ப. சிதம்பரம் அடைக்கப்பட்டுள்ள திகார் சிறையில் எத்தனை கைதிகள்?

பட மூலாதாரம், Getty Images
இந்திய நாளிதழ்களில் வெளியான சில முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.
தி இந்து - ஆசியாவின் மிகப்பெரிய திகார் சிறையில் 17,400 கைதிகள்

பட மூலாதாரம், FOTOKITA
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கிலும் கைதாகியுள்ள இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் அடைக்கப்பட்டுள்ள டெல்லி திகார் சிறையில் மொத்தம் 17,400 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 14,000 பேர் விசாரணைக் கைதிகள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆசியாவின் மிகப்பெரிய சிறை வளாகமான திகார் சிறை வளாகத்தில் 16 சிறைகள் உள்ளன.
சிதம்பரம் அடைக்கப்பட்டுள்ள சிறை எண். 7இல் கடந்த ஆண்டு கைதான அவரது மகன் கார்த்தி சிதம்பரமும் 12 நாட்கள் அடைக்கப்பட்டிருந்தார்.

தினமலர்: கங்கைபோல காவிரி தூய்மை பணி...டில்லியில் அதிகாரிகள் ஆலோசனை

பட மூலாதாரம், DIBYANGSHU SARKAR
கங்கையை போல காவிரியை துாய்மைப்படுத்துவது குறித்து, மத்திய ஜல்சக்தி அமைச்சக அதிகாரிகளுடன், தமிழக பொதுப்பணித் துறையினர், ஆலோசனை நடத்தியதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
கர்நாடக மாநிலம், குடகு மாவட்டத்தில் உற்பத்தியாகும் காவிரி ஆறு, தமிழகத்தில், 416 கி.மீ.,க்கு பயணிக்கிறது. காவிரியால், டெல்டா மாவட்டங்களின் பாசன தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களின் குடிநீர் தேவை பூர்த்தியாகிறது.கழிவுநீர்கர்நாடக மாநிலத்தில் உள்ள, பல நகர பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், காவிரியில் கலந்து வருகிறது. இது தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
டெல்டா மாவட்டங்களிலும், பல இடங்களில் கழிவு நீரோட்டம் காரணமாக, காவிரி பாதிக்கப்பட்டு வருகிறது.எனவே, ஏற்கனவே முதல்வர் அறிவித்தபடி, 'நடந்தாய் வாழி காவிரி' என்ற திட்டத்தின் கீழ், காவிரியை துாய்மைப்படுத்தும் திட்டத்திற்கு செயல்வடிவம் கொடுக்கும் பணிகளை, பொதுப்பணித் துறை துவங்கியுள்ளது.இதற்காக, பொதுப்பணித் துறை செயலர், மணிவாசன், நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர், ராமமூர்த்தி, காவிரி தொழிற்நுட்ப பிரிவு தலைவர், சுப்பிரமணியம், திருச்சி மண்டல நீர்வளத் துறை தலைமை பொறியாளர், ராமமூர்த்தி உள்ளிட்ட எட்டு உயர் அதிகாரிகள், நேற்று முன்தினம் டில்லி சென்றனர்.
கங்கை நதி புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளும், மத்திய ஜல்சக்தி துறையின் தலைவர், அருண்குமார் சின்ஹா உள்ளிட்ட அதிகாரிகளுடன், ஆலோசனை நடத்தினர். உத்தரவுகங்கையை மேம்படுத்த எடுக்கப்பட்டு வரும், தொழிற்நுட்ப தகவல்களை கேட்டறிந்தனர். இதையடுத்து, தமிழகத்தில் காவிரியை புனரமைக்கும் பணிகள் துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் பங்களிப்புடன் இத்திட்டத்தை செயல்படுத்த, துறையின் அதிகாரிகளுக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு உள்ளதாக தெரிகிறது.

தினமணி: ரஷ்யாவுக்கு ரூ.7 ஆயிரம் கோடி கடனுதவி: பிரதமர் மோதி அறிவிப்பு

பட மூலாதாரம், Mikhail Metzel
ரஷ்யாவின் தொலை கிழக்கு பிராந்தியத்தின் வளர்ச்சியை மேம்படுத்த இந்தியா சார்பில் 100 கோடி டாலர் (சுமார் ரூ.7 ஆயிரம் கோடி) கடனுதவி வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் தொலை கிழக்குப் பிராந்தியத்தின் மேம்பாட்டுக்கு, அந்நாட்டுடன் இணைந்து இந்தியா பணியாற்றும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி, ரஷியாவில் தனது இரண்டு நாள் அரசுமுறைப் பயணத்தை புதன்கிழமை தொடங்கினார். அந்நாட்டின் விளாடிவோஸ்டோக் நகரில் கிழக்குப் பொருளாதாரக் குழுவின் 5-ஆவது கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, பிரதமர் மோடி பேசுகையில், இந்தப் பிராந்தியத்தின் வளர்ச்சிக்காக, இந்தியா ரூ.7 ஆயிரம் கோடி கடனுதவியை வழங்கவுள்ளது. இது, இருநாடுகளுக்கு இடையேயான பொருளாதார ஒத்துழைப்புக்கு மேலும் உத்வேகம் அளிக்கும் என்றார்.
21-ஆம் நூற்றாண்டில் ரஷ்யாவின் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக, தொலை கிழக்குப் பிராந்தியத்தை அதிபர் புதின் அறிவித்தது வரவேற்புக்குரியது. அந்தப் பிராந்தியத்தில் இந்திய நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடு செய்ய அதிபர் புதின் ஆர்வம் காட்டி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அந்நாளிதழ் செய்தி மேலும் விவரிக்கிறது.

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












