You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
முரண்டு பிடிக்கும் டிரம்ப், பரிதவிக்கும் மக்கள்- என்ன நடக்கிறது அமெரிக்காவில்?
முரண்டு பிடிக்கும் டிரம்ப்
அமெரிக்காவில் தொடர்ந்துவரும் அரசு செயல்பாடு முடக்கம், அந்நாட்டில் மோசமான விளைவுகளைஏற்படுத்தி வருகிறது. மெக்ஸிகோ எல்லையில் சுவர்கட்டும் அதிபர் டிரம்பின் திட்டத்துக்கு நிதி ஒதுக்க காங்கிரஸ் மறுத்து வரும் நிலையில் ஏற்பட்ட சிக்கலால், பல்வேறு அரசுத் துறைகளுக்கு நிதி ஒதுக்குவதற்கான நிதி மசோதா நிறைவேற்றப்படாமல் அரசுப் பணிகள் முடக்கம் நடந்துவருகிறது.
கவர்ன்மென்ட் ஷட் டவுன் என்று கூறப்படும், அரசுப் பணிகள் முடக்கம், அமெரிக்காவுக்கு புதிதில்லை என்றபோதும், தற்போது அது 12 நாள்களாகத் தொடர்ந்து வருவது நாட்டில் கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக ஏறத்தாழ 8 லட்சம் ஊழியர்களுக்கு சம்பளம் தரப்படாததால், அதன் மோசமான விளைவுகளை அம்மக்கள் அனுபவித்து வருகின்றனர்.
எல்லையில் சுவர் கட்டும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படும் வரை அரசாங்க முடக்கம் தொடரும் என டிரம்ப் கூறி உள்ளார்.
அரசாங்கம் செயல்படாமல் இருப்பதன் விளைவாக தாங்கள் மோசமான விளைவுகளை சந்திப்பதாக மக்கள் சமூக ஊடகங்களில் மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
உள்நாட்டு பாதுகாப்பு, சட்டம், வீட்டு வசதி, விவசாயம், வணிகம் உள்ளிட்ட ஒன்பது துறைகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.
பாஜக-வின் இந்துத்துவ பௌலிங், சி.பி.எம்.மின் பெண்ணுரிமை பேட்டிங்
பாலின சமத்துவத்தை வலியுறுத்தி கேரளாவில் 620 கி.மீ. மனித சங்கிலி ஒன்றை ஏற்பாடு செய்தது கேரள மாநில கம்யூனிஸ்ட் அரசு. மறுநாளே இரண்டு பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் ஐயப்பன் கோயிலில் நுழைந்து வரலாறு படைத்துள்ளனர்.
பெண்கள் கோயில் நுழைவை முன்னிறுத்தி பாஜக இதுவரை இந்துத்துவ ஆயுதத்தை கையில் எடுத்துவந்த நிலையில், பெண்ணுரிமை ஆயுதத்தின் துணையோடு இப்போது களத்தில் இறங்கியுள்ளது ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.எம்).
சபரிமலையில் வயது வேறுபாடு இல்லாமல் பெண்கள் வழிபாடு செய்ய அனுமதித்து இந்திய உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாத இறுதியில் தீர்ப்பளித்தது.
அதையடுத்து, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல பெண்கள் முயன்றபோது அதை எதிர்த்து பாஜக ஆதரவு பெற்ற பெண்களும், ஆண்களும் சபரிமலைக்கு செல்லும் வழிகளில் சூழ்ந்து நின்று வன்முறைப் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
ஆனால், இந்தத் தீர்ப்பை வரவேற்ற கேரள இடதுசாரி அரசும்கூட போராட்டங்களைக் கணக்கில் கொண்டு, கோயிலுக்கு செல்ல முயன்ற பெண்களை பாதியிலேயே திருப்பி அனுப்பியது.
இது உச்சநீதிமன்றத் தீர்ப்பு என்பதை மறைத்து, கோயில் சம்பிரதாயத்தை அழிக்க முயலும் கம்யூனிஸ்ட் அரசின் சூழ்ச்சி என்பதாக சித்திரித்து, இந்து மதவாத அடிப்படையில் ஆதரவைத் திரட்ட பாஜக முயன்றது.
ஒப்பீட்டளவில் தம்மால் கால் பதிக்க முடியாத கேரள மாநிலத்தில் தமக்கு ஒரு அரசியல் பிடிமானத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கு இதனை பாஜக பயன்படுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
பாஜக-வுக்கு சபரிமலை தென்னகத்தின் அயோத்தியா? என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன.
இந்தப் பிரச்சனையின் அடிப்படையில் கேரளாவில் இந்துத்துவ அடிப்படையில் அரசியல் அணி திரட்டலை செய்ய பாஜக-வுக்கு வாய்ப்பளித்தால், கம்யூனிஸ்டுகள் ஆளும் ஒரே மாநிலமான கேரளாவில் அதன் இருத்தலுக்கே அச்சுறுத்தல் ஏற்படும் என்ற சூழ்நிலை நிலவியது. ஆனாலும் பினராயி விஜயன் அரசு பின்வாங்கவில்லை.
ஆனால், இதனை இந்துத்துவ அரசியல் பிரச்சனையாக மாற்றும் பாஜக-வின் திட்டத்துக்குள் சென்று மாட்டிக்கொள்ளாமல் நிதானமாகவும் விளையாடியது சி.பி.எம்.
சிலந்தியை கண்டு அலறல்
புத்தாண்டு தினத்தன்று சிலந்தியை காப்பாற்ற மேற்கு ஆஸ்திரேலிய போலீஸ் விரைந்த சுவராஸ்யமான சம்பவம் இது.
சிலந்திகளின் மீதான "தீவிர பயம்" கொண்ட ஒருவரால், புத்தாண்டு தினத்தன்று மேற்கு ஆஸ்திரேலிய போலீசாருக்கு அவரச தொலைபேசி உதவி எண்ணுக்கு அழைப்பு வந்தது.
"நீ ஏன் சாகக்கூடாது" என்று ஒரு வீட்டில் இருந்து கத்தும் குரல் தொடர்ந்து கேட்டதை அடுத்து, சாலையில் சென்று கொண்டிருந்த ஒருவர் வேறு ஏதோ பிரச்சனை என நினைத்து அவசர உதவி எண்ணுக்கு அழைப்பு விடுத்ததாக போலீசார் கூறுகின்றனர்.
ஆனால் பெர்த் புறநகர் பகுதியில் இருந்த அந்த குறிப்பிட்ட வீட்டுக்கு சென்றபோது, வீட்டில் இருந்த ஒருவர் "நீ ஏன் சாகக்கூடாது" என்று கேட்டுக் கொண்டு ஒரு சிலந்தியை கொல்ல முயற்சித்துக் கொண்டிருப்பதை பார்த்தார்கள்.
இந்த சம்பவத்தில் சிலந்தியைத் தவிர வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று போலீசார் விடுத்த ட்விட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.
விரிவாக படிக்க:சிலந்தியை கண்டு அலறியவரை காப்பாற்றிய ஆஸ்திரேலிய போலீஸ்
தலித்துகள் நுழைந்ததால் சுத்தீகரணம் செய்யப்பட்டதா மதுரை மீனாட்சியம்மன் கோயில்?
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இரு பெண்கள் சுவாமி தரிசனம் செய்ததையடுத்து கோயில் மூடப்பட்டு, சுத்தீகரணச் சடங்குகள் செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. 80 ஆண்டுகளுக்கு முன்பாக தமிழகத்தில் ஆலயப் பிரவேசம் நடந்தவுடன் இதேபோல சுத்தீகரணச் சடங்குளைச் செய்ய வேண்டுமென இந்து அமைப்புகளும் கோவில் பட்டர்களும் கோரினர். அதன் பிறகு என்ன நடந்தது?
1939ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் தேதி சனிக்கிழமையன்று காலை 8.50 மணிக்கு தமிழ்நாடு ஹரிஜன சேவா சங்கத்தைச் சேர்ந்த வைத்தியநாத அய்யரும் அந்த அமைப்பின் செயலர் எல்.என். கோபாலசாமியும் ஐந்து தாழ்த்தப்பட்டவர்களையும் ஒரு நாடார் இனத்தைச் சேர்ந்தவரையும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் அழைத்துச் சென்றனர்.
வரலாற்றில் ஆலயப் பிரவேச நிகழ்வு என்று குறிக்கப்படும் இந்த நிகழ்வில், பி. கக்கன், உசிலம்பட்டி வி. முத்து, மேலூர் பி.ஆர். பூவலிங்கம், வி.எஸ். சின்னய்யா, முருகானந்தம் ஆகிய ஐந்து தாழ்த்தப்பட்டவர்களும் எஸ்.எஸ். சண்முகம் நாடாரும் மீனாட்சியம்மன் கோயிலுக்குள் நுழைந்தனர்.
அமெரிக்காவின் அரசியல் வரலாற்றை மாற்றும் 116 பெண்கள்
அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரசின் 116வது பதவியேற்பில், வரலாறு காணாத அளவு பெண் செனட்டர்கள் பதவியேற்கவுள்ளனர். இதையொட்டி, வரும் ஜனவரி 3ஆம் தேதி வரலாறு படைக்க காத்திருக்கிறது அமெரிக்கா.
2016ஆம் ஆண்டு, அதிபர் டிரம்ப் பதவியேற்ற பிறகு, லட்சக்கணக்கான மகளிர் அவருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்நாட்டின் இடைக்கால தேர்தல் நெருங்கிய சூழலில், ஜனநாயகக்கட்சி வேட்பாளராக களமிறங்கப் பல பெண்கள் விரும்பினர். அதற்கு முந்தைய ஆண்டு, அதே கட்சி பெண்களின் எண்ணங்களுக்கு எதிர்மாறாக இது அமைந்தது.
அமெரிக்காவில் 1992ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், அதிரடியாக பெண் செனட்டர்களின் எண்ணிக்கை இரட்டிப்பானது. அதற்கு பிற்கு, 2018ஆம் ஆண்டை பெண்களின் ஆண்டு` என்று பரிந்துரைக்கும் அளவிற்கு இது மாறியுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :