ஃபேஸ்புக்: "அரசியல்வாதிகள் பதிவுகளை உண்மை சரிபார்ப்பு செய்யமாட்டோம்" மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், Reuters
அரசியல்வாதிகளால் பதிவிடப்படும் அனைத்து இடுகைகளையும் "செய்திக்குரிய உள்ளடக்கம்" என்று கருதுவதாக ஃபேஸ்புக் கூறுகிறது.
போலிச் செய்திகளின் பரவலை தடுப்பதற்காக தாங்கள் முன்னெடுத்துள்ள செய்தியின் உண்மைத்தன்மையை கண்டறியும் திட்டத்தில் அரசியல்வாதிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதாவது, அரசியல் சார்ந்த விவாதங்களில் நடுவராகவும் மற்றும் அரசியல்வாதிகள் தங்களது விருப்பத்திற்கேற்றவர்களை தங்களது பதிவுகளின் மூலம் சென்றவடைவதை தடுக்கும் வகையிலும் தாங்கள் இருக்க விரும்பவில்லை என்று ஃபேஸ்புக் மேலும் தெரிவித்துள்ளது.
இருப்பினும், அரசியவாதிகள் என்னும் பட்டியலுக்குள் யாரெல்லாம் வருகிறார்கள் என்பது குறித்த தெளிவான விளக்கத்தை ஃபேஸ்புக் வெளியிடவில்லை.

"நீட் தேர்வில் ஆள் மாறாட்டத்திற்கு ரூ. 20 லட்சம்" - விசாரணையில் அதிர்ச்சி தகவல்

பட மூலாதாரம், Getty Images
நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேர்ச்சியடைந்த மாணவரின் தந்தை பயிற்சி மையத்திற்கு 20 லட்ச ரூபாய் கொடுத்து ஆள் மாறாட்டம் செய்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து மேலும் சில ஆள்மாறட்டப் புகார்கள் எழுந்துள்ளன.
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருபவர் டாக்டர் வெங்கடேசன். இவரது மகன் உதித் சூர்யா, இந்த ஆண்டு தேனி மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் இளங்கலை மருத்துவப் படிப்பில் (எம்பிபிஎஸ்) சேர்ந்தார்.
இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 17ஆம் தேதியன்று அதே கல்லூரியைச் சேர்ந்த மாணவர் ஒருவரிடமிருந்து ஊடகங்களுக்கு மின்னஞ்சல் ஒன்று வந்தது. அஷோக் என்பவர் அனுப்பிய அந்த மின்னஞ்சலில், உதித் சூர்யா நீட் தேர்வை எழுதவில்லையென்றும் அவருக்குப் பதிலாக வேறொருவர் அந்தத் தேர்வை எழுதியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

நாம் தமிழர் சீமான் நேர்காணல்

"பசுமாடு, பக்கத்து நாடு, ஜெய் ஸ்ரீராம்," இவைதான் ஆளும் அரசின் மூன்று கோஷங்கள் எனக் கூறினார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.
"காஷ்மீருக்கு நீதி கேட்கும் ஒன்றுகூடல்" என்ற தலைப்பில் இன்று (வியாழக்கிழமை) டெல்லியில் பேரணி நடைபெற்றது.
சிரோன்மணி அகாலி தளம் (அமிர்தசரஸ்) முன்னெடுத்த இந்த பேரணியில் தமிழகத்திலிருந்து நாம் தமிழர் கட்சி, தமிழ்த் தேசியப் பேரியக்கம் உள்ளிட்ட அமைப்புகள் பங்கேற்றன.
பேரணிக்குப் பின்பு பிபிசி தமிழிடம் பேசிய சீமான், "பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு குறித்துப் பேசும் நீங்கள், ஏன் சீனா ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து பேசுவதில்லை?" என்று கேள்வி எழுப்பினார்.

இந்திய ரயில்வே தனியார் வசம் தாரை வார்த்து கொடுக்கப்படுகிறதா?

பட மூலாதாரம், EPA
இந்தியாவின் முக்கிய ரயில் வழித்தடங்களில் தனியார் மூலம் ரயில்களை இயக்கத் இந்திய ரயில்வேதுறை திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இன்று (வெள்ளிக்கிழமை) டெல்லியில் நடக்கவுள்ள ரயில்வே அமைச்சக கூட்டத்தில் இது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் கட்டமாக நாட்டில் சில முக்கிய வழித்தடங்களில் செல்லும் ரயில்களை தனியார் மூலம் இயக்க திட்டம் உள்ளதாகவும், பிறகு பல பெருநகரங்களுக்கும் இந்த திட்டம் விரிவாக்கப்படும் என்று கூறப்படுகிறது.
விரிவாக படிக்க:தனியார் வசம் தாரை வார்க்கப்படுகிறதா இந்திய ரயில்வே?

திறந்த வெளியில் மலம் கழித்ததால் தலித் சிறுவர்கள் அடித்துக் கொலை

பட மூலாதாரம், SHURIAH NIAZI
திறந்த வெளியில் மலம் கழித்துக் கொண்டிருந்த இரு தலித் சிறுவர்களை அடித்துக் கொன்றதாக மத்தியப்பிரதேச மாநிலத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அந்த மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.
தங்கள் வீட்டில் கழிவறை வசதி இல்லை என்று 12 வயதாகும் ரோஷினி மற்றும் 10 வயதாகும் அவினாஷ் ஆகிய இருவரின் குடும்பத்தினர் பிபிசி இந்தி சேவையிடம் தெரிவித்துள்ளனர்.
"தினக்கூலித் தொழிலாளியான என்னால் வீட்டில் கழிவறை கட்ட இயலவில்லை. ஏழைகளுக்கு கழிவறை கட்ட அரசு வழங்கும் மானியத்தையும் என்னால் பெற இயலவில்லை," என்று அவினாஷின் தந்தை மனோஜ் கூறியுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












