தலித்துகள் தாக்கப்பட்ட பீமா கோரேகான்:ஓராண்டுக்கு பிறகு நிலை என்ன?

    • எழுதியவர், ஸ்ரீகாந்த் பங்காலே
    • பதவி, பிபிசி செய்தியாளர்

மகாராஷ்டிராவில், பீமா கோரேகானில் போர் நினைவு அஞ்சலி செலுத்த சென்ற தலித் சமூக மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் (ஜனவரி 1) ஓராண்டு நிறைவடைகிறது. தற்போது அங்கு நிலவரம் என்ன?

இருநூறு ஆண்டுகளுக்கு முன்னதாக பேஷ்வா படையினருக்கும், தலித் மக்களின் படையினருக்குமான மோதலில் தலித்துகள் வெற்றி பெற்றதன் நினைவாக எழுப்பப்பட்டுள்ள வெற்றித்தூணுக்கு அஞ்சலி செலுத்த சென்ற தலித்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

மஹாராஷ்டிராவின் பீமா கோரேகான் பகுதியில் தலித்துக்கள் நடத்திய பேரணிக்கு பிறகு, மும்பை- பூனே பகுதியில் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன.

பிரிட்டிஷ் ராணுவத்தில் படை வீரர்களாக இருந்த தலித்துக்கள் (மஹர்), பிராமணிய பேஷ்வாக்களுக்கு எதிராக சண்டையிட்டனர்.

1817-ம் ஆண்டு நடைபெற்ற சண்டையின் 200வது ஆண்டு நினைவு தினம் என்பதால், கடந்த ஆண்டு அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடு பெருமளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்த காலக்கட்டத்தில் தனது ராஜ்ஜியத்தை விரிவுபடுத்திக்கொண்டிருந்த பிரிட்டிஷ் அரசு, அதிக எண்ணிக்கையிலான தலித்துகளை தனது ராணுவத்தில் சேர்த்தது. அப்போது, மஹர்கள் மகாராஷ்டிராவில் தீண்டத்தகாதவர்களாக கருதப்பட்டனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற நினைவஞ்சலியில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து, புனே, மும்பை, அவுரங்காபாத் உள்ளிட்ட பிற நகரங்களில், தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து ரயில் மற்றும் சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றன.

இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டதுடன், கடைகளும் அடைக்கப்பட்டன. எதிர் தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டதால் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து முடங்கியது.

இந்த சம்பவங்கள் நடந்து ஓராண்டு முடிவடையும் நிலையில், இந்த ஆண்டு போர் நினைவு நாளன்று நடைபெறவிருக்கும் அஞ்சலியின்போது அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தவிர்ப்பதற்காக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக புணே மாவட்ட ஆட்சியர் நவல் கிஷோர் ராமிடம் பிபிசி பேசியது.

பீமா கோரேகான் நினைவு நாள் நிகழ்ச்சிக்காக மேற்கொள்ளப்பட்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?

கடந்த இரண்டு மாதங்களாகவே இது தொடர்பான நடவடிக்கைகளை தொடங்கிவிட்டோம். ஐந்து முதல் பத்து லட்சம் மக்களை சுலபமாக கையாளும் அளவுக்கு ஏற்பாடுகளை செய்திருக்கிறோம்.

நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வரும் வாகனங்களை நிறுத்துவதற்காக 11 இடங்களை ஏற்படுத்தியிருக்கிறோம். வாகன நிறுத்தும் இடங்களில் இருந்து நினைவுத்தூண் இருக்கும் இடத்திற்கு எங்களுடைய வாகனங்களில்தான் அவர்கள் செல்லவேண்டும். இதற்காக 150 பேருந்துகளை ஏற்பாடு செய்திருக்கிறோம். இதைத்தவிர, குடிநீருக்காக 100 டேங்கர் தண்ணீர் லாரிகளை ஏற்பாடு செய்திருக்கிறோம்.

நினைவுத்தூண் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் 7-8 கிலோமீட்டர் பகுதிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்தியிருக்கிறோம். கண்காணிப்பில் டிரோன் கேமராக்களும் பயன்படுத்தப்படும். பீமா கோரேகானுக்கு செல்லும் அனைத்து சாலைகளையும் செப்பனிட்டிருக்கிறோம். சாலைகள் நெடுகிலும் கழிவறை வசதிகளை ஏற்படுத்தியிருக்கிறோம்.

கடந்த ஆண்டு கலவரங்களினால் அந்தப் பகுதி மக்கள் அச்சமடைந்திருக்கிறார்களா?

இதற்காக மக்களுடன் சிறப்பாக ஒருங்கிணைப்பை ஏற்படுத்தியுள்ளோம். மக்களின் அச்சத்தைப் போக்குவதற்காக அவர்களை சந்தித்து பேசியிருக்கிறோம்.

15-20 கூட்டங்களில் நானே நேரிடையாக கலந்துக் கொண்டிருக்கிறேன். தொடர்ந்து அங்கிருக்கும் நிலைமையை கண்காணித்து வருகிறோம். எங்களுடைய முயற்சிகள் மற்றும் முன்னேற்பாடுகளால் மக்கள் திருப்தியடைந்துள்ளனர்.

பேரணி நடத்த எந்தெந்த அமைப்புகளுக்கு அனுமதி வழங்கப்ப்ட்டுள்ளது?

ஐந்து முதல் ஆறு அமைப்புகளுக்கு பேரணி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சற்று முன்னதாகவே அனுமதி கோரியவர்களுக்கு உடனடியாக கொடுத்துவிட்டோம்.

கடந்த ஆண்டு நடைபெற்ற கலவரத்தைப் போன்று இந்த ஆண்டு பேரணியிலும் பிரச்சனை ஏற்படும் என்ற அச்சம் இருப்பது உண்மைதானே?

அதை தவிர்ப்பதற்கான பல முன்னேற்பாடுகளுடன் சில கட்டுப்பாடுகளையும் விதித்திருக்கிறோம். நினைவுத்தூணிற்கு 500 மீட்டர் தொலைவில் தான் பேரணி நடத்த அனுமதி கொடுத்திருக்கிறோம்.

பேரணி நடத்த நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கிறதா?

பேரணியில் பதற்றத்தை தூண்டுவது மற்றும் பிரிவினைவாத பேச்சுக்களை பேசக்கூடாது என்று கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறோம். பேரணி ஏற்பாட்டாளர்கள், நன்னடத்தை விதிமுறைகளை பின்பற்றவேண்டும். இல்லாவிட்டால், அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த ஆண்டு வன்முறை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதா?

2018 ஜனவரி முதல் நாளன்று நடைபெற்ற வன்முறை தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டவர்களுக்கு எதிராக தடை விதிக்கப்பட்டுள்ளது.

சம்பாஜி பிண்டே மற்றும் மிலிந்த் ஏம்வோடேவுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதா?

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சிலரைப் பற்றிய தகவல்கள் என்னிடம் இல்லை. ஆனால், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் இந்த ஆண்டு பீமா கோரேகானுக்குள் நுழையவே முடியாது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: