You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கெளரவர்கள் சோதனைக் குழாய் குழந்தைகள், ராவணனிடம் விமான நிலையங்கள்: பல்கலைக்கழக துணைவேந்தர்
ஸ்டெம் செல் மற்றும் சோதனைக் குழாய் மூலமாக பிறந்தவர்கள் கெளரவர்கள் என்றும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே ஏவுகணை தொழில்நுட்பம் குறித்து இந்தியாவுக்கு ஞானம் இருந்ததாகவும் இந்திய அறிவியல் காங்கிரஸ் மாநாட்டில் ஆந்திர பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஜி.நாகேஷ்வர் ராவ் கூறி உள்ளார் என்கிறது பி.டி.ஐ செய்தி முகமை.
சார்லஸ் டார்வினின் பரிணாம கோட்பாட்டிற்கு முந்தையது விஷ்ணுவின் பத்து அவதாரங்கள் என்றும் அந்தக் கூட்டத்தில் ராவ்பேசி உள்ளார் என்கிறது பி.டி.ஐ தகவல்.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் நடக்கும் இந்த நான்கு நாள் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோதி கடந்த வியாழன்று தொடங்கி வைத்தார்.
அஸ்திரமும், சாஸ்திரமும்
ராமர் அஸ்திரங்களையும், சாஸ்திரங்களையும் பயன்படுத்தினார். விஷ்ணு இலக்கை துரத்த சக்கர வியூக்கத்தை பயன்படுத்தினார். இவை இலக்கை தாக்கிய பின் மீண்டும் ஏவியவர்களிடமே வந்துவிடும் என்று ராவ் கூறி உள்ளார்.
"இலக்கை நோக்கி செலுத்தப்படும் ஏவுகணைகள் இந்தியாவிற்கு புதிதல்ல என்பதை இவை உணர்த்துகின்றன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அவை இருந்திருப்பது தெரிகிறது," என்று துணை வேந்தர் கூறி உள்ளார்.
மேலும் அவர், ராவணனிடம், புஷ்பக விமானம் மட்டும் இல்லை. அவரிடம் பல்வேறு அளவு மற்றும் திறனில் 24 விதமான விமானங்கள் இருந்ததாக ராமாயணம் கூறுகிறது என்று விவரித்துள்ளார்.
அவரிடம் இலங்கையில் ஏராளமான விமானங்கள் இருந்ததாகவும் கூறி உள்ளார்.
உயிரின் தோற்றம் நீரில் தொடங்கியதாக டார்வின் கூறுகிறார். விஷ்ணுவின் முதல் அவதாரமும் நீரில்தான் தொடங்கி உள்ளது. அதாவது மச்ச அவதாரம் என்று பரிணாம கோட்பாட்டை விஷ்ணுவுடன் ஒப்பிட்டு பேசி உள்ளார்.
மகாபாரதம்
மகாபாரதத்தை அறிவியலுடன் ஒப்பிட்டு பேசிய அவர், "காந்தாரிக்கு எப்படி நூறு பிள்ளைகள் இருக்க முடியுமென அனைவரும் வியந்தார்கள். இதனை ஒருவரும் நம்பவில்லை. ஆனால், இப்போது சோதனை குழாய் குறித்து பேசுகிறோம். மகாபாரதத்திலே இது குறித்து உள்ளது. கருத்தரித்த நூறு முட்டைகள் நூறு பானைகளில் போடப்பட்டதாக உள்ளது." என்று பேசி உள்ளார்.
நூறு கெளரவர்களும் ஒரு தாயிடமிருந்து பிறந்தவர்கள். இவை சோதனை குழாய் மற்றும் ஸ்டெம் செல் ஆராய்ச்சியால் சாத்தியமானது. ஆயிரமாண்டுகளுக்கு முன்பு நடந்தது. இதுதான் இந்நாட்டின் அறிவியல் என்று பேசி உள்ளார்.
மறுத்தலிப்பு
ஹோமிபாபா அறிவியல் கல்வி மையத்தை சேர்ந்த அனிகிட் சுலே இதனை மறுக்கிறார். உண்மையான ஆய்வுக்கு புறம்பானது இது என்கிறார்.
அவர், "சோதனைக் குழாய், ஏவுகணைகள், விமானங்கள் எல்லாம் நவீன தொழில்நுட்பங்கள். இவற்றை கொண்டுள்ள ஒரு நாகரிகம், இதற்கு காரணமான பிற தொழில்நுட்பங்களையும் கொண்டிருக்க வேண்டும். இதற்கு மின்சாரம் தேவை, உலோக, ஊந்துவிசை எல்லாம் தேவை. ஆனால் அவை இருந்ததற்கான எந்த அறிவியல் ஆதாரங்களும் இல்லை" என்று தெரிவிகிறார்.
பழங்கால இலக்கியங்களுக்கு தமக்கு பிடித்தது போல ஒரு விளக்கத்தை தருவது இப்போது ஒரு ட்ரெண்டாக மாறி உள்ளதாக சுலே கூறுகிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்