கல்கி ஆசிரமம்: கணக்கில் காட்டாத வருமானம் ரூ.500 கோடி கண்டுபிடிப்பு, ரொக்கமாக 62 கோடி சிக்கியது

கல்கி பகவான்

பட மூலாதாரம், Facebook

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினத்தந்தி: கணக்கில் காட்டாத வருமானம் ரூ.500 கோடி கண்டுபிடிப்பு

கல்கி ஆசிரமங்களில் நடந்த சோதனை யில் ரூ.93 கோடி மதிப்பிலான ரொக்கம், வெளிநாட்டு பணம், தங்கம், வைர நகைகள் சிக்கியதாக வருமான வரித்துறை அறிவித்து உள்ளது என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

அந்நாளிதழ் பின்வருமாறு விவரிக்கிறது,

விஜயகுமார் என்பவர் தன்னை கல்கி பகவான் என அறிவித்துக்கொண்டு, பூந்தமல்லி அருகே கல்கி ஆசிரமத்தை தொடங்கினார்.ஆன்மிகவாதி என்ற அடையாளத்தால் பிரபலம் ஆனார்.

ஆந்திரா, கர்நாடகம் என இந்தியா முழுவதும் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் அவரது ஆசிரம கிளைகள் உதயமாயின. பக்தர்களும் பெருகினார்கள். சென்னையில் மட்டுமே 20 கிளைகள் திறக்கப்பட்டன.

காணிக்கை என்ற பெயரிலும், பூஜை கட்டணம் என்ற பெயரிலும் பணம் கொட்டோகொட்டென்று கொட்டியது. தங்க, வைர நகைகள் குவிந்தன. ஆனால் அரசுக்கு சேர வேண்டிய வரியை மட்டும் செலுத்த தயாரில்லை.

அவர் பெருமளவு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறைக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன.

அதைத் தொடர்ந்து வருமான வரி அதிகாரிகள் குழு கடந்த 16-ந் தேதி தொடங்கி ஒரே நேரத்தில் சென்னை, ஐதராபாத், பெங்களூரு, வரதய்யா பாளையம் ஆகிய பகுதிகளில் கல்கி பகவானுக்கு சொந்தமான ஆசிரமங்கள் உள்பட 40 இடங்களில் அதிரடி சோதனைகள் நடத்தினார்கள்.

இந்த சோதனைகளில் ரூபாய் நோட்டுகள் கட்டு கட்டாக சிக்கின. வெளிநாட்டு பணம் சிக்கியது. தங்க நகைகள், வைர நகைகள் கிடைத்தன. இருப்பினும் இது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில் வருமான வரி அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் என்னென்ன கைப்பற்றப்பட்டுள்ளன என்ற பட்டியலுடன் கூடிய அதிகாரப்பூர்வ அறிக்கையை வருமான வரித்துறையின் மத்திய நேரடி வரிகள் வாரியம் நேற்று வெளியிட்டது. அதில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:-

  • 40 இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.43 கோடியே 90 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.
  • வெளிநாட்டு பணம் என்ற வகையில், 2½ மில்லியன் அமெரிக்க டாலர் சிக்கியது. இதன் இந்திய மதிப்பு சுமார் ரூ.18 கோடி ஆகும்.
  • 88 கிலோ தங்க கட்டிகள், நகைகள் கைப்பற்றப்பட்டன. இதன் மதிப்பு ரூ.26 கோடி.
  • 1,271 காரட் வைரக்கற்கள் சிக்கின. இவற்றின் மதிப்பு ரூ.5 கோடி.
  • கைப்பற்றப்பட்ட ரொக்கம், அமெரிக்க டாலர், தங்கம், வைரம் ஆகியவற்றின் மொத்த மதிப்பு ரூ.93 கோடி ஆகும்.
  • கணக்கில் காட்டாத வருமானம் ரூ.500 கோடிக்கு அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கல்கி பகவான் குழுமம், இந்தியாவில் மட்டுமல்லாது சீனா, அமெரிக்கா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் உள்ள கம்பெனிகளில் பெரிய அளவுக்கு முதலீடுகள் செய்துள்ளன.

Presentational grey line
இந்தியன் ரயில்வே

பட மூலாதாரம், Getty Images

தி இந்து: ரயில்களை விரைவுபடுத்துகிறது இந்திய ரயில்வே

உள்கட்டமைப்பை முழுமையாகப் பயன்படுத்தி இனி ரயில்கள் அதிக வேகத்தில் இயக்கப்படும். இதன் காரணமாகப் பயண நேரம் குறையுமென என ரயில்வே துறை கூறி உள்ளது.

மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் அனைத்து மண்டல ரயில்வேக்கும், ரயில்களை அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்ட வேகத்தில் இயக்குமாறு அறிவுறுத்தியுள்ளார் என ரயில்வே வட்டாரங்கள் கூறுகின்றன.

ஆளில்லா லெவல் கிராசிங்குகள், இன்டர்லாக் செய்யப்படாத தண்டவாளங்கள் மற்றும் ஒரே வழியில் செயல்படும் ரயில்கள் போன்ற ரயில்களின் வேகத்தைக் குறைக்கக் காரணமான அனைத்து காரிணிகளும் விரைவாகச் சரி செய்யப்படும்.

ரயில்வே வாரியத்தின் பொது மேலாளர்கள் மற்றும் மாநில ரயில்வே மேலாளர்களிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் கடந்த வாரம் உரையாற்றிய பியூஷ் கோயல் தீ விபத்தைக் கண்டறிந்து தீயை அணைக்கும் இயந்திரங்களை விரைவாக நிறுவ அறிவுறுத்தி உள்ளார். ரயில்களின் வேகத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்துகையில், சீரற்ற காலநிலைகளில் ரயில்களை இயக்கும்போதும் போதுமான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

ரயில்வேயில் அதிகமாக ஊழியர்கள் பணியாற்றுவதால் , சில ஊழியர்களைச் செயல் முறை கடமைகளில் ஈடுபடுத்துமாறு மூத்த அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார். மேலும் "குறைந்தபட்ச ஊழியர்களைப் பயன்படுத்த வேண்டும்" என்றும் அமைச்சர் கூறி உள்ளார்.

Presentational grey line

இந்து தமிழ்: ஃபேஸ்புக் - செய்திகளின் உண்மைத் தன்மையை நாங்கள் சோதிப்பதில்லை

Facebook

பட மூலாதாரம், Getty Images

வழமையான செய்தி ஊடகங்களுக்கு மாற்றுச் சக்தியாக பேஸ்புக் உருவெடுத்துள்ளது என்று பேஸ்புக் நிறுவனத்தின் சிஇஓ மார்க் ஜூகர்பெர்க் கூறியுள்ளார்.

வழமையான செய்தி நிறுவனங்கள் அதிகார மையமாகச் செயல்பட்டு வந்தன. ஒரு சாமானிய தனி நபரின் குரலுக்கு அவை இடம் அளித்ததில்லை. பேஸ்புக்கின் வருகைக்குப் பிறகு இந்த அதிகார மையம் தகர்க்கப்பட்டு இருக்கிறது. அனைவரும் தங்கள் கருத்தை வெளிப்படுத்தும் புதிய சாத்தியத்தை உருவாக்கியுள்ளது. தற்போதைய ஜனநாயக காலத்தில் இவை மிக இன்றியமையாத மாற்றம் என்று அவர் தெரிவித்தார்.

பேஸ்புக்கில் வெளியிடப்படும் செய்திகள் போலியான தகவல் களை கொண்டிருப்பதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. குறிப்பாக அரசியல் கட்சிகள் அதன் லாபங்களுக்காக பொய்யான தகவல்களை பேஸ்புக் விளம்பரங்கள் மூலம் பரப்பி வருகின்றன, அதற்கு பேஸ்புக்கும் உடந்தையாக இருப்ப தாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், 'ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும். அவற்றை வெளிப்படுத்தும் சுதந்திரம் அவர்களுக்கு உண்டு. பொதுவாக பேஸ்புக்கில் வெளியிடப்படும் விளம் பரங்களின் நம்பகத் தன்மையை நாங்கள் சோதிப்பதில்லை. அதன் நோக்கம் அரசியல் கட்சிகளுக்கு உதவுவதற்காக இல்லை. மாறாகச் செய்திகளின் நம்பகத்தன்மையை மக்களே முடிவு செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே அவற்றைச் சோதிப்பதில்லை.

அதே சமயம் வன்முறையைத் தூண்டும் விதமாகவும், சமூகத்துக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கில் பரப்பப்படும் தகவல்களையும் நாங்கள் அனுமதிப்பதில்லை என்று அவர் கூறினார்.

Presentational grey line

தினமணி "ராஜீவ் கொலையாளிகளை விடுவிப்பதில் காங்கிரஸுக்கு ஆட்சேபணை இல்லை"

ராஜீவ் கொலை

பட மூலாதாரம், Getty Images

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரை நீதிமன்றம் விடுதலை செய்வதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றார் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரி என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

"இலங்கைத் தமிழா்களுக்கு சீமான் போன்றோர் செய்த உதவிகளைவிட காங்கிரஸ் கட்சி அதிக உதவி செய்துள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரையும் நீதிமன்றம் விடுதலை செய்வதில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. தமிழக சிறையில் 20 ஆண்டுகளைக் கடந்து எவ்வளவு போ் இருக்கிறார்கள். அப்படியிருக்கையில் 7 பேரை மட்டும் விடுவிக்க வேண்டும் என ஏன் கூறுகிறார்கள் என்றார்.

காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் காவிரி நதிநீா் ஆணையம் கலைக்கப்படும். கா்நாடகத்தில் மேக்கேதாட்டு அணை கட்ட அனுமதி வழங்கப்படும் என ராகுல் காந்தி கூறியிருப்பதாக துணை முதல்வா் குற்றம்சாட்டியிருக்கிறாரே என கேட்டபோது, 'அப்படி ராகுல்காந்தி சொல்லவில்லை. அதை ஓ.பன்னீா்செல்வம் நிரூபித்தால் எனது பதவியை ராஜிநாமா செய்ய தயார். ஒருவேளை நிரூபிக்க தவறினால் ஓ.பன்னீா்செல்வம் தனது பதவியை ராஜிநாமா செய்வாரா" என்று அழகிரி பேசியதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

Presentational grey line

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'தண்ணீர் பற்றாக்குறையே டெங்கு பரவுவதற்குக் காரணமா?'

'தண்ணீர் பற்றாக்குறையே டெங்கு பரவுவதற்குக் காரணமா?'

பட மூலாதாரம், Science Photo Library

டெங்குவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டம் திருவள்ளூர். திருவள்ளூரில் தண்ணீர் பிரச்சனையைச் சமாளிக்க மக்கள் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரைப் பாத்திரங்களிலும் பானைகளிலும் சேமிக்கத் துவங்கினர். ஆனால் அவர்கள் டெங்கு கொசுக்களை உற்பத்தி செய்யும் சூழலை உருவாக்குகிறார்கள் என்பதை அறியவில்லை என்கிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி.

டெங்குகாய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போதிய விழிப்புணர்வு இல்லாமல் தண்ணீரைச் சேமித்து வைக்கின்றனர் என்று சுகாதாரத்துறை ஊழியர்கள் குடியிருப்புவாசிகள் மீது குற்றம்சாட்டுகின்றனர். திருமுல்லைவாயில் பகுதியில் தெருக்கள் முழுவதும் பிளாஸ்டிக் டிரம்களில் மக்கள் தண்ணீரைச் சேமித்து வைத்துள்ளனர். குடிநீருக்குத் தண்ணீரை விலைக்கு வாங்குவதாகவும் அன்றாட தேவைகளுக்குத் தண்ணீர் லாரிகளில் வரும் தண்ணீரை சேமித்து வைப்பதாகவும் அப்பகுதியில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். தமிழ்நாட்டில் மொத்தம் 3400 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர், கடந்த மூன்று நாட்களில் நான்கு குழந்தைகள் டெங்குவால் உயிரிழந்துள்ளனர். திருவள்ளூரில் மட்டும் சுமார் 50 பேர் டெங்குகாய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் .

- இவ்வாறாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :