வடகொரியா மீதான கூடுதல் தடைகள் - உடனடியாக விலக்கிய டிரம்ப் மற்றும் பிற செய்திகள்

Trump cancels new North Korea sanctions

பட மூலாதாரம், Getty Images / AFP

வடகொரியா மீது அமெரிக்கா விதித்த சமீபத்திய தடைகளை திரும்பப் பெற்றுக்கொள்ள தாம் உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டுக்கு டிரம்ப் கூறியுள்ளார்.

ஏற்கனவே இருக்கும் தடைகளுடன் கூடுதலாக விதிக்கப்படும் பெரிய அளவிலான தடைகள் விலக்கப்படும் என அவர் ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார்.

வடகொரியா மீதான தடைகளை மீறி அந்நாட்டுக்கு நிலக்கரியை அனுப்பிய இரு சீன கப்பல் நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்ட தடைகளை அவர் குறிப்பிடுகிறார் என்று கருதப்படுகிறது.

பன்னாட்டு பொருளாதார தடைகளை மீற வடகொரியாவுக்கு அந்த நிறுவனங்கள் உதவுவதாக அமெரிக்கக் கருவூலம் கூறியிருந்தது.

அவற்றின் மீதான தடை அறிவிப்பு வந்த சில மணி நேரங்களிலேயே தென்கொரியா உடனான பேச்சுவார்த்தை மையத்தில் இருந்து வடகொரியா தமது அதிகாரிகளைத் திரும்பப் பெற்றுக்கொண்டது.

அமெரிக்காவின் தடைகளுக்கும் இந்த நடவடிக்கைக்கும் தொடர்பு உள்ளதா என்று தெரியவில்லை.

இலங்கை

திருப்பூர் வெளிமாநிலத்தவர்கள் வெற்றியை நிர்ணயிப்பார்களா?

Modi onstage with EPS and OPS

பட மூலாதாரம், Arun Karthick

படக்குறிப்பு, பிப்ரவரி மாதம் திருப்பூரில் நடைபெற்ற ஓர் அரசு விழாவில் பிரதமர் நரேந்திர மோதியுடன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.

திருப்பூரில் 1980களில் தொடங்கிய பின்னலாடைத் தொழில் வளர்ச்சி மேற்குத் தமிழகத்தின் மக்கள்தொகை அமைப்பு மற்றும் சமூக-கலாசார தளம் ஆகிய இரண்டிலுமே மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. அந்த மாற்றங்களில் அதிகமானவை நடந்தது கடந்த ஐந்து முதல் பத்து ஆண்டுகளில்தான் எனலாம்.

வெளிமாநிலத்தவர்கள் எந்த ஒரு குறிப்பிட்ட கட்சியினரையும் வெற்றி பெற வைக்கும் அளவுக்கு பெரும் எண்ணிக்கையில் இல்லையென்றாலும், போட்டி மிகவும் நெருக்கமாக இருக்கும் சமயத்தில், வாக்குரிமை உள்ள சில ஆயிரம் பேர் வெற்றியைத் தீர்மானிக்கக்கூடும் என்பது மறுக்க முடியாதது.

இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தபின், இந்திய பிரதமர் நரேந்திர மோதி தமிழகத்தில் கலந்துகொண்ட முதல் பொதுக்கூட்டம் நடைபெற்ற ஊர் திருப்பூர்.

இலங்கை

பொய்க்கால் குதிரை கலைஞர்களின் தேர்தல் கனவு

மக்களவை தேர்தல் 2019

மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், கடந்த 5 ஆண்டுகால மத்திய அரசின் ஆட்சி எவ்வாறு இருந்தது என்றும், வரப்போகும் புதிய பிரதமரிடம் மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பது குறித்தும் தெரிந்து கொள்ள, நாம் தமிழகத்தின் சில இடங்களுக்கு பயணித்தோம்.

அப்போது கலைத்துறையில் இருக்கும் இந்த தம்பதிகளையும் சந்தித்து பேசினோம். நாம் அவர்களை சந்திக்க சென்ற போது, நாடிராவ் - காமாட்சி தம்பதியினர் குதிரையாட்டத்திற்காக ஒப்பனை செய்து கொண்டிருந்தார்கள்.

இலங்கை

'முஸ்லிம் கட்சியோடு கூட்டணி இந்து மதத்துக்கு எதிரானதல்ல'

தொல். திருமாவளவன் , பிபிசி தமிழின் தமிழர் குரல்

இந்திய தேர்தல் களத்தில் கூட்டணி என்பது தவிர்க்க முடியாத ஒன்று. வாக்கு வங்கிகளை அடிப்படையாக கொண்டுதான் கூட்டணி அமைக்கப்படுகிறது என பிபிசி தமிழின் தமிழர் குரல் தேர்தல் சிறப்பு நிகழ்ச்சியில் மாணவர்களின் கேள்விகளுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பதிலளித்தார்.

தமிழகத்தை பொறுத்தவரை 50 ஆண்டுகளாக திமுக, அதிமுக கட்சிகளும், இந்திய அளவில் பாஜக, காங்கிரஸ் கட்சிகளும் பிரதான கட்சிகளாக இருக்கின்றன. அதனால், இதில் ஏதேனும் ஒரு கட்சியுடன்தான் விசிக போன்ற வளரும் கட்சிகள் சேர முடியும்.

எந்த அணியில் இடம்பெற வேண்டும் என்பதை நாங்கள் தீர்மானிப்பதை விட, வளர்ந்த கட்சிகள் தான் தீர்மானிக்கிறார்கள். நான் விரும்பினால் மட்டுமே ஏதாவது ஒரு கட்சியில் இடம் பெற்றுவிட முடியாது. அதனை அவர்கள் தான் முடிவு செய்கிறார்கள். அதற்கு நிறுவப்பட்ட வாக்கு வங்கியை கணக்கில் எடுத்துக் கொள்கிறார்கள் என திருமாவளவன் பதிலளித்தார்.

இலங்கை

'விடுதலைப் புலிகள் காலத்தில் வன வளம் பாதுகாக்கப்பட்டது'

மைத்திரிபால சிறிசேன

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் யுத்தம் நடந்தபோது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள வனப் பகுதிகள் பாதுகாக்கப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

திம்புலாகலை - வெஹெரகல பகுதியில் இன்று இடம்பெற்ற சர்வதேச வனப் பாதுகாப்பு தின நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே, ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :