You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கஜ புயல், தொடரும் சோகம்: சேதமடைந்த தென்னை மரங்களை குழிதோண்டி புதைக்கும் விவசாயிகள் - ஏன் எதனால்?
நாளிதழ்களில் இன்று வெளியான முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கே வாசகர்களுக்காக வழங்குகிறோம்.
இந்து தமிழ்: 'சேதமடைந்த தென்னை மரங்களை குழிதோண்டி புதைக்கும் விவசாயிகள்'
புயலால் சேதமடைந்த தென்னை மரங்களை அகற்ற மனமில்லாமல், தோப்புக்காவது உரமாகட்டும் எனக் கருதி பொக்லைன் உதவியுடன் குழி தோண்டி புதைத்து வருகின்றனர் விவசாயிகள் என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.
புயல் பாதிப்பால் தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, பேராவூரணி ஆகிய பகுதிகளில் 80 லட்சம் தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. மேலும், 10 லட்சம் தென்னை மரங்கள் தலைப்பகுதி (கொண்டை) மட்டும் முறிந்து சேதமடைந்தன.
பாதிக்கப்பட்ட தென்னை மரம் ஒன்றுக்கு நிவாரணமாக தமிழக அரசு ரூ.600-ம், மரத்தை அகற்ற ரூ.500-ம் என ரூ.1,100 வழங்குவதாக அறிவித்தது. இந்த நிவாரணம் போதாது என பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், வழக்கமாக தினமும் செல்வதுபோல தோப்புகளுக்குச் செல்லும் விவசாயிகள், அகற்றப்படாமல் குப்பை போல கிடக்கும் தென்னை மட்டைகளை எரித்து அகற்றி வருகின்றனர். மரங்களுக்கு உரிய விலை கிடைக்காத நிலையில், மனவேதனையில் இலவசமாகவாவது எடுத்துச்செல்லுங்கள் என்று பலரிடமும் கூறிவருகின்றனர்.
எப்படியாவது தென்னை மரங்களைத் துண்டு துண்டாக வெட்டி அகற்றினால் போதும் என்ற மனநிலையில் உள்ள விவசாயிகள், நமக்குதான் பயன்படவில்லை நிலத்துக்காவது உரமாகட்டும் எனக்கருதி பொக்லைன் உதவியுடன் தோப்பில் குழிதோண்டி தென்னை மரங்களைப் புதைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தினத்தந்தி: திருவாரூர் தேர்தல் தள்ளிவைக்கப்படுமா?
திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தும் சூழ்நிலை உள்ளதா? என்பது குறித்து அரசியல் கட்சிகளுடன் நடத்தப்பட்ட ஆலோசனை பற்றிய அறிக்கை தேர்தல் கமிஷனுக்கு அனுப்பப்பட்டது. இதனால் அந்த தொகுதியில் தேர்தல் தள்ளிவைக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்து உள்ளது என்கிறது தினத்தந்தி நாளிதழ்.
திருவாரூர் சட்டசபை தொகுதி உறுப்பினராக இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அடைந்ததால், அந்த தொகுதிக்கு வருகிற 28-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 3-ந் தேதி தொடங்கியது. வருகிற 10-ந் தேதியுடன் மனு தாக்கல் முடிவடைகிறது.
இந்த தொகுதியில் தி.மு.க. சார்பில் பூண்டி கலைவாணன் போட்டியிடுகிறார். அ.ம.மு.க. வேட்பாளராக எஸ்.காமராஜ் அறிவிக்கப்பட்டு உள்ளார். ஆளும் அ.தி.மு.க. இன்னும் தனது வேட்பாளரை அறிவிக்கவில்லை.
தொகுதியில் கட்சிகளின் தேர்தல் பணிகள் தொடங்கிவிட்டன.
இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா நேற்று முன்தினம் டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் ஆரோராவை நேரில் சந்தித்து, கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றான திருவாரூரில் இன்னும் நிவாரண பணிகள் முழுமையாக முடிவடையவில்லை என்றும், மக்களும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்றும், எனவே திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
இதைத்தொடர்ந்து, அந்த மனுவை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவுக்கு அனுப்பிவைத்த தேர்தல் கமிஷன், திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான உகந்த சூழ்நிலை உள்ளதா? என்பது குறித்து சனிக்கிழமை(அதாவது நேற்று) மாலைக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு கேட்டுக்கொண்டது.
அதன்பேரில் சத்யபிரதா சாகு, தொகுதியில் தேர்தல் நடத்தக்கூடிய சூழ்நிலை உள்ளதா? என்பது குறித்து ஆலோசனை நடத்தி அறிக்கை வழங்குமாறு திருவாரூர் மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான நிர்மல்ராஜை கேட்டுக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் நேற்று தனது அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதி நிதிகள் கூட்டத்தை கூட்டி அவர்களுடைய கருத்துகளை கேட்டு அறிந்தார்.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள், இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
அவர்களுடைய கருத்துகளை கேட்டு அறிந்த நிர்மல்ராஜ், "நீங்கள் தெரிவித்த கருத்துகள் தலைமை தேர்தல் கமிஷனரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்" என்று கூறினார்.
- இவ்வாறாக அந்நாளிதழ் விவரிக்கிறது.
தினமணி: பொருளாதார வல்லரசு ஆவதற்கு நல்ல தலைமை அவசியம்
உலக அளவில் வலிமைமிக்க பொருளாதார சக்தியாக இந்தியா உருவாக நாட்டுக்கு நல்ல தலைவரும், அதற்குரிய சரியான கொள்கை திட்டங்களும் அவசியம் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார் என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.
ஐஐடி மும்பை தொழில் முனைவோர் குழு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சனிக்கிழமை மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது: காலத்துக்கு ஒவ்வாத 1400 தொன்மையான சட்டங்கள் அகற்றப்பட்டு, பிரதமர் மோடியின் தலைமையில் நல்லாட்சி நடைபெற்று வருவதால், வளர்ச்சித் திட்டங்கள் சாத்தியமாகி வருகிறது. உரிய கொள்கைகளை பின்பற்றும் பட்சத்தில் வலிமைமிக்க பொருளாதார சக்தியாக இந்தியா உருவாகும் என நான் நம்புகிறேன். தற்போதைய நிலையில் மோசமான ஆட்சி அமைய விடாமல், உரிய கொள்கைகளை வகுக்க வேண்டியது அவசியமாகிறது. நான் இங்கு அரசியல் பேச வரவில்லை. ஜனநாயகமும், நாட்டின் வளர்ச்சியும் செழித்தோங்க வேண்டுமானால் நாட்டிற்கு நல்ல தலைமை அமைய வேண்டியது அவசியம்.
புதிய கண்டுபிடிப்புகளாலும், தொழில்நுட்பங்களாலும் நமக்கு சிறந்த எதிர்காலம் உண்டு என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
உலகின் முதன்மையான பொருளாதார வல்லரசாக இந்தியா உருவெடுக்க வாய்ப்புள்ளது. இந்தியா தலைசிறந்த பொருளாதார சக்தியில் முதலிடம் பெறக்கூடிய அனைத்து வாய்ப்புகளையும், திறமைகளையும் நாம் பெற்றிருக்கிறோம். நாட்டின் முன்னேற்றத்துக்கு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மற்றும் வளங்கள் மட்டுமின்றி முடிவெடுக்கும் திறன், வெளிப்படைத்தன்மை, குழுப்பணி, தொலைநோக்கு பார்வை, அர்ப்பணிப்பு போன்றவையும் கட்டாயம்.
அதற்கு அரசு பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் ஏற்கெனவே, 1400 தொன்மையான தேவையில்லாத சட்டங்களை மீறித்தான் இதுவரை வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டுள்ளோம்.
எங்களது நல்லாட்சிக்கும், வளர்ச்சித் திட்டங்களுக்கும் எப்போதும் முடிவு கிடையாது. நாட்டின் வளர்ச்சிக்கு பொருளாதார முன்னேற்றமும், வேலைவாய்ப்புத் திட்டங்களையும் பெருக்க அரசுக்கு நீங்கள் உதவ வேண்டும்.
ஊரகப் பகுதிகளில் வேளாண் தொழிலில் அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன. ஊரக வேளாண் பொருளாதார வளர்ச்சியில் நாடு கவனம் செலுத்தும் அதேவேளையில், புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளையும், அதற்குத் தேவையான பயிற்சிகளையும் அளிக்க வேண்டும். எனவே, ஊரகப் பகுதியில் வேளாண் தொழில் வளர்ச்சிக்கு முன்னுரிமை வழங்குவது தொடர்பாக அரசு கொள்கை ரீதியான முடிவெடுக்க வேண்டும். இதேபோல, சுற்றுலா மற்றும் வனத்துறை மேம்பாட்டிலும் கவனம் செலுத்த வேண்டும். வனம் சார்ந்த தொழிற்சாலைகளின் எண்ணிக்கையை உயர்த்துவதிலும் முன்னுரிமை வழங்க வேண்டும்.
அதற்கு வளர்ச்சியை மையமாக கொண்ட கொள்கை முடிவுகளை மேற்கொண்டால் நாடு மாற்றத்தை நோக்கி செல்வது உறுதி என்று அவர் பேசியதாக விவரிக்கிறது அந்நாளிதழ்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'கூடுதல் உதவித் தொகை வேண்டும் - சென்னை ஐ.ஐ.டி ஆய்வு மாணவர்கள்'
சென்னை ஐ.ஐ.டி ஆய்வு மாணவர்கள் கூடுதல் உதவித்தொகை கேட்டு அரசாங்கத்திடம் மனு அளித்துள்ளனர் என்கிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி.
1800 பேர் கையெழுத்திட்ட இந்த மனுவினை மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், பல்கலைக் கழக மானிய குழு உள்ளிட்டவர்களுக்கு அனுப்பப்பட்டதாக அந்நாளிதழ் விவரிக்கிறது.
தற்போது இளம் ஆய்வாளர்கள் 25,000 ரூபாய் உதவித் தொகையும், மூத்த ஆய்வு மாணவர்கள் 28,000 ரூபாய் உதவித் தொகை பெறுவதாகவும், இந்த தொகையானது 45 ஆயிரம் மற்றும் 55 ஆயிரமாக உயர்த்த அம்மாணவர்கள் கோருவதாகவும் விவரிக்கிறது அந்நாளிதழ்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்