும் குறைத்துவிட்டது. பன்றி வளர்ப்பவர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

பட மூலாதாரம், Getty Images
வரிக்குறைப்பு மற்றும் நிதி அமைப்பில் பணப் புழக்கத்தை அதிகரிப்பது போன்று அந்நாட்டு அரசு இதனை சமாளிக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
சீனாவின் பொருளாதார மந்தநிலை புதிய விஷயம் அல்ல என்கிறார் பிபிசியின் ஆசிய வணிக செய்தியாளர் கரிஷ்மா வஸ்வானி. ஆனால், இந்த மந்தநிலையை சமாளிக்க முயற்சிக்கும் கொள்கை வகுப்பாளர்களுக்கு இது ஒரு தலைவலிதான். சீனாவின் அரசியல் ஸ்திரத்தன்மை அந்நாட்டு பொருளாதாரத்தை வைத்துதான் இருக்கிறது. கடந்த 40 ஆண்டுகளாக அதைத்தான் கம்யூனிஸ்ட் கட்சி காப்பாற்றி வந்தது. அதனை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அழுத்தத்தில் அவர்கள் இருப்பதாக கூறுகிறார் கரிஷ்மா.
பிறசெய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












