You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'டிரம்ப்பின் பிடிவாதமும், முடக்கப்பட்டுள்ள அரசும்' - அமெரிக்காவில் நடப்பது என்ன?
'கவர்ன்மென்ட் ஷட் டவுன்' என்று அழைக்கப்படும் அமெரிக்க அரசு செயல்பாடுகள் முடக்கம் மூன்றாவது வாரமாகத் தொடர்ந்து வரும் சூழ்நிலையில், இதனை பல ஆண்டுகள் தொடர கூடத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறி உள்ளார்.
அமெரிக்காவில் தொடர்ந்துவரும் அரசு செயல்பாடு முடக்கம், அந்நாட்டில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. மெக்சிகோ எல்லையில் சுவர்கட்டும் அதிபர் டிரம்பின் திட்டத்துக்கு நிதி ஒதுக்க காங்கிரஸ் மறுத்து வரும் நிலையில் ஏற்பட்ட சிக்கலால், பல்வேறு அரசுத் துறைகளுக்கு நிதி ஒதுக்குவதற்கான நிதி மசோதா நிறைவேற்றப்படாமல் அரசுப் பணிகள் முடக்கம் நடந்துவருகிறது.
கவர்ன்மென்ட் ஷட் டவுன் என்று கூறப்படும், அரசுப் பணிகள் முடக்கம், அமெரிக்காவுக்கு புதிதில்லை என்றபோதும், தற்போது அது மூன்று வாரமாக தொடர்ந்து வருவது நாட்டில் கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக ஏறத்தாழ 8 லட்சம் ஊழியர்களுக்கு சம்பளம் தரப்படாததால், அதன் மோசமான விளைவுகளை அம்மக்கள் அனுபவித்து வருகின்றனர்.
என்ன சொல்கிறார் டிரம்ப்?
காங்கிரஸை மீறி செயல்பட தேசிய அவசரநிலையை பிரகடனப்படுத்தி மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டுவேன் என ஜனநாயகக் கட்சியில் உயர் பொறுப்புகளில் உள்ளவர்களை சந்தித்த பின் டிரம்ப் கூறி உள்ளார்.
சுவருக்கான நிதி ஒதுக்கப்படும் வரை நான் எந்த மசோதாவிலும் கையெழுத்திடப் போவதில்லை என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் ஜனநாயகக் கட்சியினரை சந்தித்த பின் டிரம்ப், அந்த சந்திப்பு மிகவும் ஆக்கப்பூர்வமான சந்திப்பாக இருந்ததாக கூறினார்.
ஆனால், அவ்வாறாக அமையவில்லை என்பது டிரம்பின் பேச்சிலிருந்து தெரிகிறது.
டிரம்ப், "என்னால் செய்ய முடியும். தேசிய அளவிலான அவசர நிலையை பிரகடனப்படுத்தி, அந்த சுவரை விரைவாக கட்ட முடியும். இது அந்த சுவரை கட்டுவதற்கான மற்றொரு வழி" என்று கூறி உள்ளார்.
வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர், இந்த வெள்ளிக்கிழமை கூட்டம் சச்சரவுடன் முடிந்ததாக கூறுகிறார்.
செய்தியாளர்களிடம் பேசிய ஜனநாயகக் கட்சியின் செனட் தலைவர் ஷூமர், "அரசு முழுமையாக செயல்பட வேண்டும் என நாங்கள் கோரினோம். ஆனால் டிரம்ப் மறுத்துவிட்டார்" என்றார்.
மேலும் அவர், "அரசினை பல மாதங்கள், ஏன் ஆண்டுகள் கூட முடக்க தயாராக இருப்பதாக டிரம்ப் எங்களிடம் கூறினார்" என்று தெரிவித்தார்.
அரசு முடக்கம்
முழுமையாக அரச முடங்கவில்லை என்றாலும், உள்நாட்டு பாதுகாப்பு, சட்டம், வீட்டு வசதி, விவசாயம், வணிகம் உள்ளிட்ட ஒன்பது துறைகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் ஏறத்தாழ 8 லட்சம் ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரசாங்கம் செயல்படாமல் இருப்பதன் விளைவாக தாங்கள் மோசமான விளைவுகளை சந்திப்பதாக சமூக ஊடகங்களில் மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக அமெரிக்க பூர்வகுடி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தரப்பட வேண்டிய கணிசமான நிதி அரசு முடங்கி உள்ளதால் தரப்படாமல் உள்ளது.
ஊழியர்கள் இல்லாததால் பூங்காக்களில் குப்பைகள் மலை போல குவிந்துள்ளன.
அரசு முடங்கி உள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் #ShutdownStories என்ற ஹாஷ்டாக்கில் தங்கள் கருத்துகளை பகிர்ந்துள்ளனர்.
அரசு முடங்குவது இதுதான் முதல் முறையா?
தரவுகளை ஆராய்ந்து பார்த்தால் கடந்த காலங்களில் இதனைவிட அதிகளவிலான நாட்கள் அரசு முடங்கி இருப்பது தெரிய வருகிறது. அது குறித்த அட்டவணையை இங்கே பகிர்கிறோம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்