You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சபரிமலையில் பெண்கள் தரிசனம்: பாஜக-வின் இந்துத்துவ பௌலிங், சி.பி.எம்.மின் பெண்ணுரிமை பேட்டிங்
- எழுதியவர், அ.தா.பாலசுப்ரமணியன்
- பதவி, பிபிசி தமிழ்
பாலின சமத்துவத்தை வலியுறுத்தி கேரளாவில் 620 கி.மீ. மனித சங்கிலி ஒன்றை ஏற்பாடு செய்தது கேரள மாநில கம்யூனிஸ்ட் அரசு. மறுநாளே இரண்டு பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் ஐயப்பன் கோயிலில் நுழைந்து வரலாறு படைத்துள்ளனர்.
பெண்கள் கோயில் நுழைவை முன்னிறுத்தி பாஜக இதுவரை இந்துத்துவ ஆயுதத்தை கையில் எடுத்துவந்த நிலையில், பெண்ணுரிமை ஆயுதத்தின் துணையோடு இப்போது களத்தில் இறங்கியுள்ளது ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.எம்).
சபரிமலையில் வயது வேறுபாடு இல்லாமல் பெண்கள் வழிபாடு செய்ய அனுமதித்து இந்திய உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாத இறுதியில் தீர்ப்பளித்தது.
அதையடுத்து, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல பெண்கள் முயன்றபோது அதை எதிர்த்து பாஜக ஆதரவு பெற்ற பெண்களும், ஆண்களும் சபரிமலைக்கு செல்லும் வழிகளில் சூழ்ந்து நின்று வன்முறைப் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
ஆனால், இந்தத் தீர்ப்பை வரவேற்ற கேரள இடதுசாரி அரசும்கூட போராட்டங்களைக் கணக்கில் கொண்டு, கோயிலுக்கு செல்ல முயன்ற பெண்களை பாதியிலேயே திருப்பி அனுப்பியது.
இது உச்சநீதிமன்றத் தீர்ப்பு என்பதை மறைத்து, கோயில் சம்பிரதாயத்தை அழிக்க முயலும் கம்யூனிஸ்ட் அரசின் சூழ்ச்சி என்பதாக சித்திரித்து, இந்து மதவாத அடிப்படையில் ஆதரவைத் திரட்ட பாஜக முயன்றது.
ஒப்பீட்டளவில் தம்மால் கால் பதிக்க முடியாத கேரள மாநிலத்தில் தமக்கு ஒரு அரசியல் பிடிமானத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கு இதனை பாஜக பயன்படுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
பாஜக-வுக்கு சபரிமலை தென்னகத்தின் அயோத்தியா? என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன.
நிதானமாக ஆடிய கம்யூனிஸ்ட்
இந்தப் பிரச்சனையின் அடிப்படையில் கேரளாவில் இந்துத்துவ அடிப்படையில் அரசியல் அணி திரட்டலை செய்ய பாஜக-வுக்கு வாய்ப்பளித்தால், கம்யூனிஸ்டுகள் ஆளும் ஒரே மாநிலமான கேரளாவில் அதன் இருத்தலுக்கே அச்சுறுத்தல் ஏற்படும் என்ற சூழ்நிலை நிலவியது. ஆனாலும் பினராயி விஜயன் அரசு பின்வாங்கவில்லை.
ஆனால், இதனை இந்துத்துவ அரசியல் பிரச்சனையாக மாற்றும் பாஜக-வின் திட்டத்துக்குள் சென்று மாட்டிக்கொள்ளாமல் நிதானமாகவும் விளையாடியது சி.பி.எம்.
கவிதா ஜக்காலா என்ற தெலுங்கு தொலைக்காட்சி செய்தியாளர் அக்டோபர் 19-ம் தேதி மிகப்பெரிய போலீஸ் படையின் பாதுகாப்புடன் ஐயப்பன் கோயிலுக்கு வெகு அருகில் சென்றார். பாஜக ஆதரவு போராட்டக்காரர்களின் எதிர்ப்பு அப்போது தீவிரமாக இருந்தது. இந்நிலையில், மாநில அரசின் உத்தரவுப்படி கவிதா திருப்பி அனுப்பப்பட்டார்.
ரெஹானா ஃபாத்திமா என்ற செயற்பாட்டாளரும் இதைப்போலவே திருப்பி அனுப்பப்பட்டார்.
இந்நிலையில், சபரிமலை கோயில் என்பது பக்தர்களுக்கானது, அது செயற்பாட்டாளர்களுக்கான இடமல்ல என்று கேரள அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்தார்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி பெண்கள் ஐயப்பன் கோயிலுக்கு வயது வேறுபாடு இல்லாமல் பெண்கள் அனுமதிக்கப்படவேண்டும் என்பதை சி.பி.எம். அரசு ஆதரித்த நிலையில், அமைச்சர் சுரேந்திரனின் கருத்து, சி.பி.எம்.மின் நிலைப்பாடு குறித்த குழப்பத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், எல்லா பெண்களையும் சபரிமலை கோயிலுக்குள் அனுமதிக்கும் உச்சநீதிமன்ற முடிவுக்கு ஆதரவாக செவ்வாய்க்கிழமை கேரளத்தில் ஒரு மிகப்பெரிய பெண்கள் மனித சங்கிலியை கேரள அரசு ஏற்பாடு செய்தது.
'வனிதா மதில்' என்று பெயரிடப்பட்ட இந்த 620 கி.மீ. நீள மனித சங்கிலி கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் தொடங்கி, காசர்கோடு வரை நீண்டது. சில இந்து அமைப்புகளும் இதில் பங்கேற்றன.
இந்த வெற்றிகரமான அணி திரட்டலுக்கு மறு நாளே, இரண்டு பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்துள்ளனர். இதில் போலீஸ் பாதுகாப்பு என்பதை, அரசின் ஆதரவு என்று புரிந்துகொள்ளவேண்டும்.
இதே போலீஸ் பாதுகாப்புடன், கவிதாவையும், ரெஹானா ஃபாத்திமாவையும் அக்டோபர் மாதமே தரிசனத்துக்கு இட்டுச் செல்ல அரசாங்கத்தால் முடிந்திருக்கும். ஆனால், இந்துக் கோயில் ஒன்றின் சம்பிரதாயத்தை கேரள கம்யூனிஸ்ட் அரசு மீற முயல்வதாக பாஜக செய்த பிரசாரம் உச்சத்தில் இருந்தது. ஆனால், கோயிலுக்குள் நுழையவேண்டும் என்றோ, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்தவேண்டும் என்றோ பெரிய இயக்கம் ஏதும் அப்போது இல்லை.
இப்போது வனிதா மதில் நிகழ்வின் மூலம், பாஜக-வின் இந்துத்துவ உரையாடலுக்கு மாற்றாக பெண்ணுரிமை உரையாடலை களத்தில் வெற்றிகரமாக கட்டமைத்துள்ளது சி.பி.எம்.
சபரிமலையில் சம்பிரதாயத்துக்கு மாற்றாக பெண்கள் நுழைவதை பெண்களே விரும்பவில்லை என்ற ஒரு தோற்றத்தை உருவாக்கும் வகையில், அக்டோபரில் சில நூறு பெண்களைத் திரட்டி போராட்டம் நடத்தியது பாஜக.
அந்தப் போராட்டம் ஊடகங்களை ஆக்கிரமித்தது. இப்போது அதற்கு பதிலடியாக பல லட்சம் பெண்களைக் கொண்டு ஒரு மாபெரும் இயக்கத்தை நடத்தி, சபரிமலை கோயிலில் நுழைவதை பெண்கள் விரும்புகின்றனர் என்ற பதிலடியைத் தந்த நிலையில் இரண்டு பெண்கள் கோயிலில் நுழைய ஆதரவளித்துள்ளது கேரள அரசு.
"ஒரு இடத்தில் பாஜக வென்றாலும்..."
இந்தப் பிரச்சனையை கம்யூனிஸ்டு அரசு கையாண்ட விதம் பற்றி கேரள எழுத்தாளர் பால் சக்காரியாவிடம் கேட்டபோது, தீர்ப்பு வெளியானதில் இருந்தே அதனை செயல்படுத்த கேரள அரசு உண்மையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், வகுப்புவாத மோதல்கள் தோன்றாத வகையில் இதனை செயல்படுத்தவேண்டும் என்று அது முயற்சித்தது.
வனிதா மதில் நிகழ்வு பெண்களை ஐயப்பன் கோயிலுக்குள் அனுமதிப்பதற்கான தன்னம்பிக்கையை கேரள அரசுக்கு வழங்கியது என்பது உண்மைதான். இதில் கிட்டத்தட்ட அரை கோடி பேர் பங்கேற்றனர். எந்த அரசாங்கத்துக்கும் அரசியல் பின்புலம், ஆதரவு தேவை. அது இயல்பானதுதான் என்றார் சக்காரியா.
தற்போது, இரண்டு பெண்கள் ஐயப்பன் கோயிலுக்குள் நுழைந்துள்ள நிலையில் அரசியல் பாஜக-வுக்கு ஆதரவாக சுழலுமா, கம்யூனிஸ்டுகளுக்கு ஆதரவாக சுழலுமா என்று கேட்டபோது, "திருவனந்தபுரம் தலைமைச் செயலகம் முன்பு பாஜக ஒரு சத்தியாக்கிரஹத்தை நடத்துகிறது. அதில் சுமார் 25 பேர்தான் பங்கேற்கிறார்கள். நான் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவன் இல்லை.
ஆனால், இந்த விஷயத்தை பினராயி விஜயன் கையாண்ட விதம் பாராட்டுக்குரியது. இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது. இதில் கேரளத்தில் ஒரு இடத்தைப் பெற்றாலும், இந்த விஷயத்தில் பாஜக வெற்றிபெற்றதாகவே நான் கூறுவேன்" என்றார் பால் சக்காரியா.
"சீர்திருத்த மரபில் பயணிக்கும் சி.பி.எம். அரசு"
இது பற்றிக் கருத்துத் தெரிவித்த ஃப்ரண்ட்லைன் ஆசிரியர் ஆர்.விஜயசங்கர் "நம்பிக்கைகள் பல விதம். மூட நம்பிக்கைகளை உடைத்தே வரலாறு முன்னேறி வந்திருக்கிறது. இப்படி மூடநம்பிக்கைகளை உடைப்பதேகூட ஒரு மரபுதான். அது சீர்திருத்த மரபு.
வைணவ மரபு இருப்பதைப் போலவே, அதற்கு மாறான சித்தர் மரபும் உண்டு. அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்த சீர்திருத்த மரபில் பயணிக்க சி.பி.எம். முயன்றுள்ளது.
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோதுகூட மதவாதத்துக்கு எதிராக கேரளாவில் மிகப்பெரிய மனித சுவர் ஏற்பாடு செய்யப்பட்டது. பல லட்சம் பெண்களைத் திரட்டி வனிதா மதில் நிகழ்ச்சியை நடத்த முடிகிற கேரள கம்யூனிஸ்ட் அரசினால், மிகப்பெரிய அளவில் சபரிமலை கோயிலில் பெண்களைக் கொண்டுவந்து குவித்திருக்க முடியும். ஆனால், அப்படிச் செய்யாமல் சி.பி.எம். மிகுந்த கவனத்துடன் இதனை கையாண்டுள்ளது.
பெண்கள் சபரிமலை கோயிலில் நுழைவதை பாஜக-வினர் எதிர்த்து போராட்டம் செய்தபோதே, சிபிஎம் கேரள மாநிலம் முழுவதிலும் பல இடங்களில் பெண்கள் நுழைவை ஆதரித்து பொதுக்கூட்டம் நடத்தியது. இதில் ஏராளமான மக்கள் கூடினர். இப்படி முதலில் மக்களைத் தயார் செய்யவேண்டும் என்பதே சிபிஎம்-மின் யோசனை என்றார் விஜயசங்கர்.
இது அரசியலில் எப்படி எதிரொலிக்கும், பாஜக-வின் இந்துத்துவ உரையாடலா, சிபிஎம்மின் பெண்ணுரிமை உரையாடலா எது செல்வாக்கு செலுத்தும் என்று கேட்டபோது, பாஜக-வே இந்துத்துவ உரையாடலை அரசியல் முழக்கமாக கையிலெடுக்காது என்றே தோன்றுகிறது. அவர்கள் இனி அதை தேசியவாதம் பெயரிலேதான் முன்னெடுப்பார்கள் என்று கருத்துத் தெரிவித்தார் விஜயசங்கர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்