You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழகத்தில் இன்று முதல் பிளாஸ்டிக் தடை அமல்: விலக்கு அளிக்கப்பட்ட பொருட்கள் எவை?
தமிழ்நாட்டில் இன்று (ஜனவரி 1) முதல் ஒருமுறை பயன்படுத்தித் தூக்கியெறியும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாநில அரசு விதித்துள்ள தடை அமலுக்கு வருகிறது.
தமிழகத்தில் பிளாஸ்டிக்கை தடை செய்யும் அறிவிப்பை கடந்த ஜூன் 5-ஆம் தேதி தமிழக அரசு வெளியிட்டது. 2019-ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் தடிமன் வேறுபாடின்றி அனைத்துவிதமான பிளாஸ்டிக் பொருட்களையும் தடை செய்வதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார்.
இந்த பிளாஸ்டிக் தடை அறிவிப்பில் சில பொருட்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
விலக்கு அளிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் நிறுவனங்கள்
- வனத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறையில் நாற்றாங்காலுக்காக பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் விரிப்புகள்.
- ஏற்றுமதிக்காக மட்டுமே சிறப்பாக தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் அவற்றை உற்பத்தி செய்யும் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் அமைக்கப்பட்டுள்ள நிறுவனங்கள்
- பால் மற்றும் பால் பொருட்களான தயிர், எண்ணெய், மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான உறைகள்
- இந்திய தர நிர்ணய நிறுவனத்தால் சான்றளிக்கப்பட்ட மக்கி உரமாகும் தன்மைகொண்ட பிளாஸ்டிக் பைகள்
- உற்பத்தி தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் சீலிடப்பட்ட பிளாஸ்டிக் உறைகள்.
தடை செய்யப்பட்ட பொருட்கள்
தடிமன் வேறுபாடின்றி மக்காத பிளாஸ்டிக் பொருட்களான ஒற்றை பயன்பாடு பிளாஸ்டிக்குகள், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் குவளைகள், பிளாஸ்டிக் தட்டுகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள் (ஸ்ட்ரா), பிளாஸ்டிக் கைப்பைகள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்தல், பயன்படுத்துதல் மற்றும் சேமித்து வைத்தல் தடை செய்யப்படுவதாக தமிழக அரசின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் தடையின் அவசியம்
உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இந்த பிளாஸ்டிக் கழிவுகளின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
இந்தியாவில் நாளொன்றுக்கு 25,940 டன் அளவுள்ள பிளாஸ்டிக் கழிவுகள் உற்பத்தி செய்யப்படுவதாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறியுள்ளார். மேலும் இதில் 40% பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்படாமல் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துவதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கை கூறுகிறது.
2016-17 ஆண்டில் மட்டும் தமிழகத்தில் 79,114 டன் பிளாஸ்டிக் கழிவுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதில் சேகரிக்கப்படாத கழிவுகள் பல்வேறு வகைகளில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கின்றன.
தற்போது நாம் பயன்படுத்தி வரும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பயன்படுத்தக்கூடிய பொருட்களை தமிழக அரசு பட்டியலிட்டுள்ளது.
அதன்படி, வாழையிலை, பாக்குமட்டை, காகித சுருள், தாமரை இலை, கண்ணாடி மற்றும் உலோகத்தால் ஆன குவளைகள், மரப்பொருட்கள், காகித குழல்கள், துணி மற்றும் காகிதப் பைகள் உள்ளிட்டவை அடங்கிய பாரம்பரிய பொருட்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்