2019க்குள் அகமதாபாத் நகரின் பெயரை கர்னாவதி என மாற்ற திட்டம்?

நாளிதழ்களில் இன்று வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம்.

தி இந்து (ஆங்கிலம்) : பெயர் மாற்ற நடவடிக்கை?

அகமதாபாத் நகரத்தை கர்னாவதி என பெயர் மாற்ற ஆலோசிக்கப்பட்டு வருவதாக குஜராத் அரசு தெரிவித்துள்ளதாக தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அடுத்த ஆண்டு தேர்தலுக்கு முன், பெயர் மாற்றப்படலாம் என செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதலமைச்சர் விஜய் ரூபானி கூறினார். சமீபத்தில் பா.ஜ.க அரசு அலகாபாத்தை ப்ரயக்ராஜ் என்றும் ஃபைசாபாத்தை அயோத்யா என்றும் பெயர் மாற்றப்போவதாக அறிவித்து இருந்தது.

அகமதாபாத்தை பெயர் மாற்ற வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை இருந்து வருவதாகவும், தற்போது இதுகுறித்து ஆலோசிக்கப்பட்டு, சட்டப்பூர்வமாக மாற்ற முடியுமா என்று தெரிந்து கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

அகமதாபாத் என்ற பெயர் அடிமைத்தனத்தை குறிப்பதாகவும், கர்னாவதி என்ற பெயர் தங்களது பெருமை, சுய மரியாதை கலாசாரம் மற்றும் சுயாட்சியை குறித்துக் காட்டும் என்றும் துணை முதலமைச்சர் நிதின் பட்டேல் கூறியதாக மேலும் அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.

தினமலர்:மற்ற நாடுகளை விட இந்தியாவில் பெண் விமானிகள் அதிகம்

சர்வதேச அளவில், மற்ற நாடுகளை விட இந்தியாவில் தான், அதிகளவு பெண் விமானிகள் பணிபுரிவது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக சர்வதேச பெண் விமானிகள் சங்கம் சார்பில் வெளியிட்ட அறிக்கையில், சர்வதேச அளவில், பெண் விமானிகளின் எண்ணிக்கை 5.4 சதவீதமாக உள்ளது. ஆனால் இது, இந்தியாவில் 12.4 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் பணிபுரியும் 8,797 விமானிகளில் 1,092 பேர் பெண்கள். இவர்களில் 385 பேர் கேப்டன்களாக உள்ளனர். சர்வதேச அளவில், 1.5 லட்சம் விமானிகளில் 8,061 பேர் பெண்கள். இதில், 2,190 பேர் கேப்டன்களாக உள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

இண்டிகோ நிறுவனத்தில் 2,689 விமானிகளில் 351 பேர்(13.9%) பெண்கள்.ஜெட் ஏர்வேசில் 1,867 விமானிகளில் 231 பேர்(12.4 %) பெண்கள். ஸபைஸ் ஜெட்டில் உள்ள 853 விமானிகளில் 113 பேர் (13.2%) பெண்கள். ஏர் இந்தியாவில் உள்ள 1,710 விமானிகளில் 217 பேர் (12.7%) பெண்கள் ஆவார்கள். அமெரிக்க விமான நிறுவனங்களை விட இண்டிகோ, ஜெட் ஏர்வேஸ் நிறுவனங்களில் தான் அதிகளவு பெண் விமானிகள் பணிபுரிவதாக மேலும் அச்செய்தி விவரிக்கிறது.

தினமணி உள்ளாட்சித் தேர்தலை நடத்த எது தடையாக உள்ளது? உயர்நீதிமன்றம் கேள்வி

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த எது தடையாக உள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை கடந்த 2017 -ஆம் ஆண்டு நவம்பர் 17 -ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கவும், அதுதொடர்பான அறிவிப்பாணையை 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 18 -ஆம் தேதிக்குள் வெளியிடவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றத் தவறிய மாநில தேர்தல் ஆணையர் மற்றும் மாநில தேர்தல் ஆணையச் செயலர் மீது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.

விசாரணையின்போது "1996 -ஆம் ஆண்டு வார்டு வரையறைப்படி, கடந்த 2011-ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த எது தடையாக உள்ளது' எனக் கேள்வி எழுப்பினர்.

அப்போது மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கே.துரைசாமி, "உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த கால அவகாசம் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அதேபோன்று வார்டு மறுவரையறை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததால் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை' என தெரிவித்தார்.

திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பி.வில்சன், "உள்ளாட்சித் தேர்தலை நடத்த எந்தச் சட்டமும் தடையாக இல்லை. இந்த அவமதிப்பு வழக்கில் தொடர்புடையவர்கள் மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்காவிட்டால் இனிமேலும் தேர்தலை நடத்த அக்கறை காட்டமாட்டார்கள்' என தெரிவித்தார். இதனையடுத்து வழக்கின் விசாரணையை வரும் 23 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர் என்கிறது இந்நாளிதழ் செய்தி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: