பியர் விலை 55 ஆயிரம் பவுண்டு: பில்லைப் பார்த்து அதிர்ந்த கிரிக்கெட் செய்தியாளர் மற்றும் பிற செய்திகள்

பட மூலாதாரம், naturalbox
இங்கிலாந்தின் மான்செஸ்டரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிரிக்கெட் செய்தியாளர் ஒருவர் பியர் குடித்ததற்கு, 55,000 பவுண்டுகள் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இது சுமார் 48 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய்.
பீடர் லலோர் என்பவர் மல்மிசன் என்ற ஹோட்டலுக்கு பியர் அருந்த சென்றுள்ளார். அதன் விலை 5.50 பவுண்டுகள் மட்டுமே. ஆனால், அதற்கு 55 ஆயிரம் பவுண்டகளுக்கு பில் கொடுக்கப்பட்டதை தெரிந்து அதிர்ச்சி அடைந்தார்.

பட மூலாதாரம், PETER LALOR
தவறாக பில் கொடுத்ததற்கு ஹோட்டல் நிர்வாகம் சார்பில் மன்னிப்பு கேட்கப்பட்டது.
எனினும், அவரது வங்கிக் கணக்கில் இருந்து 55,000 பவுண்டுகள் எடுக்கப்பட்டுவிட்டது.
கணக்கில் இருந்து எடுக்கப்பட்ட பணத்தை மீண்டும் அவருக்கு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பல மில்லியன் டாலர் தர முன்வந்தஅமெரிக்கா

பட மூலாதாரம், Reuters
சர்ச்சைக்குரிய இரான் எண்ணெய்க் கப்பலை, அமெரிக்கா பறிமுதல் செய்வதற்கு வசதியான இடத்துக்கு ஓட்டிவந்தால் பல மில்லியன் டாலர் தருவதாக அந்த கப்பலின் கேப்டனுக்கு அமெரிக்க வெளியுறவுத் துறை மின்னஞ்சல் செய்தது தற்போது தெரியவந்துள்ளது.
இந்தத் தகவலை அமெரிக்க வெளியுறவுத் துறையே ஒப்புக்கொண்டது.
ஃபைனான்சியல் டைம்சில் வெளியான செய்தியின்படி, அட்ரியன் டர்யா-1 என்ற அந்தக் கப்பலின் கேப்டன் பெயர் அகிலேஷ் குமார். அவர் ஓர் இந்தியர்.

பிடுங்குவதெல்லாம் தேவையில்லாத ஆணிகள்

விளம்பரத் தட்டிகளுக்காக மரங்களை சிலுவையில் அறையும் ஆணிகளை உயிர் நேயத்தோடு அகற்றி சேவை செய்கிறார் இந்த தலைமைக் காவலர். ஆம். இவர் பிடுங்குவது எல்லாமே தேவையில்லாத ஆணிகள்தான்.
மனிதர்களைப் போல மரங்களுக்கும் உயிர் உண்டு; அவற்றின் மீது ஆணி அடிப்பதால் நாளடைவில் அவை பட்டுப்போய்விடும் என்பது ராமநாதபுரத்தை சேர்ந்த தலைமைக் காவலர் சுபாஷ் சீனிவாசனின் கருத்து.
எனவே மரங்களில் ஆணிகொண்டு விளம்பரத் தட்டிகளை அடிப்பதால் சாலையோர மரங்களில் ஏறியிருக்கும் பல்லாயிரம் ஆணிகளை அகற்றுவதை ஒரு தன்னார்வ சேவையாகவே அவர் மேற்கொண்டு வருகிறார்.

இரட்டை பெண் குழந்தைகளை பெற்றெடுத்த 73 வயது பெண்

ஆந்திர பிரதேசத்தில் 73 வயது பெண்ணொருவருக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்திருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று வியாழக்கிழமை காலை 10.30 மணி அளவில் அறுவை சிகிச்சை மூலம் எரமாட்டி மங்காயம்மாவுக்கு இந்த குழந்தைகள் பிறந்தன.
தாயும், குழந்தைகளும் நலமாக உள்ளனர். அடுத்த 21 நாட்களுக்கு இந்த குழந்தைகள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்படும் என்று மருத்துவர் உமா சங்கர் பிபிசியிடம் தெரிவித்தார்.
மேலும் படிக்க: இரட்டை பெண் குழந்தைகளை பெற்றெடுத்த 73 வயது பெண்

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு ஒரு மாதம்

பட மூலாதாரம், Getty Images
அரசியல் சட்டத்தின் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு காஷ்மீர் பிரச்சனை தீர்க்கப்பட்டுவிட்டது என்று சாமானிய இந்திய மக்கள் நம்புகிறார்கள்.
இதுகுறித்த அறிவிப்பு ஆகஸ்ட் 5 ஆம் தேதி வெளியானதில் இருந்து, காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் பெரிய அளவில் வன்முறை ஏதும் நிகழவில்லை என்பதைக் கூறி இந்திய அரசும் இந்தக் கருத்தை வலுப்படுத்துகிறது. இந்த மாற்றத்தை காஷ்மீர் பள்ளத்தாக்கு மக்கள் ஏற்றுக் கொண்டுவிட்டார்கள் என்று இதன் மூலம் ஒருவரால் கருதிக் கொள்ள முடியும்.
காஷ்மீர் விவகாரம் தங்களுடைய உள்நாட்டுப் பிரச்சினை என்று இந்தியா கருதுகிறது. இந்திய - பாகிஸ்தான் பிரிவினையின் தீர்க்கப்படாத பிரச்சனையாக காஷ்மீர் உள்ளது என்றும், அதற்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் பாகிஸ்தான் கூறுகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












