வேதாரண்யம் அம்பேத்கர் சிலை உடைப்பு: யார் காரணம்? கள நிலவரத்தை பதிவு செய்யும் பிபிசி

- எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யன்யத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று உடைக்கப்பட்ட அம்பேத்கர் சிலைக்குப் பதிலாக புதிய சிலை திங்களன்று நிறுவப்பட்டது.
இந்த கலவரம், சிலை உடைப்பு சம்பவம் தொடர்பாக 51 பேர் கைது செய்யப்பட்டனர். சிலை உடைப்பு மற்றும் அதன்பின் நடந்த கலவரத்தால் அப்பகுதியில் பதட்ட சூழல் நிலவியது. இந்நிலையில் கலவரம் நடந்த பகுதிக்கு பிபிசி தமிழ் கள ஆய்வு செய்தது.
கலவரத்தை நேரில் பார்த்த ரஹமத்துல்லா பிபிசி தமிழிடம் பேசுகையில், ''ஞாயிற்றுகிழமை மாலை நான்கு முப்பது மணி அளவில் திடீரென பேருந்து நிலையம் அருகே உள்ள காவல் நிலையத்தில் முன் காரை நிறுத்திவிட்டு ஒரு நபர் காவல் நிலையத்துக்குள் சென்றார். அவரைத் தொடர்ந்து வந்த பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் அவரை காவல் நிலையத்திலிருந்து வெளியே வரும்படி எச்சரித்தனர்.
ஆனால் அவர் வர மறுத்ததையடுத்து அடுத்து அந்த நபர் வந்த காரை தீயிட்டு கொளுத்தினர். பின்னர் காவல் நிலையத்தில் இருந்த நபரை சேர்ந்த சமூகத்தினர் அதிகமாக கூடி சற்று நேரத்தில் சினிமாவில் வரும் காட்சியை போல் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டு கலவரம் ஈடுபட்டனர்.
நடந்த சம்பவத்திற்கு யார் காரணம்?
ஆனால் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் பேருந்துகள் அதிக அளவு இல்லாததால் பொது சொத்துக்கள் சேதமாகமல் தப்பியது.
பின்னர் அவ்வழியாக வந்த குறிப்பிட்ட சமூகத்தினர் எனது கடை முன் இருந்த அம்பேத்கர் சிலையை சேதப்படுத்தினர் பின்னர் சம்பவம் அறிந்த காவல்துறை குவிக்கப்பட்டு கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர்'' என தெரிவித்தார்.

''ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சம்பவத்திற்கு முழுக்க முழுக்க காவல்துறையை காரணம் ஏனெனில், வேதாரண்யம் சரகத்தில் கூடுதல் கண்காணிப்பாளர், ஆய்வாளர்கள் என யாரும் கிடையாது.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாக பாண்டி என்பவர் தனது அப்பாவை தலித் சமூகத்தினர் தாக்கியதாக வேதாரண்யம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் அதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஞாயிற்றுக்கிழமை மாற்று சமூகத்தினர் காவல் நிலையம் என்று பார்க்காமல் அவரின் காரை எரித்து கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதனால் எங்க சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் வன்முறையில் ஈடுபட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டனர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே பேருந்து நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலையை அகற்றி வேறு இடத்தில் வைக்குமாறு காவல்துறையிடம் மனு அளித்து இருந்தோம். ஆனால் அதனை அவர்கள் முறையாக செய்யாமல் போக்குவரத்து காரணத்திற்காக ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக கூறி சிலைக்கு அருகில் உள்ள வீடுகள் மற்றும் சுவர்களை இடித்தனர் ஆனால், நடுரோட்டில் உள்ள சிலையினை எவ்வித இடமாற்றமும் செய்யவில்லை.
இதனால் கோயில் விசேஷங்களுக்கு தேர் இழுக்க முடியவில்லை என புகார் அளித்து இருந்தோம். ஆனால், அந்த புகாருக்கும் நடவடிக்கை எடுக்கவில்லை வேதாரண்யம் காவல்துறை. தலித் சமூகத்தற்கும், அகமுடையர் சமுதாயத்திற்கும் இடையே அவ்வப்போது சாதிய ரீதியிலான பிரச்சனைகள் வருவதுண்டு. ஆனால் அந்த நேரத்தில் காவல்துறை உயர் அதிகாரி இருவரையும் அழைத்து அமைதி பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமாக தீர்வு காண்பார்கள் ஆனால் இந்த விஷயத்தில் இதுவரைக்கும் அப்படி ஒரு தீர்வு காணப்படவில்லை.

இதனால் ஞாயிற்றுக்கிழமை இந்த பகுதியில் கலவரம் ஏற்பட காரணமாக காவல்துறையே '' என பிபிசி தமிழிடம் பேசிய வேதாரண்யம் அகமுடையார் சங்க தலைவர் பாரி தெரிவித்தார்.
வேதாரண்யம் பகுதி என்பது ஒரு சமூக நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இவ்வளவு ஆண்டுகளாக இருந்து வந்த நிலையில் குறிப்பிட்ட சிலர் அதனை சீர்குலைக்கும் விதமாக சாதி ரீதியிலான சண்டைகளை உருவாக்கி வருகின்றனர். மாற்று சாதியினரான அகமுடையார் ஜாதியினை சேர்ந்த அனைவரையுமே அவ்வாறு கூற முடியாது.
ஆனால் அகமுடையார் சமூகத்தை சேர்ந்த சிலர் சிறிய பிரச்சனைகளை ஜாதிக் கலவரமாக மாற்றி தென்மாவட்டங்களில் ஏற்படக்கூடிய ஜாதி ரீதியான பிரச்சனைகளை போல் இப்பகுதிகளிலும் ஏற்படுத்தி சமூக நல்லிணக்கத்தை சீர் குலைக்க பார்க்கிறார்கள் எனவே, காவல்துறை அவ்வாறான நபர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து மீண்டும் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் சமூக நல்லிணக்கம் மேம்பட வழிவகை செய்ய வேண்டும்'' என தலித் கூட்டமைப்பை சேர்ந்த சுபாஷ் சந்திர போஸ் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் வரதராஜீ கூறுகையில், ''ஞாயிற்றுக் கிழமை மாலை நடந்த சம்பவத்தை அடுத்து திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், தலைஞாயிறு, கீழையூர், நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை எவ்விதமான அசம்பாவித சம்பவங்கள் நடைபெறவில்லை.

இச்சம்பவம் குறித்து இரண்டு பிரிவின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் 28 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். மேலும் 750 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதுடன்; கூடுதல் கண்காணிப்பாளர் துணை காவல் கண்காணிப்பாளர,; மாவட்ட கண்காணிப்பாளர் என அனைவரும் முழு வீச்சில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது வேதாரண்யம் பகுதி 100 சதவீதம் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. சேதமடைந்த அம்பேத்கர் சிலைக்கு பதிலாக மாற்று சிலை திங்கள்கிழமை காலையில் அதே இடத்தில் நிறுவப்பட்டது. அதேபோல் பொதுமக்கள் பயன்படத்தக்கூடிய போக்குவரத்து சீராக நடைபெற்று வருகிறது கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டு பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர்'' என்று அவர் மேலும் கூறினார்.
எதிர்வரும் காலங்களில் வேதாரண்யம் பகுதியில் கலவரங்கள் நடைபெறாமல் இருக்க காவல்துறை சார்பில் எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கேட்டதற்கு அவர் பதிலளிக்கையில், ''காவல்துறை சார்பில் சட்டபூர்வமான நடவடிக்கைகளை தொடர்ந்து செய்யப்படும்,நன்னடத்தையை பேணுவதற்காக சட்டபிரிவின் கீழ் நடவடிக்கை எடுத்து உரிய அதிகாரி முன் பிணை பத்திரம் பெற்று நன்னடத்தையுடன் பொதுமக்கள் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












