குல்பூஷன் ஜாதவை சந்திக்கிறார் இந்திய தூதரக அதிகாரி

குல்புஷன்

பட மூலாதாரம், Getty Images

குல்பூஷன் ஜாதவை இந்திய தூதரக அதிகாரி சந்திக்கலாம் என்று பாகிஸ்தான் கோரியதை ஏற்றுக்கொள்வதாக இந்தியா அறிவித்துள்ளது.

இந்த சந்திப்பு அர்த்தமுள்ளதாகவும், நியாமானதாகவும் இருக்கும் சூழலை பாகிஸ்தான் உருவாக்கி கொடுக்கும் என நம்புவதாக இந்தியா தெரிவித்துள்ளது.

இந்திய ராணுவத்திற்காக தங்களது நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உளவுப் பார்த்ததாக குல்பூஷன் ஜாதவை 2016இல் கைது செய்த பாகிஸ்தான், 2017இல் அவருக்கு மரண தண்டனை விதித்தது.

இதை எதிர்த்து இந்திய அரசின் சார்பில் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, தற்காலிகமாக குல்பூஷன் ஜாதவின் மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தானிலுள்ள இந்திய உயர் ஆணையத்தின் துணை அதிகாரி கவுரவ் அலுவாலியா குல்பூஷண் ஜாதவை இன்று சந்திக்க உள்ளதாக ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

யார் இந்த குல்பூஷன் ஜாதவ்?

ஜாதவ் - குடும்பத்தினர் சந்திப்பு

பட மூலாதாரம், PAKISTAN FOREIGN MINISTRY

படக்குறிப்பு, ஜாதவ் - குடும்பத்தினர் சந்திப்பு

46 வயதான குல்பூஷன் ஜாதவ் மும்பையை சேர்ந்தவர். பத்தாண்டுகளுக்கு மேல் இந்திய கடற்படையில் அதிகாரியாக இருந்தவர். திருமணமாகி அவருக்கு குழந்தைகளும் உள்ளன.

சொந்தமாக தொழில் தொடங்க, கடற்படையில் இருந்து ஜாதவ் விலகியதாகவும், இரானில் உள்ள சாபஹார் துறைமுகத்தில் பணியாற்றி வந்ததாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

ஆனால், உளவு பார்த்த குற்றச்சாட்டில் 2016ம் ஆண்டு இவர் கைது செய்யப்பட்டார். 2016-ஆம் ஆண்டு மார்ச் 3-ஆம் தேதி கைது செய்யப்பட்டதாக பாகிஸ்தான் கூறுகிறது.

பாகிஸ்தானின் பதற்றமான பகுதியான பலூசிஸ்தானில், உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பலூசிஸ்தானில் தனிநாடு கோரி பிரிவினைவாத கிளர்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதன் பின்னணியில் இருப்பது இந்தியா என பாகிஸ்தான் குற்றஞ்சாட்டுகிறது.

குல்பூஷன் ஜாதவ் இந்திய குடிமகன் என்று கூறிய இந்திய அரசு, அவர் உளவு பார்த்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை நிராகரித்திருந்தது.

அவர் பலூசிஸ்தானில் கைது செய்யப்படவில்லை என்றும், இரானில் இருந்து கடத்தப்பட்டார் என்றும் இந்தியா தெரிவித்திருந்தது.

பாகிஸ்தானின் இந்த நடவடிக்கை, கேலிக்கூத்தானது என்று இந்தியா கண்டனம் தெரிவித்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: