கிம் ஜாங் உன் - ஷி ஜின்பிங் சந்திப்பால் வட கொரிய அணு ஆயுத பயன்பாட்டில் மாற்றம் நேருமா?

பட மூலாதாரம், AFP
சீன அதிபர் ஷி ஜின்பிங் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை இன்று (வியாழக்கிழமை) சந்திக்கவுள்ளார். வட கொரியாவில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது.
2005ஆம் ஆண்டிலிருந்து சீன தலைவர் ஒருவர் வட கொரியாவுக்கு பயணம் செய்வது இதுவே முதல்முறை.
சீனாவில் இதுவரை இவர்கள் இருவரும் நான்கு முறை சந்தித்துள்ளனர் . இவர்களின் சந்திப்பில் நிறுத்தி வைக்கப்பட்ட வட கொரியாவின் அணு ஆயுத திட்டம் குறித்தும், பொருளாதார பிரச்சனைகள் குறித்தும் ஆலோசிக்கப்படும்.
வட கொரியாவின் முக்கிய வர்த்தக கூட்டாளியான சீன அந்நாட்டிற்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாடாக கருதப்படுகிறது.
ஜப்பானில் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டிற்கு ஒரு வார காலம் முன்னதாக இந்த சந்திப்பு நடைபெறுகிறது. ஜி20 மாநாட்டில் ஷி ஜின்பிங் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்து பேசவுள்ளார்.
வட கொரியாவின் அணுஆயுதங்கள் பயன்பாடு குறித்தான வியட்நாம் தலைநகர் ஹனாயில் பேச்சுவார்த்தையில் எந்த ஒரு ஒப்பந்தமும் எட்டப்படாமல் முடிவடைந்த பிறகு கிம்மை முதல்முறையாக சந்திக்கிறார் ஷி ஜின்பிங்.
ஏன் இந்த சந்திப்பு?
சீன தலைவர் ஒருவர் வட கொரியாவுக்கு பயணம் மேற்கொள்வது கடந்த 14 வருடங்களில் இதுதான் முதல்முறை. மேலும் 2012ல் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஷி ஜின்பிங் வட கொரியாவுக்கு பயணம் செய்வதும் இது முதல்முறை.
கடந்த வருடம் நடைபெற்ற அடுத்தடுத்த ராஜரீக நடவடிக்கைகளால் சற்று தடுமாறியிருந்த கிம்மிற்கு உத்வேகமளிக்கக்கூடிய ஒரு சந்திப்பாக இது அமையும்.

பட மூலாதாரம், Getty Images
இருநாட்டு தலைவர்களும் அணுஆயுத பயன்பாடு தொடர்பாக தடைபெற்ற பேச்சுவார்த்தை, ஹனாய் சந்திப்பு தோல்வியில் முடிந்தது ஆகியவை குறித்து ஆலோசிப்பார்கள்.
ஷி ஜின்பிங் என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள விரும்புவார் என்றும், மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்க ஏதேனும் வழிவுள்ளதா என்றும் ஜப்பானில் டிரம்பை சந்திக்கும்போது பேசுவதற்கான தகவல்கள் ஆகியவை குறித்தும் ஷி ஜின்பிங் தெரிந்து கொள்ள நினைப்பார் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சந்திப்பின் மூலம் சீனா விரும்புவது என்ன?
வட கொரியாவில் ஸ்திரத்தன்மையையும், பொருளாதார ஒத்துழைப்பையும் சீன விரும்புகிறது.
இரண்டு கம்யூனிச நாடுகளும் பழைய கூட்டாளிகள். வட கொரியாவின் அணு ஆயுத பயன்பாடு சீனாவால் கடும் விமர்சனத்துக்கு உள்ளான நிலையில், கடந்த தசாப்தத்தில் இருநாட்டு உறவிலும் விரிசல் ஏற்பட்டது.
அதிகாரபூர்வ `சீனா டெய்லி` செய்தித்தாள், "வலுவான ஒத்துழைப்பு திட்டங்களுக்கு" இரு நாட்டு தலைவர்களும் ஒப்புக் கொள்வார்கள் என தெரிவித்துள்ளது.
வட கொரிய செய்தித்தாளான ரோடாங் சின்முன், அரிதான முதல் பக்க தலையங்கத்தில், அணு ஆயுத பயன்பாடு குறித்தான பேச்சுவார்த்துக்கு தனது ஆதரவை ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார் என்று எழுதியுள்ளது. "கொரிய தீபகற்ப பிரச்சனையை அரசியல் ரீதியாக சரி செய்வதில் வடகொரியா சரியான பாதையில் செல்கிறது" என ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
வட கொரியா விரும்புவது என்ன?
இரு நாடுகளுக்கு மத்தியிலும் பெரியளவில் நம்பிக்கையோ நல்லுறவோ இல்லை என்றாலும் வட கொரியா சீனாவை தனக்கு நெருக்கமான ஒரு நாடாகவே வைத்துக் கொள்ள விரும்பும் என அமெரிக்காவை சேர்ந்த ஆய்வு வலைதளமான `38 நார்த்`தின் நிர்வாக இயக்குநர் ஜென்னி டவுன் தெரிவிக்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
சர்வதேச தடைகளால் வட கொரியாவின் பொருளாதாரம் தடுமாற்றத்தில் உள்ளது.
சீனாதான் அதன் முக்கிய வர்த்தக கூட்டாளி; எனவே சீனாவுடனான உறவை வடகொரியா பெரிதும் நம்பியுள்ளது. இருப்பினும் இது ஒரு சமமான கூட்டு என்று சொல்லமுடியாது. வட கொரியாவுக்கு சீனாவின் தேவை அதிகமாக உள்ளது. ஆனால், சீனாவுக்கு அப்படி இல்லை.
"வட கொரியாவின், மீன், துணிகள், தாதுக்கள் மற்றும் பணியாளர்கள் என வட கொரிய ஏற்றுமதிகளுக்கான இடமாக சீனா உள்ளது." என வட கொரிய ஆய்வாளர் பீட்டர் வார்ட் பிபிசியிடம் தெரிவித்தார்.
அதேபோல் வட கொரிய தொழில்துறை மற்றும் வீடுகளுக்கு தேவையான பொருட்கள் பெரிதும் சீனாவின் இறக்குமதியை நம்பியே உள்ளது. தற்போதைய தடைகளால் இந்த வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












