You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆபாச படங்களுக்காக இந்தியாவில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் கடத்தப்படுகிறதா?
- எழுதியவர், பிரக்யா மானவ்
- பதவி, பிபிசி
வாட்ஸ்ஆப்பில் குழந்தைகள் தொடர்புடைய ஆபாசக் காணொளிகளை சர்வதேச அளவில் பகிர்ந்த லக்னோவைச் சேர்ந்த ஒருவரை சிபிஐ அண்மையில் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.
செயலிகள் மூலமாக குழந்தைகள் தொடர்பான ஆபாசக் காணொளியை பரப்புவது இது முதன்முறை அல்ல. இதுபோன்ற காணொளி மற்றும் செய்திகள் ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் அதிகமாக பகிரப்படுகின்றன.
இவற்றில் பல கனடாவை சேர்ந்த செய்தி செயலி, 'கிக்'இல் அதிகமாக பகிரப்படுகிறது. 2009 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட கிக் செயலியை பெருமளவில் பயன்படுத்துபவர்கள் 13 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள். இதுதான் குழந்தைகளை பாலியல் ரீதியாக பயன்படுத்துபவர்களின் (pedophiles) மத்தியில் 'கிக்' செயலியை மிகவும் பிரபலமாக்கியது.
2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் வட கரோலினாவில் கைது செய்யப்பட்ட தாமஸ் பால் கீலர், 'கிக்' செயலியில் குழந்தை ஆபாச படங்களுடன் சம்பந்தப்பட்ட 200 குழுக்களில் உறுப்பினராக இருந்தார் என்று தெரிய வந்தபோது மிகப்பெரிய அதிர்வலைகளை எழுப்பியது.
'கிக்'கை பயன்படுத்தி அவர் ஒரு வருடத்தில் 3 முதல் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் ஆபாச புகைப்படங்களையும், காணொளிகளையும் 300 நபர்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார். 2017, ஆகஸ்ட் மாதத்தில் ஃபோர்ப்ஸ் இது தொடர்பான ஒரு கட்டுரையையும் வெளியிட்டது.
சமூக ஊடகங்களின் பங்கு
'கிக்' அல்லது 'வாட்ஸ் ஏப்' போன்ற செயலிகள் மட்டுமே இதுபோன்ற கொடூரங்களுக்கு பயன்படுத்தப்படுவதாக சொல்லமுடியாது. சமூக ஊடகங்களில் இருக்கும் கட்டுப்பாடுகளின் காரணமாக அவற்றில் குழந்தைகளின் ஆபாச படங்களுக்கான சந்தை சிறிதாக இருந்தாலும், பேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றிலும் ஆட்சேபத்திற்கு உரிய தவறான செய்திகள் தொடரத்தான் செய்கின்றன.
2016ஆம் பிபிசி மேற்கொண்ட ஒரு ஆய்வில், குழந்தை ஆபாசம் தொடர்புடைய செய்திகளை ஃபேஸ்புக்கில் பல சமூகக் குழுக்கள் பரிமாறிக் கொள்கின்றன. அவற்றில் ஒன்று குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டது.
ஃபேஸ்புக்கிற்கு பிபிசி சில குழந்தை ஆபாச புகைப்படங்களை அனுப்பி, அவை ஆட்சேபனைக்குரியவை என்று சுட்டிக்காட்டியது, ஆனால் ஃபேஸ்புக் அவற்றில் சிலவற்றை மட்டுமே நீக்கியது. ட்விட்டரின் 'பெரிஸ்கோப்'பில் குழந்தை ஆபாச காணொளிகள் பகிர்ப்படுவதை பிபிசி அம்பலப்படுத்தியது.
அதில், திரையின் பின்னே மறைந்திருக்கும் காமுகன் ஒருவன், காணொளியில் பேசிக்கொண்டே, குழந்தைகளை பல்வேறு வகையான பாலியல் செயல்களில் ஈடுபட தூண்டுகிறார்.
2015இல், தென் கொரியாவைச் சேர்ந்த "காகாவோ டாங்க்" என்ற செயலி நிறுவனத் தலைவர் இதுபோன்ற ஒரு குற்றச்சாட்டில் பதவி விலக வேண்டியிருந்தது.
இவை தவிர, இன்றைய நவீன தொழில்நுட்ப காலத்தில் குழந்தைகளை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்வது எளிதாகி விட்டதா என்ற கேள்வியை எழுப்பும் பல விடயங்கள் உள்ளன.
குழந்தை ஆபாசப்படம் (child porn) என்றால் என்ன?
குழந்தைகள் சம்பந்தப்பட்ட எந்தவொரு பாலியல் செயல்பாட்டையும் 'குழந்தை ஆபாசப்படம்' (child porn) என்று சொல்லலாம்.
குழந்தையுடன் நேரடியாக பாலியல் உறவு கொள்வது, தனது பாலியல் இச்சையை பூர்த்தி செய்துக் கொள்ளும் வகையில் குழந்தைகளை இயங்கச் சொல்வது, குழந்தைகளை பாலியல் உணர்வுடன் அசாதாரணமாக அணுகுவது, பாலியல் உணர்வுகளை தூண்டுவதுபோல் குழந்தைகளிடம் பேசுவது போன்றவற்றை பாலியல் வன்முறை என்று சொல்லலாம்.
ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என இரு வகைகளிலும் பாலியல் வன்முறை நடக்கிறது.
பாலியல் வன்முறைகளை காணொளியாகவோ, புகைப்படமாகவோ பதிவு செய்வது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக இருந்தாலும் அதுவும் குற்றமே.
குழந்தை ஆபாச காட்சிகளை தயாரிப்பது, பராமரிப்பது, பகிர்வது, விற்பனை செய்வது, பார்ப்பது, வாங்குதல், பதிவேற்றுவது, பதிவிறக்கம் செய்வது ஆகியவை சட்டவிரோதமான குற்றங்கள்.
குழந்தையுடன் பாலியல் ரீதியான நேரடியான செயலில் ஈடுபடுவதாக படங்களிலோ, காணொளிகளிலோ காட்டப்படுவது தான் பாலியல் வன்முறை என்பதில்லை. அதேபோல் ஒரு குழந்தை அதை விரும்புகிறதா, அதை கேட்கிறதா என்பதும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது.
ஆடையில்லாமல் குழந்தைகள் காட்டப்படுவதும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையின் ஒரு வடிவமே. அதிலும் குறிப்பாக குழந்தைகளின் அந்தரங்க உறுப்புகள் தெரிவது கண்டனத்துக்கு உரியது.
இதுபோன்ற சில காட்சிகளை புகைப்படங்களாகவோ, காணொளி காட்சியாகவோ குடும்பத்தினரே தெரியாமல் இணையத்தில் பதிவிட்டு விடுகின்றனர். இதை தவறான நோக்கத்தில் இணையத்தில் பயனாளிகள் பதிவிறக்கம் செய்தும், அதை பகிர்ந்தும் பயன்படுத்துகிறார்கள்.
இணையம் வழியாக பாலியல் வன்முறை நேரடியாகவே ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதில் மக்கள் பணம் செலுத்தி குழந்தைகள் பாலியல் ரீதியாக பயன்படுத்தப்படுவதை நேரலையாகப் பார்க்கிறார்கள்.
இதுபோன்ற நேரலைகளை அவை ஒளிபரப்பப்படும்போதே, கண்டுபிடிப்பது சிரமம். இது போன்றவை சிறிய கால அளவில் ஒளிபரப்பப்பட்டு, அதன் டிஜிட்டல் தடங்கள் அழிக்கப்படுகின்றன.
இதில் கொடுமை என்னவென்றால், பிறந்து சில மாதங்களே ஆன குழந்தைகளில் இருந்து 18 வயதிற்குட்பட்ட இளம் பருவத்தினர் இந்த பாலியல் முறைகேடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. உலகெங்கிலும் காணப்படும் பெரும்பாலான இத்தகைய புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் 12 வயதுக்கும் குறைவான குழந்தைகளுடையதாகவே இருக்கின்றன.
இவற்றில் பெரும்பாலான குழந்தைகள் சிறுமிகளே.
தொலையும் சிறுமிகள் போவதெங்கே?
2017 பிப்ரவரி ஆறாம் தேதியன்று யுனிசெஃப் வெளியிட்ட ஒரு அறிக்கையின்படி, ஆன்லைன் குழந்தை பாலியல் தொழில் இந்தியாவில் எந்த அளவில் விரவியிருக்கிறது என்று கணக்கெடுப்பது இயலாத காரியம்.
ஏனெனில் இது தொடர்பாக இந்தியாவில் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது பற்றிய விவாதங்களே தற்போதுதான் தொடங்கியிருக்கிறது.
இந்திய அரசின் அனைத்து இணையதள குற்றங்களும் ஒரே வகையில் வகைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை மேலும் கூறுகிறது, அதுவும் பெரும்பாலும் நிதி மோசடி மற்றும் அரசியல் ரீதியான அவதூறுகள் தொடர்புடையவையே.
இணையதள உலகில் குழந்தைகளுக்கு என்ன நடக்கிறது என்பது பற்றி அரசிடம் எந்தவொரு தகவலும் இல்லை.
"இந்தியாவில் ஆறு நிமிடங்களில் ஒரு குழந்தை காணாமல் போகின்றன. ஆண்டொன்றுக்கு சுமார் ஒரு லட்சம் குழந்தைகள் மாயமாகின்றன" என்ற பகீர் தகவலை வெளியிட்டுள்ளது 'குழந்தைகளை காப்பாற்றுங்கள்' என்ற அரசு சாரா அமைப்பின் வலைதளம்.
இதில் இருந்து முற்றிலும் வேறுபட்ட புள்ளிவிவரங்களை கூறும் அரசு, ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் காணாமல் போகும் செய்தியை மறுக்கிறது.
தொலைந்து போகும் குழந்தைகளின் நிலை என்ன? இதை யாராலும் அறுதியிட்டு கூறமுடியாது. ஆனால் அதிகரித்து வரும் குழந்தைகள் தொடர்பான பாலியல் காட்சிகள் தொடர்பான வியாபாரத்தை பார்க்கும்போது, குழந்தைகள் கடத்தல்களையும், பாலியல் தொழிலையும் தொடர்புபடுத்துவது கடினமானது இல்லை.
இருந்தபோதிலும் இன்றைய காலகட்டத்தில் எந்தவொரு குழந்தையையும் கட்டாயப்படுத்துவது சுலபமானது இல்லை.
இணையதளத்தில் அதிக நேரத்தை செலவழிக்கும் இந்த தலைமுறை, சிறு வயதிலேயே காமக் கொடூரர்கள் விரிக்கும் ஆசை வலையில் சிக்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பது கவலையேற்படுத்துகிறது.
இணையதளம் ஏற்படுத்தும் பாதிப்பு
2016 செப்டம்பரில் யுனிசெஃப் வெளியிட்ட அறிக்கையின்படி இந்தியாவில் 13 கோடி குழந்தைகளிடம் மொபைல் போன்கள் உள்ளன.
தொழில்நுட்ப மேம்பாட்டின் காரணமாக ஒரு ஜி.பி தரவை இலவசமாக வழங்கும் தொலைபேசி நிறுவனங்களின் உதவியால் இணையம் மிகவும் எளிதாகவும் மலிவாகவும் அணுக்கூடியதாகிவிட்டது. 'இன்டர்நெட் மற்றும் மொபைல் அசோசியேஷன்' அமைப்பின் தகவலின்படி, 2018 ஜூன் மாதத்திற்குள் இந்தியாவின் 50 கோடி மக்கள் இணையதளத்தை பயன்படுத்துவார்கள்.
இணையதளங்கள் குழந்தைகளின் கல்விக்கு உதவும் என்பது உண்மையென்றாலும், அவர்களுக்கு தேவையில்லாத மற்றும் தீங்கு விளைவிக்கும் தகவல்களையும் அவர்கள் எளிதாக அணுகமுடியும் என்பதே அதன் சிக்கல்.
18 வயது பூர்த்தியானவர்கள் பாலியல் ரீதியாக செயல்படலாம் என்று அரசு அனுமதிப்பதாக புரிந்துக் கொள்ளப்பட்டாலும், பொதுவாக அந்த வயதிற்கு முன்னரே குழந்தைகளுக்கு பாலியல் ஆர்வம் ஏற்படுவது மனித இனத்தின் இயல்பு என்பதை ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன.
தொழில்நுட்பம் பெரிய அளவில் வளராத காலகட்டத்தில் பருவ வயது அடைந்தவர்களுக்கு பாலியல் உணர்வு தோன்றுவது மோசமானதாகவோ, தவறானதாகவோ கருதப்பட்டதில்லை. கடந்த ஒரு நூற்றாண்டில்தான் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் சிறு வயதில் திருமணம் செய்வது குற்றமாக அறிவிக்கப்பட்டது.
இப்போது காலம் மாறிவிட்டது. குழந்தை திருமணத்தினால் ஏற்படும் பாதிப்புகளை மக்கள் உணர்ந்திருக்கின்றனர். இது கால மாற்றம், தொழில்நுட்ப முன்னேற்றம், ஆனால் இது மனிதர்களின் இயற்கையான பாலியல் ஆர்வத்திற்கும், உந்துதலுக்கும் கட்டுப்படுமா என்பதே பிரச்சனையின் மற்றொரு பகுதியாகும்.
இப்போது இணையதளங்களில் பெரியவர்களைப் போலவே குழந்தைகளும் பாலியல் பற்றி தெரிந்துக் கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள். ஏனெனில் நமது சமூக கட்டமைப்பில் வயது வந்தவர்கள், பெரியவர்களும் கூட பாலியல் தொடர்பான விடயங்களை பகிர்ந்துக் கொள்வது தவறாக பார்க்கப்படுகிறது. ஆனால் உள்ளூற ஊற்றெடுக்கும் பாலியல் ஆர்வத்திற்கு தீனிபோடும் வழிமுறையாக இணையதளங்களை அவர்கள் நாடுகிறார்கள்.
பாலியல் தொடர்பான முறையான தகவல்கள் தெரியாத, ஆனால் இயற்கையாகவே அந்த உந்துதல் இருக்கும் குழந்தைகளை பாலியல் தொடர்பான வலைதளங்கள் கவர்ந்திழுக்கலாம், தடுமாறச் செய்யலாம்.
குறிப்பாக, இயற்கையான பாலியல் உந்துதல் கொண்ட இயல்பான மனிதர்களில் இருந்து மாறுபட்டிருக்கும் காமக் கொடூரர்கள் இயல்பாக சாதுவானவர்களாகவும், தாழ்மையானவர்களாகவே தோன்றுவார்கள் என்று ஒரு ஆராய்ச்சி கூறுகிறது. குழந்தைகளுக்கு ஏற்றவாறு பேசி, அவர்களை தங்கள் வலைக்குள் சிக்க வைப்பார்கள்.
பாலியல் வன்முறை குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட மேத்யூ ஃபோல்டர் என்பவருக்கு பிப்ரவரி 19 ம் தேதியன்று பிரிட்டன் நீதிமன்றம் ஒன்று 32 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. அந்த நபர், இலக்காக கொள்ளும் குழந்தைகளை மேற்கத்திய பாணி கழிவறையில் அமரச் சொல்வாராம். குழந்தைகளும் அவர் சொல்வதை செய்வார்கள்.
காவல்துறையினரை நான்கு ஆண்டுகள் சுற்றவிட்ட மேத்யூ ஃபோல்டர், தன்மீது சுமத்தப்பட்ட 137 குற்றங்களை ஒப்புக்கொண்டார், அதில் 46 குற்றங்கள் பாலியல் வன்புணர்வு தொடர்பானவை.
சட்டத்தின் கோணம்
பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் 2012ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ், குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தொடர்பான குற்றங்களுக்கு கடுமையான தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும். ஆனால் சிபிஐ மற்றும் காவல்துறை இந்த தளங்களை எவ்வாறு கண்காணிக்கும் என்பதுதான் அவை எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்.
இணையதள உலகம் மிகப்பெரியது என்பது ஒருபுறம் என்றால், குழந்தை ஆபாசப் படங்கள் தவறு என்று தெரிவதால் அவை பெரும்பாலும் மறைவாகவே பாதுகாப்பாகவே வேலை செய்கின்றன என்பதும் மற்றொருபுறம் சிக்கலை ஏற்படுத்துகிறது. மேலும், இந்த 'கருப்பு' இணையதளங்கள் பொதுவான இணையதள தேடுதலில் தெரியாது.
இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட எதுவும் நிரந்தரமாக நீக்கப்படுவதற்கான சாத்தியங்களும் குறைவு. ஒரு வலைதளத்தில் இருக்கும் தகவலையும், புகைப்படங்களையும், காணொளிகளையும் அழித்துவிட்டாலும், அவை பகிரப்பட்டிருக்குமே, அதை என்ன செய்வது?
தவறு என்று தெரிந்தே அதை பார்ப்பதால், சேமிப்பதால் அவற்றை ரகசியமாக சேமித்து வைப்பதும் இயல்பான நடவடிக்கையே. அவை பிறகு பிற வலைதளங்களில் வேறு வடிவில், ஒட்டியும், வெட்டியும் பகிர்வது தொடரும்.
அடுத்த பிரச்சனை என்னவெனில் இணையத்தள சேவையை வழங்குபவர்களும், அதனை பயன்படுத்துபவர்களும் இந்தியாவில் மட்டுமே இருப்பவர்களாக இருக்கமாட்டார்கள். நாடுகளுக்கு ஏற்ப சட்டதிட்டங்களும் மாறுபவையே.
உலகின் எந்த மூலையிலும் இருப்பவரும் டெல்லி அல்லது லக்னோவில் இருக்கும் யாருடைய தகவலையும் தெரிந்துக் கொள்ளமுடியும்.
தங்கள் எல்லைக்கு வெளியே உள்ள இதுபோன்ற வெளிநாட்டு வலைத்தளங்களை சில சூழ்நிலையில், காவல்துறையோ, சிபிஐயோ கண்காணிக்க முடியாது.
பிற நாடுகளின் உளவுத்துறை முகமைகளிடமிருந்து தகவல்களை இந்திய முகமைகள் கோரலாம். ஆனால், அந்த வலைதளத்தையும் அதன் இருப்பிடத்தையும் அடையாளம் காண்பது அவசியம். ஆனா, இது 'கருப்பு' வலைதளங்களில் மிகவும் சிரமமான ஒன்று.
தவிர்ப்பதற்கான வழிமுறைகள்
குழந்தை ஆபாச வலைத்தளங்களை தடுக்க வேண்டுமென்று அரசை உச்ச நீதிமன்றம் 2016ஆம் ஆண்டிலேயே அறிவுறுத்தியது.
ஆனால், வயது வந்தவர்களுக்கான ஆபாச உள்ளடக்கம் மற்றும் குழந்தைகளுக்கான ஆபாச உள்ளடக்கத்திற்கான வித்தியாசங்களை பிரித்தறியும் சரியான தொழில்நுட்பம் எதுவும் நம்மிடம் இல்லை.
கூகுளின் இயந்திர கற்றல் (Google's machine learning), மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இலவச மென்பொருள் PhotoNNA ஆகியவற்றிலிருந்து பல நாடுகளின் உளவுத்துறைகளும் உதவியை நாடுகின்றன. ஆனால் இந்தியாவில் இது தொடர்பான புள்ளிவிவரங்களை கண்டுபிடிப்பது கடினமாக உள்ளது.
இந்த நிலையில், இதுபோன்ற விடயங்களை பொது மக்களின் நிலைப்பாடும் முக்கிய பங்கு வகிக்கிறது. 2016ஆம் ஆண்டில், மும்பையை சேர்ந்த அரசு சாரா நிறுவனம் ஒன்றும் பிரிட்டனின் 'இன்டர்நெட் வாட்ச் ஃபவுண்டேன்' அமைப்புடன் ஒன்றிணைந்து ஒரு ஹாட்லைனை உருவாக்கியுள்ளன. அதில் பயனாளர்கள் இணையதளங்கள் தொடர்பான புகார்களை பதிவு செய்யலாம்.
பிற செய்திகள்:
- பெருங்கடலில் பிளாஸ்டிக்கின் அளவு 3 மடங்காக உயரும் அபாயம்: ஆய்வில் தகவல்
- உங்கள் ஃபேஸ்புக் தகவல்களை தேர்தல் நேரத்தில் பாஜகவும் காங்கிரஸும் பயன்படுத்தியதா?
- அழிந்து வரும் காண்டாமிருகங்கள்: மனிதனின் எதிர்காலத்துக்கு பாதிப்பா?
- 'புதின் இல்லாமல், ரஷ்யா கிடையாது': 5 திருப்புமுனை தருணங்கள்
- `லிங்காயத்' சமூகத்துக்கு தனி மத அங்கீகாரம்: பாஜகவை வீழ்த்த காங்கிரஸின் வியூகமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :