பாகிஸ்தானின் இதயங்களை வென்ற பிரிட்டிஷ் ஆசிரியர் - மேஜர் ஜெஃப்ரி லாங்லாண்ட்ஸின் வாழ்வும் மறைவும்

ஒரு சாதாரண ஆசிரியரின் மறைவிற்கு ஒரு நாடே அழும் என்பது சாத்தியமா என்ற கேள்வி எழலாம். ஆனால், ஜனவரி 2ஆம் தேதியன்று மறைந்த மேஜர் ஜெஃப்ரி லாங்லாண்ட்ஸ் சாதாரண ஆசிரியர் அல்ல.

பிரிட்டனில் ஆதரவற்றவறாக இருந்து, பாகிஸ்தானின் அபிமான ஆசிரியரான இவர், இளவரசியை சந்தித்தது; பிரதமருக்கு வகுப்பு எடுத்தது; சுத்தமான காலணி, கிடைத்த சாதாரண உணவு மற்றும் காலை நாளிதழுடன் கடத்தலிலிருந்து தப்பியது உள்ளிட்டவை ஏதோ விறுவிறுப்பான நாவலில் வரும் காட்சிகளைப்போல உள்ளது இவரின் வாழ்க்கை.

2012இல் இவரைப்பற்றி எழுதிய `தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை, `மிகச்சிறந்த பழங்கால ஆங்கிலேயர், பிரிட்டிஷ் காலத்தின் வாழும் மிச்சம்` என்று வர்ணித்தது.

ஆனால், கடந்த காலங்களில் எடுத்துக்காட்டையும் தாண்டிய மனிதராக இவர் பார்க்கப்பட்டார். 101 வயதில் இயற்கை எய்தியுள்ள இவர், கல்விக்கு ஆற்றிய சிறந்த பணியால், ஆயிரக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கை மாறியது. அதில் பலரும், பாகிஸ்தானின் குக்கிராமங்களிலிருந்தும், சட்டங்கள் கூட இல்லாத பகுதிகளிலிருந்தும் வந்தவர்கள்.

மோசமான இளம் பருவம்

முதலாம் உலகப்போர் தொடங்கியிருந்த சமயத்தில், ஜெஃப்ரியும் அவரின் இரட்டை சகோதரரான ஜானும் பிரிட்டனின் யார்ஷையர் பகுதியில் 1917ஆம் ஆண்டு பிறந்தனர்.

அடுத்த ஆண்டு, அந்த ஊரை உலுக்கிய காய்ச்சலால், ஒரு மில்லியன் மக்களோடு சேர்ந்து தனது தந்தையையும் பறிகொடுத்தார் ஜெஃப்ரி. அவரின் தாயார் பிரிஸ்டோலில் உள்ள தனது பெற்றோரின் வீட்டிற்கு செல்ல முடிவு செய்தார். பிறகு ஜெஃப்ரிக்கு 12 வயதானபோது, அவரும் இறந்துவிட, தாயின் உறவுகள் மற்றும் நண்பர்களின் உதவியோடு இவர் வாழ்ந்தார்.

டெவோன் பகுதியிலுள்ள கிங்ஸ் கல்லூரியில் சேர்ந்த படித்த இவர், தெற்கு லண்டனில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக தனது முதல் பணியில் சேர்ந்தார்.

மேஜர் லாங்லாண்டஸ் தனது 20களில் இருந்தபோது இரண்டாம் உலகப்போர் தொடங்கியது. 1942இல் ராணுவத்தில் இணைந்த அவர் டீப்பி ரைட் (Dieppe Raid) என வரலாற்றில் நினைவுகூரப்படும் ஜெர்மன் ஆக்கிரமிப்பில் இருந்த பிரான்சின் டீப்பீ கடற்கரை மீதான நேச நாடுகளின் தாக்குதலில் பங்கெடுத்தார்.

பிரிட்டிஷ் இந்தியாவில் பணி

1944இல் பிரிக்கப்படாத பிரிட்டிஷ் இந்தியாவில் பணியமர்த்தப்பட்டார் மேஜர் ஜெஃப்ரி லாங்லாண்ட்ஸ். இது இவரின் வாழ்க்கையையே மாற்றியது. இந்தியாவில் ஆங்கிலேயார்களின் சாம்பிராஜ்யத்தின் முடிவை பார்ப்பதற்காக தங்கிய அவர், 1947இல் நடந்த இந்திய பிரிவினை, அதன் கலவரம் மற்றும் இந்தியா-பாகிஸ்தான் என்று இருநாடுகள் பிறந்ததையும் பார்த்தார்.

பாகிஸ்தானின் புதிய ராணுவத்தில் பணியாற்ற அவர் நியமிக்கப்பட்டார். அப்பணியின் பெரும்பான்மையான நேரத்தை அவர் ரயில் பயணம் மூலம், பாகிஸ்தானை சுற்றிவந்தார். பிற்காலத்தில் எடுக்கப்பட்ட நேர்காணலில், லட்சக்கணக்கான மக்கள் மடிவதற்கு காரணமான மிகவும் கலவரம் நிறைந்த ஆரம்ப காலங்களை எவ்வாறு பயணித்தார் என்பது குறித்து விவரித்துள்ளார்.

பாகிஸ்தானின் புதிய தலைநகரான லாகூரில், இந்திய படைவீரர்கள் நிறைந்திருந்த ஒரு ரயிலை பாதுகாத்தது குறித்தும் பேசியுள்ளார். பிரிவினை காலத்தில் நடந்தவற்றிற்கு அப்போதைய தலைமைகள்தான் காரணம் என்று அவர் தெரிவித்தார்.

2015ஆம் ஆண்டு, ஸ்டான்ஃபோர்டின் ஒரு ஆய்வுக்காக பேசிய ஜெஃப்ரி, "பிரிவினை மிக அமைதியாக நடந்திருக்கும், அதைத்தொடர்ந்து வந்த பல போர்களும் தவிர்க்கப்பட்டிருக்கும்," என்று தெரிவித்துள்ளார்.

மீண்டும் ஆசிரியர் பணி

அப்போதைய பாகிஸ்தானின் ராணுவ ஆட்சியாளராக இருந்த ஆயூப் கான், `உங்களின் வருகால திட்டம் என்ன?` என்று ஜெஃப்ரியிடம் கேட்டதை நினைவுகூர்கிறார் தொழிலதிபர் ஹரூன் ரஷித்.

தான் முதலில் ஆசிரியராக இருந்ததாகவும், அதே வேலைக்கு போக திட்டமுள்ளது என்று தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை உள்ளது என்றும், அவர் விரும்பினால் பாகிஸ்தானிலேயே தங்கி பணியாற்றலாம் என்று ஆயுப் கேட்க, அவரும் ஒப்புக்கொண்டார்.

ஜெஃப்ரி தான் கற்பிக்க வேண்டிய பள்ளியை ஏற்கனவே தேர்வுசெய்து வைத்திருந்தார். எய்ட்சிசன் கல்லூரியை "பாகிஸ்தானின் இடான்" (Eton of Pakistan) என்று அவர் அழைத்தார். இங்கிலாந்தில் உள்ள இடான் கல்லூரி 15ஆம் நூற்றாண்டில் இருந்து தொடர்ந்து இயங்கும் ஒரு புகழ்பெற்ற கல்வி நிறுவனம் ஆகும்.

அடுத்த 25ஆண்டுகள் அங்கு தங்கி மாணவர்களுக்கு பாடம் கற்பித்து, அவர்களுடன் பாகிஸ்தான் மலைகளில் பயணம் மேற்கொண்டார். இங்குதான் அவர் தனது சிறந்த மாணவர்கள் சிலருக்கு வகுப்பெடுத்தார்.

"ஒரு அமெரிக்க தூதர், மேஜர் லாங்லாண்ட் பாகிஸ்தான் கேபினேட்டில் உள்ள பாதிபேருக்கு வகுப்பெடுத்துள்ளார்," என்று ஒருமுறை கிண்டல் செய்ததாக டெலிகிராப் பத்திரிக்கை கூறியுள்ளது. பாதி கேபினேட் என்றால், ஒரு அதிபரும், இரு பிரதமரும் அதில் அடங்குவர். பாகிஸ்தானின் தற்போதைய பிரதமர் இம்ரான் கானும் இந்த பட்டியலில் உள்ளார்.

மேஜர் ஜெஃப்ரி குறித்து எழுதியுள்ள பிரதமர் இம்ரான் கான், தனது ஆசிரியர் மலையேறும் பழக்கத்தை தொடர்ந்து விரும்பியதாகவும், நாட்டின் வடக்கில் உள்ள மலைகளை அவர் விரும்பியதாக குறிப்பிட்டுள்ளார்.

1979ஆம் ஆண்டு புதிய சவால்களை எதிர்நோக்க விரும்பிய மேஜர் லாங்லாண்ட், ஆப்கானிஸ்தானின் எல்லையோரத்தில் உள்ள வடக்கு வாஜிரிஸ்தானில் அதை கண்டறிந்தார்.

லாகூரிலிருந்து மிகவும் தொலைவில் அமைந்திருந்த இந்த பகுதிக்கு தலைமை ஆசிரியராக பணியாற்ற அவர் சென்றார்.

ஓர் ஆண்டுக்கு மேலாக அங்கு தங்கியிருந்த அவர், அதன்பிறகு கிட்டத்தட்ட அங்கிருந்து கிளம்பிவிட்டார். அது மிகவும் மோசமான இடம் என்று அவர் விவரித்துள்ளார்.

அங்கு இருக்கும் ஆபத்துகள் அவரை தடுக்கவில்லை. "அந்த பழங்குடியினர் பகுதியில் சட்டம் என்று எதுவுமே இல்லை. ஆதலால், அவர்கள் பகுதிக்கு புதிதாக வரும் யாரையும் அவர்கள் வரவேற்பதில்லை. பல நேரங்களில் புதியவர்களை அவர்கள் கடத்திவிடுவார்கள்," என்று அவர் தெரிவித்துள்ளார்.

கடத்தலும் விடுதலையும்

மேஜர் லாங்லாண்ட் மட்டும் இதில் விதிவிலக்கு இல்லை. 1988இல் அவரும் கடத்தப்பட்டார். உள்ளூர் தலைவர் ஒருவர் தேர்தலில் தோல்வியுற்றதால் வருத்தப்பட்டு இவரை கடத்தினார். முன்னாள் அதிகாரி ஒருவரை கடத்துவதன் மூலமாக, முடிவுகள் மாற்றியமைக்கப்படலாம் என்று அவர் நம்பினார்.

ஆரம்பத்தில் அவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று தனக்கு புரியவில்லை என்று விளக்கியிருந்த மேஜர் லாங்லாண்ட், "அவர்கள் என்னை கொல்வது பற்றிதான் பேசுகிறார்கள் என்று நினைத்தேன். வாழ்க்கையில் எது நடக்கவேண்டுமோ அது நடந்தே தீரும். அதனால், வரபோவது குறித்து நான் கவலைகொள்ளவில்லை," என்று தெரிவித்துள்ளார்.

அவர்களின் திட்டம் நடக்காது என்று தெரிந்த ஆறு நாட்களுக்குப் பிறகு அவரை விடுதலை செய்தனர். ஆனாலும், அவர்கள் எல்லோரும் அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

பிறகு, மேலும் வடக்கு நோக்கி பயணித்த அவர், சித்ரலில் உள்ள ஒரு பள்ளியில் பொறுப்பேற்றார். அங்குதான், இளவரசி டயானாவை அவர் சந்தித்தார். ஆயிரக்கணக்கானோரின் வாழ்க்கையை அவர் அங்கு மாற்றினார்.

வெறும் 80 குழந்தைகளுடன் தொடங்கிய அந்த பள்ளி, 94 வயதில் அவர் ஓய்வுபெற்ற போது, 800 மாணவர்களை கொண்டிருந்தது. பல முதன்மை பல்கலைக்கழகங்களில் தன் மாணவர்களுக்கு படிக்கும் வாய்ப்பு கிடைப்பது குறித்து மட்டும் கூறாமல், பள்ளியில் அதிகரித்துவரும் மாணவிகளின் எண்ணிக்கை குறித்து பேசினார்.

ஒரு முன்னாள் மாணவரின் நினைவுகள்

பெஷாவர் பல்கலைக்கழகத்திலுள்ள பேராசிரியர் ஃபர்ஹத் தமஸ், "சித்ரலில் இருந்த பல ஏழை மக்களை அவர் தேற்றினார். முதல்நாள் பள்ளிக்கு சென்றது எனக்கு இன்னும் நினைவில் உள்ளது. பழைய துணிகளை அணிந்துகொண்டு, காலில் இருவேறு செருப்புகள் அணிந்திருந்தேன். காரணம், எனக்கு புத்தகம் வாங்கி தரவோ, பள்ளி சீறுடை வாங்கவோ என் பெற்றோரிடம் காசு இல்லை. ஆனால், என்னை ஊக்குவித்த அவர், வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ எனக்கு கற்றுத்தந்தார்." என்கிறார்.

"எனக்கு பெஷாவர் பல்கலைக்கழகத்தில் வேலை கிடைத்தபோது, அவருக்காக இனிப்புகள் வாங்கிக்கொண்டு போனேன். அதை அவர், அங்கிருந்த மாணவிகளுக்கு பகிர்ந்து கொடுத்தார். இதேபோல ஒரு நாள் அவர்கள் ஒவ்வொருவரும் தனக்கு இனிப்பு கொண்டுவந்து தரும் நிலைக்கு வர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்."

பாகிஸ்தானின் குக்கிராமங்களில் வாழ்ந்தாலும், தன்னால் முடிந்தவரையில் சிறுசிறு விஷயங்களில் அவர் ஆங்கிலேயராக வாழ்ந்தார். தினமும் ஓட்ஸ் கஞ்சி, வேகவைத்த முட்டைகள் மற்றும் இரண்டு குவளை தேநீர் குடித்தார்.

பள்ளிக்கு தேவையானவற்றை பள்ளியே செய்துகொள்ளும் வகையிலான ஒரு பொருளாதார நிலை இருக்கவேண்டும் என்பதில் கவனம் கொண்டிருந்த அவர், மாதம் $300 மட்டுமே சம்பளமாக ஏற்றுக்கொண்டார்.

அவரின் ஓய்விற்குப்பிறகு, தனது முன்னாள் மாணவர்களால் தயார்செய்து கொடுக்கப்பட்ட வீட்டில், ஐட்சிசன் பகுதியில் தனது இறுதி காலங்களை கழித்த அவர், ஜனவரி 2 ஆம் தேதி இயற்கை எய்தினார்.

தன் 12ஆம் வயதில், ஒரு சுயகொள்கையை வளர்த்துக்கொண்டதாக, 2010ஆம் ஆண்டு பிபிசிக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.

"நல்லவனாக இரு; நல்லதே செய் என்பது அது. அதன்படியே என் வாழக்கையை வாழ்ந்தேன்."

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: