You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆஸ்திரேலியாவில் சிலந்தியை கண்டு அலறியவரை காப்பாற்றிய போலீஸ்
புத்தாண்டு தினத்தன்று சிலந்தியை காப்பாற்ற மேற்கு ஆஸ்திரேலிய போலீஸ் விரைந்த சுவராஸ்யமான சம்பவம் இது.
சிலந்திகளின் மீதான "தீவிர பயம்" கொண்ட ஒருவரால், புத்தாண்டு தினத்தன்று மேற்கு ஆஸ்திரேலிய போலீசாருக்கு அவரச தொலைபேசி உதவி எண்ணுக்கு அழைப்பு வந்தது.
"நீ ஏன் சாகக்கூடாது" என்று ஒரு வீட்டில் இருந்து கத்தும் குரல் தொடர்ந்து கேட்டதை அடுத்து, சாலையில் சென்று கொண்டிருந்த ஒருவர் வேறு ஏதோ பிரச்சனை என நினைத்து அவசர உதவி எண்ணுக்கு அழைப்பு விடுத்ததாக போலீசார் கூறுகின்றனர்.
ஆனால் பெர்த் புறநகர் பகுதியில் இருந்த அந்த குறிப்பிட்ட வீட்டுக்கு சென்றபோது, வீட்டில் இருந்த ஒருவர் "நீ ஏன் சாகக்கூடாது" என்று கேட்டுக் கொண்டு ஒரு சிலந்தியை கொல்ல முயற்சித்துக் கொண்டிருப்பதை பார்த்தார்கள்.
இந்த சம்பவத்தில் சிலந்தியைத் தவிர வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று போலீசார் விடுத்த ட்விட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளனர்.
"ஒரு சம்பவத்தை எதிர்பார்த்து செல்லும்போது, முற்றிலும் எதிர்பாராத வேறு ஒன்று நடப்பதை பார்க்கும் அனுபவம் எங்கள் பணியில் நடைபெறுவதுதான்" என்று போலீஸ் செய்தித் தொடர்பாளர் சாமுவேல் டின்னிசன், பிபிசியிடம் தெரிவித்தார்.
இது பற்றிய அவசர அழைப்பை மேற்கு ஆஸ்திரேலிய போலீசார் டிவிட்டரில் வெளியிட்டனர்.
பிறகு அதை நீக்கிவிட்டதாக கூறிய சாமுவேல் டின்னிசன், அதில் காவல்துறையின் உள் அமைப்புகள் இடம் பெற்றிருந்ததாக தெரிவித்தார்.
அந்த குறிப்பிட்ட சிலந்தி, எந்த வகையைச் சேர்ந்தது என்று தெளிவாக தெரியவில்லை.
ஆஸ்திரேலியாவில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சிலந்தி வகைகள் உள்ளன. அவற்றில், ரெட்பேக், ஃப்யூனெல் வெப் உட்பட பெரும்பாலான வகைகள் கடும் நச்சுத்தன்மை கொண்டவை.
இருந்தபோதிலும் 1981ஆம் ஆண்டில் இருந்து சிலந்திக் கடியால் யாரும் உயிரிழக்கவில்லை என்று ஆஸ்திரேலியாவைட் முதலுதவி அமைப்பு கூறுகிறது. மேலும், ஆஸ்திரேலியாவில் உள்ள சிலந்தி வகைகளில் 2,900 வகைகள் பாதிப்பு ஏற்படுத்தாதவை.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :