You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜாக்கிசான் திரைப்படம்: பாலியல் காட்சி நீக்காமல் ஒளிபரப்பு - தொலைக்காட்சி தலைவர் பணிநீக்கம்
ஜாக்கிசான் திரைப்படம்: பாலியல் காட்சி நீக்காமல் ஒளிபரப்பு
ஜாக்கிசான் திரைப்படமொன்றில் வந்த பாலியல் காட்சியை தணிக்கை செய்யாமல் ஒளிபரப்பிய பிராந்திய தொலைக்காட்சியின் தலைவரை இரான் அரசு தொலைக்காட்சியான ஐரிப் இடைநீக்கம் செய்துள்ளது.
ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்ளும் அந்தக் காட்சி கிஷ் தொலைக்காட்சியில் தணிக்கை செய்யாமல் ஒளிபரப்பானது. இந்த செயலானது ஐரிப்பின் விதிமுறைகளுக்கு எதிரானது.
ஒரு கோடி பேர் வெள்ள பாதிப்பை எதிர்கொள்வார்கள் - எச்சரிக்கும் அறிக்கை
பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான சர்வதேச அமைப்பான 'பருவநிலை மாற்றம் தொடர்பான அரசுகளிடை குழு' ஓர் சிறப்பு அறிக்கையை 2018 அக்டோபரில் வெளியிட்டது.
தொழிற்புரட்சிக்கு முன்பு இருந்ததைவிட புவியின் சராசரி வெப்பநிலை தற்போது 1 டிகிரி செல்ஷியஸ் கூடியுள்ள நிலையில், இது 1.5 டிகிரிக்கு மிகாமல் பாதுகாக்கவேண்டும் என்று இந்த சிறப்பு அறிக்கை இலக்கு நிர்ணயித்தது. ஆனால், 3 டிகிரி உயர்வை நோக்கி புவியின் வெப்பநிலை செல்லும் நிலையில் இந்த இலக்கை அடைவதற்கு, பாரதூரமான, முன்னெப்போதும் இல்லாத வகையிலான மாற்றங்களை சமூகத்தின் எல்லா அம்சங்களிலும் கொண்டுவரவேண்டும்.
இந்த மாற்றங்களை கொண்டுவருவதற்கு 2035க்குள் 2.4 டிரில்லியன் அமெரக்க டாலர் அளவுக்கு செலவாகும் என்கிறது இந்த அறிக்கை.
ஒருவேளை 1.5 டிகிரி செல்சியஸ் உயர்வுக்குள் கட்டுப்படுத்த முடியாமல் வெப்பநிலை உயர்வு 2 டிகிரி அளவுக்கு செல்லுமானால், கடலடி பவழப்பாறைகள் முற்றிலும் அழியும். உலக கடல் மட்டம் 10 செ.மீ. உயரும். 1 கோடி பேர் கூடுதலாக வெள்ளப் பாதிப்பை எதிர்கொள்ளும் நிலை ஏற்படும்.
கடல் வெப்பநிலை, கடல் அமிலத்தன்மை வெகுவாக அதிகரிக்கும், அரிசி, கோதுமை, சோளம் ஆகியவற்றை விளைவிக்கும் திறன் பாதிக்கப்படும். ஏற்கெனவே நாம் வந்தடைந்துள்ள, 1 டிகிரி வெப்பநிலை அதிகரிப்பு என்பதே அபாய கட்டம்தான் என இந்த அறிக்கையைத் தயாரித்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
3 ஆண்டு ஆய்வுக்குப் பிறகு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டது. புவி உயிர்க்கோளாக நீடிக்கவேண்டுமானால் என்ன செய்யவேண்டும் என்பது குறித்து விடுக்கப்பட்ட இறுதி எச்சரிக்கையாக இந்த அறிக்கை பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதா மரணம் - சந்தேக மரணம்
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தை சந்தேக மரணமாக வழக்குப் பதிவுசெய்து, சிறப்பு காவல்துறை அணியை அமைத்து விசாரணை நடத்த வேண்டுமென சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் கூறியிருக்கிறார். முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகன ராவ் மீதும் அவர் குற்றச்சாட்டுகளை சுமத்தியிருக்கிறார்.
"அந்த 75 நாட்களில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், சட்டமன்ற உறுப்பினர்களை, கட்சி நிர்வாகிகளைப் பார்க்கவே விடவில்லை. ஆனால், அவர் இட்லி சாப்பிட்டார், தோசை சாப்பிட்டார் எனக் கூறி 1 கோடியே 17 லட்சம் அவரது மருத்துவ செலவில் சேர்க்கப்பட்டுள்ளது. யார் இவ்வளவு சாப்பிட்டது? ஜெயலலிதா உடம்பு சரியில்லாமல் இருக்கும்போது பார்க்க வந்தவர்கள் வேறு இடங்களில் தங்குவதுதானே முறை? ஆனால், ஜெயலலிதாவால் விரட்டியடிக்கப்பட்டவர்கள் அங்கே தங்கி, மருத்துவமனையை விடுதியாக மாற்றி 1 கோடியே 17 லட்ச ரூபாய்க்கு இட்லியும் தோசையும் சாப்பிட்டார்கள் என்றால் அதில் என்ன நடந்தது? இதில் ஏதோ மர்மம் இருக்கிறது." என சி.வி. சண்முகம் குற்றம்சாட்டினார்.
ஜனவரி 28 - திருவாரூர் இடைத்தேர்தல்
திமுக தலைவர் மு.கருணாநிதியின் மறைவையடுத்து, காலியாக இருக்கும் திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஜனவரி 28-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதன் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 31-ம் தேதி நடக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கஜ புயல் காரணமாக திருவாரூர் இடைத்தேர்தல் அறிவிப்பு தள்ளிவைக்கப்பட்டது குறிப்படத்தக்கது.
திமுக அதிமுகவுக்கு அடுத்து பெரிய கட்சி ரஜினியின் மக்கள் மன்றம்
"தற்போது தமிழகத்திலுள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் ரஜினி மக்கள் மன்றத்துக்கு 30 நிர்வாகிகள் இருக்கிறார்கள். தமிழகத்தில் இருக்கும் 65,000-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் இதுபோன்ற ஒரு ஆள்பலம் தி.மு.க, அ.தி.மு.கவை அடுத்து ரஜினி மக்கள் மன்றத்துக்கு மட்டுமே இருக்கிறது." என்று காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், "இந்த சாதனையை ரஜினிகாந்த் மவுனமாக சாதித்து காட்டிவிட்டார். ஒரு கட்சியை தொடங்க வேண்டியதற்கான கட்டமைப்பை மிகக் கவனமாக கையாண்டு வெற்றி பெற்றிருக்கிறார். இதற்கு அடுத்த கட்டம் கட்சியை தொடங்குவது. அவ்வாறு தொடங்கப்படும் போது, ரஜினி மக்கள் மன்றத்தில் செயல்படக்கூடிய மனிதர்களை நீங்கள் பார்ப்பீர்கள்" என்றார்.
விரிவாக படிக்க: ரஜினி ஓராண்டு: சாதித்ததும், சறுக்கியதும் - ஓர் அலசல்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்