You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பெயர் மாற்றப்படும் இந்திய நகரங்கள்: இஸ்லாமிய வரலாற்றை அழிக்க நினைக்கிறதா பா.ஜ.க?
- எழுதியவர், செளதிக் பிஸ்வாஸ்
- பதவி, பிபிசி
இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு முக்கிய நகரங்கள் உள்பட நூற்றுக்கணக்கான நகரங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. உதாரணமாக பாம்பே 'மும்பை' என்றும், கல்கத்தா 'கொல்கத்தா' என்றும் மதராஸ் 'சென்னை' என்றும் பெயர் மாற்றப்பட்டது.
பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் வைக்கப்பட்ட பெயர்கள் மாற்றப்பட்டு, காலனித்துவ பெயர்கள் நிராகரிக்கப்பட்டன.
முன்னொரு காலத்தில் ஒரு இடத்தின் அடையாள பெருமை, கலாசாரத்தை உறுதி செய்வது, மொழி தேசியவாதம் போன்ற காரணங்களுக்காக நகரங்கள் பெயர் மாற்றப்பட்டன. ஆனால், தற்போது இந்து தேசியவாதத்தை அமைதிப்படுத்த நரேந்திர மோதி தலைமையிலான ஆளும் பா.ஜ.க, நகரங்களின் பெயர்களை மாற்ற புதிய உத்வேகத்தை காட்டி வருகிறது.
பா.ஜ.க ஆளும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிரிட்டிஷ் காலத்தின் பெருமையான ரயில் நிலையமான முகல்சராய் என்ற இடத்தை, தீனதயால் உபாத்யாயா என்று பெயர் மாற்றப்பட்டது.
அதே போல கடந்த மாதம், அலகாபாத் நகரம், பெரும் இந்து வழிபாட்டு தளம் என்ற பழங்கால அடையாளத்தை மீட்க 'ப்ரயக்ராஜ்' என்று பெயர் மாற்றப்பட்டது. மூன்று புனித ஆறுகள் சங்கமிக்கும் இடம் அலகாபாத்தில் உள்ளது. குறிப்பாக, அந்த நகரத்தின் 435 ஆண்டுகால பழமையான பெயர், முஸ்லிம் ஆட்சியாளரால் வைக்கப்பட்டது என்பது பா.ஜ.க தலைவர்களை எரிச்சலடைய வைத்தது.
இதெல்லாம் போதாது என்று, ஃபைசாபாத் என்ற மாவட்டம், 'அயோத்யா' என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது. அயோத்யா என்ற இடம் இந்து கடவுள் ராமர் பிறந்த இடமாக அறியப்படுகிறது.
1992 ஆம் ஆண்டு, ஆயாத்யாவில்தான் பழங்கால மசூதியை இந்து கும்பல் இடித்து தள்ளியது. அதனை தொடர்ந்து பெரும் மதக்கலவரம் ஏற்பட்டதில் 2,000 பேர் கொல்லப்பட்டனர்.
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள பல நகரங்களுக்கும், குஜராத்தின் அகமதாபாத்திற்கும் இந்து பெயர்களை வைக்க வேண்டும் என பா.ஜ.க தலைவர்கள் நினைக்கின்றனர். இந்தாண்டு தொடக்கத்தில் பா.ஜ.க ஆளும் ராஜஸ்தானில் இஸ்லாமிய பெயர்கள் கொண்ட 3 கிராமங்களின் பெயர்கள் மாற்றப்பட்டன.
இவ்வாறு வைக்கப்படும் புதிய பெயர்கள், புகழ்மிக்க இந்துக்களின் காலத்தை குறிப்பதாக பா.ஜ.க கூறுகிறது. மேலும், இது இஸ்லாமிய பாராம்பரியத்தை இகழ்ச்சியடைய செய்கிறது.
இந்தியாவில் மிச்சமிருக்கும் அரசியல் "பாரம்பரியத்தை தேசியமயமாக்குவதில் வேரூன்றியுள்ளதாக" கூறுகிறார் டெல்லி பல்கலைகழகத்தின் ககன்ப்ரீத் சிங்.
2014ஆம் ஆண்டு, மத்திய டெல்லியில் முகலாய அரசர் ஔரங்கசீப் பெயரில் இருந்த சாலையை, முன்னாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் சாலை என அவரை கௌரவிக்கும் வகையில் மாற்றப்பட்டது.
"முஸ்லிம் வில்லன் பெயரை எடுத்துவிட்டு, அதற்கு பதிலாக முஸ்லிம் தேசபக்தரின் பெயரை பா.ஜ.க மாற்றியது" என்கிறார் எழுத்தாளர் ஆதிஷ் டஸீர்.
இந்தியாவில் உள்ள 6,77,000 கிராமங்களில், 7000 கிராமங்களுக்கு மேல் ராமர் அல்லது கிருஷ்ணர் என்ற சொற்களை வைத்தே பெயரிடப்பட்டது. இதே வேளையில், முகலாய அரசர் அக்பர் பெயரில் 234 கிராமங்கள் மட்டுமே உள்ளன.
இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கிலும் பல நாடுகளில் வெவ்வேறு காரணங்களுக்காக நகரங்கள் மற்றும் இடங்களின் பெயர்கள் மாற்றப்படுகின்றன.
இருக்கும் இஸ்லாமிய பெயர்களை அழிப்பது என்பது, இந்திய முஸ்லிம்களின் அதிகாரத்தை பறிப்பதற்கான ஒரு வழி என்றும், நாட்டின் வரலாற்றில் அவர்களின் பங்கை மறுப்பதாகும் என்றும் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
பாகிஸ்தானிலும் இதே மாதிரி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அங்குள்ள முக்கிய சாலைகள் மற்றும் இடங்கள், முஸ்லிம் பிரமுகர்களுடன் தொடர்புபடுத்திக் கொள்ளும் வகையில் மாற்றப்பட்டுள்ளன.
"அரசியல் பொறுத்த வரை, முதலில் பாதிக்கப்படுவது வரலாறுதான்" என்கிறார் வரவாற்றாசிரியர் இர்ஃபான் ஹபிப்.
பொதுத் தேர்தலுக்கு சில மாதங்கள் மட்டுமே உள்ளது. இவ்வாறு நகரங்களுக்கு பெயர் மாற்றும் நடவடிக்கைகள் வாக்காளர்களின் ஆதரவினை பெறுவதற்கான முயற்சியாக பார்க்கப்படலாம். பல்வேறு கிராமங்கள், நகரங்கள் மற்றும் ரயில் நிலையங்களின் பெயர்களை மாற்ற வெவ்வேறு மாநிலங்களில் இருந்தும் மொத்தம் 27 கோரிக்கை மனுக்கள் வந்துள்ளதாக உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் நாடாளுமன்றத்தில் கடந்த மார்ச் மாதம் தெரிவித்தார்.
பெரும்பாலான கோரிக்கைகள் பா.ஜ.க ஆளும் ராஜஸ்தான் மற்றும் ஹரியானா மாநிலங்களில் இருந்து வந்துள்ளது.
ஆனால், இவ்வாறு இடங்களின் பெயர்களை மாற்றுவதால் அதிக வாக்குகள் பெற முடியும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இதற்கு எதிராக எந்த மக்கள் போராட்டமும் இல்லை.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :