டிரம்ப்: அணுகுண்டு மூலம் சூறாவளியை தடுக்கலாம் என்று கூறினாரா?

அணுகுண்டை வைத்து சூறாவளியை தடுக்கலாம் என்று டிரம்ப் கூறினாரா?

பட மூலாதாரம், NOAA

சூறாவளிகளை தடுக்க அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் வழிமுறையை ஆராய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, அது நல்ல யோசனை அல்ல என்று அமெரிக்க அறிவியல் நிறுவனம் ஒன்று கருத்து தெரிவித்துள்ளது.

இந்த புதிய வழிமுறை குறித்து அதிபர் டிரம்ப் தேசிய பாதுகாப்பு அதிகாரிகளிடம் கருத்து கேட்டுள்ளதாக ஆக்சியோஸ் செய்தி வலைத்தளம் தெரிவித்துள்ளது.

இதன் முடிவுகள் "பேரழிவு தரும்" என்று அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாக (என்ஓஏஏ) அமைப்புத் தெரிவித்துள்ளது.

இருப்பினும், தான் இந்த யோசனையை முன்வைக்கவில்லை என்று டிரம்ப் விளக்கமளித்துள்ளார்.

பொதுவாக அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையை தாக்கும் சூறாவளிகள் கடுமையான சேதத்தை ஏற்படுத்துகிறது.

சூறாவளியை தடுப்பதற்கு இந்த யோசனை முன்வைக்கப்படுவது இது முதல் முறையல்ல.

டிரம்ப் கூறியதாக இந்த செய்திகள் வெளியானதை தொடர்ந்து #ThatsHowTheApocalyseStarted என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் பிரபலமடைந்தது.

எவ்விதமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்?

அணுகுண்டை வைத்து சூறாவளியை தடுக்கலாம் என்று டிரம்ப் கூறினாரா?

பட மூலாதாரம், Getty Images

புயல் கரையை கடப்பதை தடுக்க அமெரிக்கா ஏன் ஒரு அணுகுண்டை புயலின் மையப்பகுதியில் விடக் கூடாது என்று டிரம்ப் கேட்டதாக ஆக்ஸியோஸ் செய்தித் தளம் தெரிவித்துள்ளது.

சூறாவளியை தடுக்க அணுஆயுதங்களைப் பயன்படுத்துவது "புயலின் திசையை கூட மாற்றாது" என்றும் "கதிரியக்கம் புயலின் ஊடாக அதிவிரைவாக பயணித்து நிலப்பரப்பை பாதிக்கும்" என்றும் என்ஓஏஏ தெரிவித்துள்ளது.

தேவையான ஆற்றலின் அளவை பெறுவதே, சூறாவளிகளின் தடத்தை மாற்றுவதில் வெடிபொருட்களைப் பயன்படுத்துவதில் உள்ள மிகப் பெரிய சிரமம் என்று அது கூறுகிறது.

ஒரு சூறாவளியின் வெப்ப வெளியீடு ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் 10 மெகாட்டன் அணு குண்டு வெடிப்பதற்கு சமம்.

ஒரு அணு குண்டின் இயந்திர ஆற்றல் கிட்டத்தட்ட புயலுக்கு சரிசமமாக இருந்தாலும், "தொலைதூர கடலின் நடுவில் ஒரு இடத்தில் ஆற்றலில் பாதி அளவை கவனம் செலுத்தி வெளியிடுவது கூட எதிர்த்து நிற்க முடியாத அளவுக்கு கடினமானது" என்று அது மேலும் கூறுகிறது.

"பலவீனமான வெப்பமண்டல அலைகள் அல்லது காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள், சூறாவளிகளாக வளர வாய்ப்புள்ளது என்பதை உறுதிசெய்வதற்கு முன்பே கலைக்க முயல்வது குறிப்பிடத்தக்க பலனை தராது போகலாம்" என்று என்ஓஏஏ கூறுகிறது.

அணுகுண்டை வைத்து சூறாவளியை தடுக்கலாம் என்று டிரம்ப் கூறினாரா?

பட மூலாதாரம், Getty Images

"அட்லாண்டிக் படுகையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 80 காற்றழுத்த தாழ்வு நிலைகள் உருவாகின்றன. ஆனால், அவற்றில் சராசரியாக ஓராண்டுக்கு சுமார் ஐந்து தாழ்வு மண்டலங்கள் மட்டுமே சூறாவளியாக மாறுகிறது. எனவே, அவற்றை முன்கூட்டியே கணிப்பது இயலாத காரியம்."

இந்த யோசனை எவ்வளவு காலமாக உள்ளது?

சூறாவளியின் வீரியத்தை குண்டு வீசி குறைக்கும் யோசனை 1950களில் இருந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த ஆலோசனை முதலில் ஒரு அமெரிக்க அரசுத்துறை விஞ்ஞானியால் முன்வைக்கப்பட்டது.

1961ஆம் ஆண்டில் நேஷனல் பிரஸ் கிளப்பில் நடந்த ஒரு உரையின் போது, அமெரிக்க வானிலை ஆய்வு மையத்தின் அப்போதைய தலைவர் பிரான்சிஸ் ரிச்செல்டெர்ஃபர், "கடலில் வெகு தொலைவில் உள்ள ஒரு சூறாவளியில் ஒருநாள் அணு குண்டை வெடிக்கச் செய்வதற்கான சாத்தியத்தை கற்பனை செய்து பார்க்க முடிகிறது" என்று கருத்துத் தெரிவித்திருந்தார்.

ஒவ்வொரு ஆண்டும் புதிதாக சூறாவளிகள் ஏற்படுத்தும்போது இந்த யோசனை அடிக்கடி முன்வைக்கப்பட்டு வருவதாக என்ஓஏஏ அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: