பருவநிலை மாற்றம்: இந்தியா உட்பட 150 நாடுகளில் மாணவர்கள் போராட்டம்

டெல்லி பருவநிலைப் போராட்டம்.
படக்குறிப்பு, டெல்லி பருவநிலைப் போராட்டம்.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான பள்ளி மாணவர்கள் பருவநிலை மாற்றத்தைத் தடுக்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி முன்னெடுத்த போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) உலகெங்கும் தொடங்கியது.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென்கொரியா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பல மாணவர்கள் இந்த புறக்கணிப்பு போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.

நியூயார்க்கில் நடைபெறும் புவி வெப்பமயமாதலுக்கு எதிர் நடவடிக்கைகள் தொடர்பான பேரணியில் கலந்துகொள்ள கிட்டத்தட்ட 10 லட்சம் பள்ளி மாணவர்கள் தங்கள் வகுப்புகளை புறக்கணிக்க உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

உலகெங்கிலும் நடைபெறும் இந்த பள்ளி புறக்கணிப்பு போராட்டத்தில் பல மில்லியன் மாணவர்கள் கலந்து கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்வீடனைச் சேர்ந்த பள்ளி மாணவி கிரேட்டா தன்பர்க், உலக வெப்பமயமாதலுக்கு எதிராக அரசுகள் நடவடிக்கைகள் எடுக்கக் கோரி தங்கள் நாட்டின் நாடாளுமன்றம் முன்பு வாரம் தோறும் இதற்காக போராட்டம் நடத்தி வந்தார்.

சமூக வலைதளங்கள் மூலம் கடந்த சில மாதங்களாகவே இந்தப் போராட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது.

மேலும், இந்த ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசுக்கு கிரேட்டா தன்பர்க் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

16 வயதாகும் பள்ளி மாணவி கிரேட்டா தன்பர்க்

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, 16 வயதாகும் பள்ளி மாணவி கிரேட்டா தன்பர்க்

முன்னதாக, 2017இல் கையெழுத்திடப்பட்ட பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில், தொழில் வளர்ச்சி தொடங்கிய காலகட்டத்தில் நிலவிய வெப்பநிலையைவிட இரண்டு டிகிரி செல்ஸியஸ் (2.0C) வெப்பத்துக்கு மிகாமல், புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்த 200க்கும் மேலான உலக நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.

இந்த இலக்கை அடைய கடுமையான முயற்சிகள் தேவை என அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

பருவநிலை மாற்றத்தை எதிர்த்து டெல்லியில் நடந்த மாணவர் போராட்டம்

பருவ நிலை மாற்றத்தை தடுக்க வலியுறுத்தி உலக அளவில் நடந்த மாணவர் போராட்டத்தின் ஒரு பகுதியாக டெல்லி லோதி கார்டன் பகுதியில் பெருமளவில் மாணவர்கள் திரண்டனர்.

டெல்லி பருவநிலைப் போராட்டம்.
படக்குறிப்பு, டெல்லியில் நடந்த பருவநிலைப் போராட்டம்.

மத்திய கால ஆட்சியாளர்களின் நினைவிடங்கள் நிரம்பிய இந்தப் பகுதியில் நடந்த போராட்டத்தில் தொடக்கத்தில் சில டஜன் மாணவர்களே இருந்தனர். பிறகு நூற்றுக்கணக்கானவர்கள் குவியத் தொடங்கினர்.

இந்தப் போராட்டத்தில் பங்கேற்ர 23 வயது மாணவியான பணாஸ்ரீ தபா கூறும்போது "நான் ஒரு வனச்சரகரின் மகள். பாதுகாப்பதற்கு எதுவுமே இல்லாமல் போனால் என் தந்தை எதைப் பாதுகாப்பார்?" என்றார்.

"இது பருவநிலை மாற்றத்தையும் கடந்த ஒரு விஷயம். இது இயற்கையின் கோபம். இந்தக் கோபம் நம்மை நோக்கி வருகிறது. அதனால்தான் நான் இங்கு வந்தேன்" என்று அவர் கூறினார்.

இப்போதே நடவடிக்கை தேவை என்பதே தனது கோரிக்கை என்று கூறினார் 20 வயது மாணவி சம்ரா ஷாசாத். இவர் தம்மை பருவநிலை செயற்பாட்டாளர் என்று கூறிக்கொள்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :