You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அர்விந்த் கெஜ்ரிவால் ஆபாச படத்துக்கு 'லைக்' போட்டாரா? உண்மை என்ன?
செய்திகளின் உண்மைத்தன்மையை கண்டறியும் பிபிசி குழுவின் ஆய்வு இது .
டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் ஆபாசப் படம் பார்த்து அதற்கு விருப்பக்குறியிட்டதாக கூறி கேலி கிண்டலுக்குள்ளானார்.
தனது ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக செயல்படும் டெல்லி எம்.எல்.ஏ கபில் மிஸ்ரா இவ்விவரத்தை கடந்த வியாழக்கிழமை காலையில் ட்வீட் மூலம் வெளியிட்டார்.
''டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ட்விட்டரில் ஆபாச படம் பார்த்திருக்கிறார். நேற்று இரவு அவர் ஆபாச படத்துக்கு விருப்பக்குறியிட்டுளார்'' என அவர் குறிப்பிட்டிருந்தார்.
மிஸ்ரா பகிர்ந்த காணொளி, டெல்லி முதல்வர் ஆபாச காணொளியை பார்த்தற்கான ஆதாரமாக பார்க்கப்பட்டது. ட்விட்டரில் மிஸ்ரா பகிர்ந்த காணொளி 60 ஆயிரத்துக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டது. மேலும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் இதை பகிர்ந்திருந்தார்கள்.
கபில் மிஸ்ரா மட்டுமின்றி டெல்லி பாஜக செய்தி தொடர்பாளர் தேஜிந்தர் பால் சிங் பக்கா மற்றும் பாஜகவின் தகவல் தொடர்பு அமைப்பின் தலைவர் புனித் அகர்வால், அகாலிதள தேசிய செய்தி தொடர்பாளர் மஞ்சிந்தர் சிங் சிர்ஸா ஆகியோர் இதே போன்ற காணொளியை பகிர்ந்தனர். இதனால் பல்லாயிரக்கணக்கான மக்களை சென்றடைந்தது இக்காணொளி.
ஆனால் எங்களது ஆய்வில், அக்காணொளியில் இருந்தது நிச்சயமாக ஒரு நிர்வாண ஆண் என்றும் ஆனால் ஆபாச காணொளி எனக்கோருவது தவறானது என்பதையும் அறிந்தோம்.
ஆபாசக் காணொளியை அர்விந்த் கெஜ்ரிவால் பார்த்ததாக கோரப்படும் ஓரு காணொளிக்கு டெல்லி முதல்வர் கடந்த புதன்கிழமை இரவு விருப்பக்குறி இட்டது உண்மையே.
இந்த காணொளியை வெளியிட்டவர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த எழுத்தாளரும் பிரிட்டனில் வழக்குரைஞராக பணியாற்றும் நபருமான் ஹெலன் டெல். கடந்த புதன்கிழமை காலையில் இவர் ட்விட்டரில் வெளியிட்ட காணொளிக்கு இதுவரை 7 மில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளது. 32 ஆயிரம் மக்கள் விருப்பக்குறி இட்டுள்ளனர்.
இக்காணொளி இணையதளத்தில் மிகவும் விரும்பப்பட்ட ஒன்று என ஹெலன் டெல் காணொளியை பகிர்ந்தபோது எழுதியிருக்கிறார்.
இக்காணொளி ஜப்பானைச் சேர்ந்த நகைச்சுவை நடிகர் கஜூஹிஸா உகுசா என்பவருக்குச் சொந்தமானது. உணவு மேசையில் துடைக்கப் பயன்படுத்தும் அளவிலான துணியை கொண்டு அபாயகரமான சாகசம் செய்வதில் இவர் வல்லவர்
கஜூஹிஸா கடந்த 10 ஆண்டுகளாக மேடை நகைச்சுவை நடிகராக உள்ளார். ஜப்பான் தொலைக்காட்சி சேனல்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் இவர் பங்கேற்பாளாக இருந்துள்ளார். தனது திறமை மூலமாக ஒரு ரியாலிட்டி ஷோவில் அரை இறுதிப்போட்டி வரை வந்தார்.
அவருக்கு யூடியூபில் 5000 பேர் சப்ஸ்கிரைபராக உள்ளனர். ட்விட்டரில் 34 ஆயிரம் பேரும் இன்ஸ்டாகிராமில் 1.25 லட்சம் பேரும் அவரை பின்தொடர்கின்றனர்.
யூ-டியூப், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் சர்வதேச தர நிர்ணய விதிகளின் படி கஜூஹிஸாவின் காணொளிகள் ஆபாச காணொளிகளாக கருதப்படவில்லை. இவை ஒரு கலையாக கருதப்பட்டுள்ளது.
உதாரணமாக, யூ-டியூபின் நிர்வாண மற்றும் பாலியல் உள்ளடக்க கொள்கையின் படி ஆபாச காணொளிகள் அவர்களது தளத்தில் தடை செய்யப்பட்டுள்ளன. ஆபாச காணொளிகள் என அறியப்பட்டால் அவை நீக்கப்பட்டுவிடும். ஆனால் நிர்வாணத்தை கல்வி, ஆவணப்படுத்தல், அறிவியல் அல்லது கலை சார்ந்த விஷயங்களுக்காக பயன்படுத்தினால் அவை ஆபாசக் காணொளியாக முத்திரை குத்தப்படாது.
கஜூஹிஸா ஆடையின்றி செய்யும் சாகச செயல்களை மக்களில் பலர் விமர்சித்துள்ளனர். சமூக வலைதளத்தில் சிலர் அதை ஆபாசக் காணொளியாக பார்க்கின்றனர். தொடர் கேலி கிண்டல் காரணமாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அந்த ட்வீட்டுக்கு தான் விடுத்திருந்த விருப்பக்குறியை நீக்கியுள்ளார்.
எனினும், டெல்லி முதல்வர் ஆபாச படம் பார்த்து மாட்டிக்கொண்டதாக வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தவறானவை .
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :