ராபர்ட் முகாபே - வெள்ளையர் ஆட்சியை அகற்றி ஜிம்பாப்வே அதிபரான முன்னாள் கொரில்லா போராளி மரணம்

ராபர்ட் முகாபே

பட மூலாதாரம், DESMOND KWANDE

ஜிம்பாப்வே விடுதலைக்கு பின் அந்நாட்டின் ஆட்சிக்கு வந்த முதல் தலைவரான ராபர்ட் முகாபே தனது 95வது வயதில் மரணமடைந்தார்.

நீண்டகாலம் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த அவர் இன்று இறந்ததாக அவரது குடும்பத்தினர் பிபிசியிடம் உறுதி செய்துள்ளனர்.

1924ஆம் ஆண்டு பிப்ரவரி 21 அன்று ரோடேசியாவில் (ஜிம்பாப்வேயின் முன்னாள் பெயர்) அவர் பிறந்தார். ஜிம்பாப்வே 1980-ல் சுதந்திரம் பெற்றதில் இருந்து 2017 வரை 37 ஆண்டு காலம் முகாபே அதிபராக இருந்தார்.

ஜிம்பாப்வே விடுதலை பெற்றபின் நாயகனாக அந்நாட்டு மக்களால் கொண்டாடப்பட்ட முகாபே தனது ஆட்சியின் இறுதி காலத்தில் ஊழல் மிக்க சர்வாதிகாரியாகப் பார்க்கப்பட்டார்.

Robert Mugabe

பட மூலாதாரம், Getty Images

யார் இந்த ராபர்ட் முகாபே?

மிஷன் பள்ளி ஒன்றில் கல்வி பயின்ற ராபர்ட் கபிரியேல் முகாபே, நெல்சன் மண்டேலா கல்வி கற்ற ஃபோர்ட் ஹாரே பல்கலைக்கழகத்தில் இருந்து பட்டம் பெற்று ஆசிரியராக பயிற்சி பெற்றார். 1958ஆம் ஆண்டு பணிபுரிவதற்காக அவர் கானா சென்றார்.

அங்கு சால்லி ஹாஃபிரோனை சந்தித்த முகாபே, 1961 ஆம் ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டார். கறுப்பு தேசியவாதிகளின் தேர்வாக அவர் மாறும் முன்பு வரை, முகாபேயை விட சால்லி ஹாஃபிரோன் அதிக அரசியல் ஈடுபாடு உடையவராக இருந்தார்.

1974ஆம் ஆண்டு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், ஜோசுவா நகோமோடு மக்கள்தொகையில் சிறுபான்மையினராக இருந்த வெள்ளையரின் ஆட்சிக்கு எதிராக கொரில்லா போர் தொடுக்கும் தலைவர்களில் ஒருவராக பிரபலமானார்.

Robert Mugabe

பட மூலாதாரம், AFP

பிரிட்டிஷாரால் நடத்தப்பட்ட அமைதி பேச்சுவார்த்தையில் ஆயுதங்களை களைய அவர்கள் ஒப்புக்கொண்டனர். நாட்டுப்பற்று முன்னணி கட்சியை உருவாக்கிய அவர்கள் 1980 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற தேர்தல்களில் அமோக வெற்றி பெற்று மேற்குலக பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினர்.

10 ஆண்டுகள் நாடு கடந்து வாழ்ந்த பின்னர், தேர்தலுக்கு 6 வாரங்களுக்கு முன்னர்தான் ராபாட் முகாபே ஜிம்பாப்வே வந்தடைந்திருந்தார். ஒருங்கிணைந்த அரசை உருவாக்கிய அவர், நாட்டின் பிரதமராக மாறினார்.

அவர் பிரதமர் பதவி வகித்த தொடக்க ஆண்டுகளில், உலக நாடுகளின் தலைவர்கள் அவரைச் சந்தித்தனர். 1986ல் அந்நாட்டுக்கு பயணம் மேற்கொண்ட கியூபா அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோவும் அதில் ஒருவர்.

ஃபிடல் காஸ்ட்ரோ

பட மூலாதாரம், AFP

பிரிட்டன் பிரதமர் மார்க்ரெட் தாட்சருடனும் அவர் நெருங்கிய நட்புறவு கொண்டிருந்தார். தொடக்கத்தில் தன்னுடைய வெள்ளையின எதிரிகளின் பொருளாதார செல்வத்தை அவர்களே வைத்திருக்க அனுமதிக்கும் ஒப்புரவு கொள்கையை கொண்டிருந்தார்.

தன்னுடைய முதல் மனைவி இறந்த சில ஆண்டுகளுக்கு பின்னர் 1996இல், தன்னுடைய தட்டச்சு பணியாளரான கிரேஸ் மாருஃபுவை முகாபே திருமணம் செய்து கொண்டார். முகாபேவுக்கும் கிரேஸ் மாருஃபுக்கும் ஏற்கெனவே இரண்டு குழந்தைகள் இருந்தனர்.

1997ஆம் ஆண்டு சர்ச்சைக்குரிய நில சீர்திருத்தத்துக்கு நிதி ஆதரவு அளிக்கும் பேச்சுவார்த்தையில் இருந்து டோனி பிளேர் தலைமையிலான பிரிட்டன் அரசு விலகிக் கொண்டபோது, மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் புதிய அரசியல் சாசனம் தொடர்பாக மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் முகாபே தோல்வியடைந்த பின்னர், வெள்ளையர்கள் வைத்திருந்த பண்ணைகளை முகாபே ஆதரவுப் ஆயுதப்படையினர் கைப்பற்றத் தொடங்கினர்.

இந்த நேரத்தில்தான், முகாபே சாவில்லி ரோ சூட்டையும், சஃபாரி சூட்டையும் கைவிட்டு, பரப்புரை பயணத்தின்போது தமது முகம் பொறித்த பிரகாசமான வண்ண உடையணிந்து வலம் வருபவராக மாறினார்.

ராபர்ட் முகாபே

பட மூலாதாரம், AFP

இதுவே ஓர் தனி நபர் வழிபாடாக உருவானது. அவருடைய ஒவ்வொரு பிறந்த நாளின்போது, ஆளும் ஸானு-பிஎஃப் கட்சியால் பெரிய கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.

அவற்றில் ஆடம்பரமான கேக்குகளும் அடங்கின. வெள்ளையின விவசாயிகளுக்கு எதிராக தன்னுடைய நிலைப்பாட்டில், அவரை கதாநாயகனாக எத்தனை ஆப்ரிக்கர்கள் மெச்சினர் என்பதை இது பிரதிபலித்தது.

இருப்பினும், அவருடைய புகழ், குறிப்பாக நகர்ப்புறங்களில் சீராக குறைந்தது. 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் சுற்று அதிபர் தேர்தலில் அவர் தோல்வியடைந்தார். வன்முறை நடைபெறுவதை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சியான எம்டிசி கட்சி பின்வாங்கியதற்கு பின்னர் நடைபெற்ற இரண்டாவது சுற்று தேர்தலில் அவர் வெற்றியடைந்தார்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் விதிக்கப்பட்ட தடைகளால், முதலீட்டுக்காக சீனா எதிர்நோக்கும் "கிழக்கத்திய பார்வை" கொள்கைக்கு முகாபேயை வழிநடத்தியது. மருத்துவ சிகிச்சைக்காக அவர் ஆசியாவுக்கு பயணம் மேற்கொள்வதுண்டு. அவரது மகள் போனா ஹாங்காங்கிலும், சிங்கப்பூரிலும் கல்வி கற்றார்.

நான்கு ஆண்டுகளாக நடத்திய ஓர் அதிகார பகிர்வு அரசாங்கத்திற்கு பிறகு, கறுப்பின ஜிம்பாப்வே மக்களுக்கு பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தும் உரிமையை வழங்குவது என்ற உள்நாட்டு கொள்கையை மையமாக வைத்து 2013ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஸானு-பிஎஃப் கட்சி வெற்றிபெற்றது.

நீண்ட காலம் பதவியில் இருந்ததாக பலரால் விமர்சிக்கப்பட்டார் முகாபே. 2015ஆம் ஆண்டு முகாபேயின் 91-வது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் ஆடம்பர ஹோட்டல் ஒன்றில் நடந்தன.

இதன்போது யானைகள் பல வெட்டி பலியிடப்பட்டன. பெரிய அளவிலான கேக்குகளும் வெட்டப்பட்டன.

முதலாளித்துவம் மற்றும் காலனித்துவத்தை எதிர்த்து போராடுவதாக அக்கட்சி கூறி வந்தது. எனினும் அந்நாட்டின் பொருளாதார பிரச்சனைகள் அக்கட்சியின் தீவிரமான ஆதரவாளர்களையும் சோதித்திருக்கிறது.

தம் "புரட்சி" முடிந்தால்தான் பதவி விலகுவேன் என முகாபே அடிக்கடி கூறுவார். ஆனால் தனக்கு பிறகு யார் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்று தாம்தான் முடிவெடுக்க வேண்டும் என்ற எண்ணமும் அவருக்கு இருந்தது.

ராபர்ட் முகாபே உடன் அவரது மனைவி கிரேஸ் முகாபே

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, ராபர்ட் முகாபே உடன் அவரது மனைவி கிரேஸ் முகாபே

முகாபேக்கு உறுதுணையாக பாதுகாப்பு படைப்பிரிவுகள் இருந்தன. அவருடைய மனைவி கிரேஸ் முகாபே நாட்டின் அதிகாரத்தை கைப்பற்ற நினைத்ததை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே 2017 நவம்பர் 15ஆம் தேதி ஜிம்பாப்வே ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.

மக்கள் பெருங்கூட்டமாக ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட பின்னர், பதவியை நீக்க நாடாளுமன்றம் நடைமுறைகளைத் துவங்கிய நிலையில் 93 வயதாகி இருந்த தலைவர் பணிந்தார். 37 ஆண்டுகள் பதவியில் இருந்த பிறகு அவர் தாமாக பதவி விலகினார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: