HowdyModi: காஷ்மீர், தீவிரவாதம், என்பிஏ - மோதி, டிரம்ப் உரைகளில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்

HowdyModi: டிரம்ப், மோதி உரைகளில் முக்கிய அம்சங்கள் என்ன?

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் வெளிநாட்டுத் தலைவர் ஒருவருக்கு ஆதரவாக மிக அபூர்வமாக நடைபெற்ற பெரும் பேரணியில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆகிய இரு தலைவர்களும் தங்களின் நட்பை இனிதாகப் பகிர்ந்து கொண்டனர்.

டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ஏறக்குறைய 50,000 பேர் திரண்டிருந்தனர். இந்த நிகழ்ச்சியை ஓர் அற்புதமான வரலாற்று நிகழ்வு என்று டொனால்ட் டிரம்ப் வர்ணித்தார்.

அமெரிக்காவுக்கு வருகை தரும் வெளிநாட்டுத் தலைவர் ஒருவருக்குத் தரப்பட்ட மிகப்பெரிய வரவேற்பு நிகழ்வாக 'ஹௌடி மோடி' நிகழ்ச்சி அமைந்ததாகக் கூறப்படுகிறது.

#HowdyModi:

பட மூலாதாரம், Getty Images

மோதி மற்றும் டிரம்ப் ஆகிய இரு தலைவர்களும் உரையாற்றுவதற்கு முன்பு 400 கலைஞர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் கிட்டத்தட்ட 90 நிமிடங்களுக்கு நடைபெற்றது. இந்தியப் பாரம்பரிய இசை மற்றும் நடன நிகழ்வுகளும் இந்த நிகழ்ச்சியில் இடம்பெற்றன.

HowdyModi: டிரம்ப், மோதி உரைகளில் முக்கிய அம்சங்கள் என்ன? - விரிவான தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images

''அமெரிக்காவின் மிக நெருங்கிய மற்றும் நம்பகமான நண்பர்களில் ஒருவரான இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியுடன் டெஸ்சாஸில் இந்த நிகழ்வில் பங்கேற்பதில் மிகப் பெருமை கொள்கிறேன்'' என்று டிரம்ப் தனது உரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டார்.

மோதி மற்றும் டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

அண்மையில் இந்தியாவில் நடந்த உலகின் மிகப்பெரிய தேர்தலில் 600 மில்லியன் மக்கள் ஆதரவைப் பெற்று ஆட்சிக்கு வந்தவர் மோதி என்று டிரம்ப் கூறினார்.

கடந்த 10 ஆண்டுகளில் 30 கோடி மக்களை வறுமையிலிருந்து இந்தியா மீட்டுள்ளது அளப்பரியது என்று டிரம்ப் பேசினார்.

உலகின் சிறந்த பொருட்கள், சேவைகள் இந்தியாவில் கிடைக்க நாங்கள் முயற்சி எடுத்து வருகிறோம் என்று குறிப்பிட்ட டிரம்ப், இந்தியாவில் என்பிஏ பேஸ்கட்பால் போட்டி நடக்கவுள்ளது. மும்பையில் நடைபெறும் முதல் போட்டிக்கு எனக்கு அழைப்புண்டா?'' என்று டிரம்ப் வினவினார்.

அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளும் தங்கள் எல்லையைப் பாதுகாக்க வேண்டும்.எல்லை பாதுகாப்பு இரண்டு நாட்டிற்கும் முக்கியமானது ஆகும். அமெரிக்காவின் எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல்தான் இந்தியாவும் தனது எல்லைகளைப் பலப்படுத்தி உள்ளது என்று டிரம்ப் மேலும் கூறினார்.

தனது உரையில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் இந்தியாவுக்கு ஓர் உற்ற தோழமை உள்ளது என்றும் மிக ஆக்கப்பூர்வமான, நட்பான மற்றும் சக்திவாய்ந்த நபராக டொனால்ட் டிரம்ப் திகழ்கிறார் என்றும் நரேந்திர மோதி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

''ஒரு நிறுவனத்தின் தலைவராக இருந்தது முதல் நாட்டின் அதிபர் வரை, அலுவலக சந்திப்பு அறைகள் முதல் ஓவல் அலுவலகம் வரை, தான் பணியாற்றிய இடங்களில் எல்லாம் டொனால்ட் டிரம்ப் தனது முத்திரையைப் பதித்துள்ளார்'' என்று நரேந்திர மோதி கூறினார்.

"இந்தியாவில் இது ஒரு ஞாயிறு பின்னிரவு என்றாலும் கோடிக்கணக்கான மக்கள் இந்த நிகழ்வைத் தொலைக்காட்சி மூலம் பார்த்துக்கொண்டுள்ளனர்," என்று கூறிய மோதி, டிரம்பை நோக்கி "அதிபர் அவர்களே 2017இல் உங்கள் குடும்பத்தை எனக்கு அறிமுகம் செய்தீர்கள். இப்போது நான் என் குடும்பத்தை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன். அதில் 100 கோடிக்கும் மேலானவர்கள் இருக்கிறார்கள்," என்று மோதி கூறினார்.

மோதி மற்றும் டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

"ஒரு சிறப்பான நபர் இன்று நம்மிடையே உள்ளார். அவர் இந்த புவியின் அரசியலைத் தீர்மானிக்கும் நிலையில் உள்ளார். அவரை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கிறது. அவரைச் சந்திக்கும்போதெல்லாம் எனக்கு உற்சாகம் பிறக்கிறது," என்று கூறினார்.

காஷ்மீர் பிரச்சனை குறித்து மோதி கூறியது என்ன?

''அமெரிக்காவில் நடந்த செப்டம்பர் 11 தாக்குதல் சம்பவம் மற்றும் இந்தியாவில் நடந்த நவம்பர் 26 தாக்குதல் சம்பவம் என்று எதுவாக இருந்தாலும், சதிகாரர்கள் ஒரு நாட்டிலிருந்து வந்துள்ளார்கள்'' என்று நரேந்திர மோதி தனது பேச்சில் குறிப்பிட்டார்.

தீவிரவாதத்திற்கும் தீவிரவாதத்தை ஊக்குவிப்பவர்களுக்கும் எதிராக ஒரு தீர்க்கமான போருக்கான நேரம் வந்துவிட்டது எனப் பிரதமர் மோதி பேசினார்.

அதேபோல் காஷ்மீரில் அண்மையில் ரத்து செய்யப்பட்ட 370 சட்டப்பிரிவு குறித்தும் மோதி பேசினார்.

மோதி மற்றும் டிரம்ப்

பட மூலாதாரம், ANI

'' காஷ்மீரில் அண்மையில் 370 சட்டப்பிரிவை ரத்து செய்தது ஒரு சிலருக்குச் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் தங்கள் நாட்டை முறையாக நிர்வகிக்கத் தெரியாதவர்கள். தங்கள் பகுதியில் தீவிரவாதத்தைப் பாதுகாத்து வளர்ப்பவர்கள் இவர்கள்'' என்று எந்த நாட்டின் பெயரையும் குறிப்பிடாமல் மோதி பேசினார்.

முன்னதாக, மோதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து 'ஹிந்துஸ் ஃபார் ஹியூமன் ரைட்ஸ்,' காஷ்மீர் மற்றும் காலிஸ்தான் பிரிவினைவாத ஆதரவு அமைப்புகள், இந்திய - அமெரிக்க இஸ்லாமியர்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மோதியின் 'ஹௌடி மோடி!' நிகழ்ச்சி நடைபெறும் என்.ஆர்.ஜி உள்விளையாட்டு அரங்கை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.

நிகழ்ச்சி தற்போது தொடங்கியுள்ள நிலையில் மோதிக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அவர்களில் பெரும்பாலானவர்கள் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிரான பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :