'மனித உரிமை' வழங்கப்பட்ட ஒராங்குட்டான் விலங்கு காட்சியகத்தில் இருந்து விடுதலை

மனிதக் குரங்கு வகையைச் சேர்ந்த ஒராங்குட்டான் ஒன்றுக்கு அர்ஜென்டினா நீதிமன்றம் 2014ல் 'மனிதர் அல்லாத ஆள்' என்ற தகுதியை வழங்கியதுடன், மனிதர்களுக்கு உள்ளதைப் போன்ற சட்ட உரிமைகள் அதற்கு இருப்பதாகவும் தீர்ப்பளித்தது.

இதையடுத்து, அர்ஜென்டினா நாட்டு விலங்கு காட்சியகத்தில் 20 ஆண்டுகள் இருந்த சாண்ட்ரா என்ற அந்த ஒராங்குட்டான், அமெரிக்காவில் உள்ள விலங்குகள் சரணாலயம் ஒன்றில் விடப்படுவதற்காக கொண்டு செல்லப்படுகிறது.

2014ல் வழங்கப்பட்ட இந்த புகழ்பெற்ற தீர்ப்பின் மூலம் அந்நாட்டின் முதல் 'மனிதர் அல்லாத ஆள்' என்ற தகுதியையும், சுதந்திர உரிமையையும் பெற்றது அந்த ஒராங்குட்டான்.

33 வயதுடைய அந்த ஒராங்குட்டான் கன்சாஸ் நகருக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. பரிசோதனைகளுக்குப் பிறகு அது அமெரிக்காவின் ஃபுளோரிடா காடுகளுக்கு செல்லும்.

"விலங்குகள் உணர்வுள்ளவை. அவற்றை மதிக்கவேண்டும் என்ற நமது கடமை அவற்றின் உரிமை" என்று குறிப்பிட்டார் இந்த தீர்ப்பை அளித்த நீதிபதி எலனா லிபரேட்டோரி. அவர் தமது அறையில் சான்ட்ரா ஒராங்குட்டான் புகைப்படம் ஒன்றை வைத்துள்ளார்.

கிழக்கு ஜெர்மனியின் விலங்கு காட்சியகம் ஒன்றில் பிறந்த சான்ட்ரா 1995-ம் ஆண்டு புய்னஸ் ஏர்ஸ் நகரில் உள்ள விலங்கு காட்சியகத்துக்கு விற்பட்டது. தன் வாழ்வின் பெரும்பான்மை காலத்தை தனிமையான கூண்டில் கழித்த சான்ட்ராவுக்கு 1999ல் ஒரு மகள் பிறந்தாள். அந்த குட்டி எடுத்துச் செல்லப்பட்டு சீனாவில் உள்ள ஒரு விலங்கு காட்சியகத்துக்கு விற்கப்பட்டது.

சட்டப் போராட்டத்தில் சான்ட்ரா பெற்ற வெற்றி அதற்கு உலகப் புகழைத் தேடித்தந்தது. இதன் மூலம் மனிதக் குரங்குகள் சட்டப்படி சொத்துகளாக அல்லாமல் ஆள்களாக நடத்தப்படுவதற்கான முன்னுதாரணம் ஏற்பட்டது.

அந்த தீர்ப்பு வந்த பிறகு ஐந்து ஆண்டுகளாக விலங்கு காட்சியகம் இருந்த இடத்திலேயே இருந்தது சான்ட்ரா. விலங்குகளுக்கு கொடுமை இழைக்கப்படுவதாக வந்த புகாரை அடுத்து அந்த காட்சியகம் மூடப்பட்டது. தற்போது விலங்குகளின் வாழ்க்கை சூழ்நிலைகளை மேம்படுத்தி அது ஒரு சூழலியல் பூங்காவாக மாற்றியமைக்கப்படுறது.

2017-ம் ஆண்டு சான்ட்ராவை ஃபுளோரிடா சென்டர் ஃபார் கிரேட் ஏப்ஸ் என்ற சரணாலயத்துக்கு அனுப்பும்படி ஒரு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அமெரிக்காவுக்கு கொண்டுசெல்வதற்கான அனுமதிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால் மேலும் இரண்டாண்டுகள் சான்ட்ரா காத்திருக்கவேண்டி இருந்தது.

100 ஏக்கர் வீடு

தற்போது சான்ட்ரா குடிபெயர உள்ள 100 ஏக்கர் சரணாலயத்தில் சர்க்கஸ்கள், விலங்கு காட்சியகங்கள், ஆய்வகங்கள், தனிப்பட்ட விலங்கு வளர்ப்போர் இடங்கள் ஆகியவற்றில் இருந்து விடுவிக்கப்பட்ட ஒராங்குட்டான்கள், சிம்பன்சிகள் தற்போது வாழ்கின்றன. மைக்கேல் ஜாக்சனின் செல்லப்பிராணியாக இருந்த சிம்பன்ஸி, பபிள்கள் ஆகியவை இந்தக் காட்டில் தற்போதுள்ள புகழ் பெற்ற 'நபர்கள்'. சான்ட்ரா தவிர இந்தக் காட்டில் 21 ஒராங்குட்டான்கள் இருக்கின்றன.

"நாங்கள் சான்ட்ராவை சந்திக்க ஆவலோடு இருக்கிறோம். அவள் ஒரு அழகான ஒராங்குட்டான்" என்று தெரிவித்துள்ளார் இந்த சரணாலயத்தின் நிறுவனர் பட்டி ரகன்.

சான்ட்ராவின் கதை அழியும் நிலையில் உள்ள ஒராங்குட்டான்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியிருப்பது மகிழ்ச்சி என்கிறார் பட்டி ரகன்.

சான்ட்ராவின் வருகையால் ஏற்பட்டுள்ள புகழ் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாமல், அந்த ஒராங்குட்டான் அமைதியாக வாழ்வதை உறுதி செய்ய சரணாலயம் பாடுபடுவதாகவும் அவர் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :