இந்தியா- பாகிஸ்தான் மாணவர்கள் இடையே கடிதம் மூலம் துளிர்த்த நட்பு

    • எழுதியவர், ப்ரஜக்தா துலப்
    • பதவி, பிபிசி மராத்தி

மும்பையில் வசிக்கும் மாணவன் ஹ்ரிஷிகேஷுக்கு அந்த நான்கு கடிதங்களும் மிகப்பெரிய சொத்து. பாகிஸ்தானில் உள்ள அவரது நண்பன் சமியுல்லா அனுப்பியவை அவை.

ஹ்ரிஷிகேஷ், மும்பையில் உள்ள அனுயோக் வித்யாலயா பள்ளியின் மாணவன். ஒரு வருடத்திற்கு முன்னதாக அவருக்கு லாகூர் கிராமர் பள்ளி மாணவனான சமியுல்லாவின் நட்பு கிடைத்தது. அவர்கள் கடிதம் மூலம் நண்பர்களாயினர். இந்தியா பாகிஸ்தான் எல்லைகளுக்கு அப்பால் அவர்கள் இருவருக்கும் இடையே ஒரு புதிய உலகம் பிறந்தது .

இருவர் மனதிலும் தங்களது அண்டை நாட்டைப் பற்றிய புதிய தோற்றம் உருவாவதற்கு கடிதப் பரிமாற்றம் ஒரு வாய்ப்பாக அமைந்தது.

பாகிஸ்தானில் 'வடா பாவ்' கிடைக்குமா?

ஹ்ரிஷிகேஷ் எழுதிய தனது முதல் கடிதத்தில் தன்னை பற்றி அறிமுகத்தை விவரித்தார். அதற்கு சமியுல்லா பதில் கடிதம் எழுத, நட்பு வளர்ந்தது. தங்களைப் பற்றி, தங்களது குடும்பங்களை பற்றி, என்னென்ன சாப்பிடுவார்கள், விளையாடுவார்கள் எப்படிப் பொழுது போக்குவார்கள் என்ன என்பது குறித்தெல்லாம் அவர்கள் பகிரத்துவங்கியதும் நட்பு இறுக்கமானது.

இந்தியாவின் நுழைவு வாயில், மும்பையைச் சுற்றியுள்ள கோயில்கள் குறித்த தகவல்கள் மற்றும் புகைப்படங்களை ஹ்ரிஷிகேஷ் பகிர்ந்தார்.

லாகூர் கோட்டை, பாட்ஷாஹி மஸ்ஜித், ஃபைஸ் அஹமத் ஃபைஸ் எழுதிய கவிதை உள்ளிட்டவற்றை சமியுல்லா பகிர்ந்து கொண்டார்.

'பாகிஸ்தானில் வடா பாவ் கிடைக்குமா' என்பது முதல் 'உங்களின் தேசிய விளையாட்டு ஹாக்கியா' என்பது வரை அவர்கள் எல்லா விதமான கேள்விகளையும் பரஸ்பரம் கேட்டுத் தெரிந்துகொண்டனர்.

கடிதப் பரிமாற்றம் 2016-ல் துவங்கியது. 2017-ம் ஆண்டு அவர்கள் இருவரும் சந்தித்துக்கொள்ள விரும்பினார்கள். ஹ்ரிஷிகேஷுக்கு லாகூருக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. நண்பனை காணப்போகிறோம், லாகூர் நகரின் கலாசாரம் மற்றும் வரலாறு குறித்து தெரிந்துகொள்ளப்போகிறோம் என்று ஆர்வத்தோடு இருந்தார்.

சமியுல்லா எழுதிய தனது நண்பனுக்கு எழுதிய நான்காவது கடிதத்தில், ''மும்பையில் இருந்து எனக்கு என்ன கொண்டுவருவாய்? '' என கேட்டிருந்தார்.

தனது தந்தையுடன் ஆலோசனை செய்த ஹ்ரிஷிகேஷ், தனது நண்பனுக்கும் தனக்கும் ஒரே உடை வாங்கத் திட்டமிட்டார். உள்ளூர் தையல்காரர் அப்பாஸிடம் இரண்டு பதானி சூட் தைத்துதருமாறு கேட்டிருந்தார் சமியுல்லாவின் இந்திய நண்பன்.

இந்நிலையில் பாஸ்போர்ட் மற்றும் விசா உள்ளிட்டவை எடுக்கப்பட்டன. முறையான நடைமுறைகள் முடிந்ததவுடன் விமானப் பயணத்துக்கான டிக்கெட் எடுத்தனர். ஆனால், அவை எல்லாம் ஒரு கட்டத்தில் ரத்து செய்யப்பட்டன.

தனது நண்பனையும் அவனது நாட்டையும் பார்க்க வேண்டுமென்ற ஹ்ரிஷிகேஷின் கனவு நிஜமாகவில்லை.

ஹ்ரிஷிகேஷ் போலவே 212 பள்ளி மாணவர்கள் கடிதம் மூலம் அண்டை நாட்டில் நண்பர்களை பெற்றனர். எக்ஸ்சேஞ்ச் ஃபார் சேஞ்ச் (மாற்றத்துக்கான பரிமாற்றம்) எனும் திட்டத்தின் ஒரு பகுதியாக ஒரு வருடத்துக்குள் ஆயிரத்த்துக்கும் அதிகமான கடிதங்கள் பரிமாற்றம் செய்துகொள்ளப்பட்டன.

பிரிவினை நினைவுகள் மற்றும் வரலாற்றுப் புத்தகங்களுக்கு அப்பால் அண்டைநாடு குறித்து சற்று தெரிந்துகொள்ள கடிதப் பரிமாற்றம் அவர்களுக்கு உதவியது.

மும்பையில் உள்ள அனுயோக் பள்ளியின் ஆசிரியர் மனிஷா கெவ்டே இந்த திட்டம் குறித்து விரிவாக பேசினார். '' இந்தி மொழி இருநாடுகளுக்கும் பொதுவான மொழியாக இருந்தாலும், எங்களுக்கு இந்தியும் அவர்களுக்கு உருதும் எழுத்து வடிவமாக இருக்கிறது. ஆகவே கடிதத்துக்கு தொடர்பு மொழியாக ஆங்கிலத்தை தேர்ந்தெடுத்தோம். கடிதம் எழுதுவது குழந்தைகளுக்கு எளிதாக இருக்கவில்லை. ஆசிரியர்கள் உதவியுடன் தங்களது எண்ணங்களையும் கேள்விகளையும் கடிதத்தில் எழுதினார்கள். ஒரு கடிதம் எழுதிய பிறகு பதில் கடிதம் வருவதற்காக ஆர்வமுடன் காத்திருந்தனர்.''

'கடிதம் மூலமாக ஒருவரைப் பற்றி மற்றொருவர் தெரிந்து கொண்டதும், அடுத்த கட்டம் அவர்கள் தங்களது நண்பர்களை சந்திப்பதாக இருந்தது. சில குழந்தைகள் லாகூர் செல்வதற்கு ஆர்வமாக இருந்தனர். ஆனால் பெற்றோர் சம்மதிக்கவில்லை.

'' இந்து - முஸ்லீம் உறவு குறித்த நமது பார்வையை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். இந்த உறவுகள் குறித்து நமது குழந்தைகள் எதிர்மறையாக சிந்திப்பதற்கு முன்பாக நாம் நேர்மறையான எண்ணம் உருவாக முயற்சிக்க வேண்டியதிருக்கிறது. நாங்கள் பெற்றோர்களிடம் பேசினோம். அதில் இருவர் லாகூர் பயணத்துக்கு ஒப்புக்கொண்டனர். ஆசிரியர்களும் உடன் செல்ல இருக்கிறோம்'' என்று கூறினார் அனுயோக் பள்ளியின் அறங்காவலர் சதீஷ் சிந்தார்கர்.

'' எல்லையில் பதற்றம் நிலவுவதால் எங்களது பாகிஸ்தான் பயணத்தை ரத்து செய்யச் சொன்னபோது எங்களது கையில் விமான டிக்கெட் இருந்தது'' என்கிறார் சிந்தார்கர்.

ஆனால் நிச்சயம் ஒருநாள் தனது மாணவர்களை பாகிஸ்தானுக்கு அழைத்துச் செல்ல முடியும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறார் சிந்தார்கர்.

Routes 2 Roots எனும் நிறுவனம் டெல்லியில் 2010-ல் ஒரு திட்டத்தை துவங்கியது. அண்டை நாட்டின் கலாசாரம் குறித்து தெரிந்துகொள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள மாணவர்களுக்கு இத்திட்டம் ஓர் வாய்ப்பு தந்தது.

''மும்பை, டெல்லி, டேராடூன், லாகூர், கராச்சி, இஸ்லாமாபாத் நகரங்களில் இருந்து சுமார் ஐம்பதாயிரம் மாணவர்கள் கடந்த ஏழு வருடங்களில் கடிதம் மூலம் நண்பர்களாகியுள்ளனர்'' என்கிறார் இந்நிறுவனத்தை தோற்றுவித்த ராகேஷ் குப்தா.

''நாம் ஒருவரது கலாசாரத்தை மற்றொருவர் மதித்து வந்தால், அமைதி நிலைப்பது என்பது ஒரு பெரிய விஷயமாக இருக்காது. நாம் வெறுப்பையும், எதிரி எனும் உணர்வையும் நமது குழந்தைகளின் மனதில் இருந்து அகற்றி தங்களது அண்டை தேசத்தை மதிக்க கற்றுக்கொடுக்க வேண்டும். இந்தியா - பாகிஸ்தான் இடையேயான நட்புக்கு இதுவே தேவை'' என விவரிக்கிறார் ராகேஷ் குப்தா.

ஆனால் இப்போது 'மாற்றத்துக்கான பரிமாற்றம்' திட்டத்தை நிறுத்திவிடுவது குறித்து அவர் அதிருப்தி அடைந்துள்ளார்.

கடந்த ஆண்டு இந்த திட்டத்தின் வாயிலாக லாகூரில் இருந்து 60 மாணவர்கள் இந்தியாவுக்கு வந்தனர். தங்களது ஆசிரியர்களுடன் வந்த அவர்கள் இரண்டு நாட்கள் டெல்லியில் செலவிட்டனர் மேலும் தாஜ்மஹாலையும் சுற்றிப் பார்த்தனர்.

''கடந்த ஏழு வருடங்களாக நாங்கள் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கும், பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கும் குழந்தைகளை அழைத்து வருகிறோம். ஒவ்வொருமுறையும் அரசும், அதிகாரிகளும் ஆதரவை வழங்கி வந்தது மட்டுமின்றி உதவியும் செய்தனர். ஆனால் கடந்த வருடம் இந்திய உள்துறை அமைச்சகம் பாகிஸ்தான் சிறுவர்களை உடனடியாக சொந்த நாட்டுக்கு அனுப்புமாறு எங்களிடம் சொன்னது. ஆகவே அவர்கள் சுற்றுலாவின் பாதியிலேயே சொந்த நாட்டுக்கு திரும்பினார்கள்'' என விவரிக்கிறார் குப்தா.

இந்திய நண்பர்களை லாகூர் சிறுவர்கள் சந்திக்க முடியாமல் போனதற்கு இதுவே காரணம். ''நிறைய முயற்சிகளுக்குப் பிறகு மீண்டும் இந்திய பாகிஸ்தான் மக்கள் இடையே நட்புணர்வை வளர்க்க இத்திட்டம் மூலமாக முயன்றோம். ஆனால் இனி மீண்டும் இந்த உறவை வளர்ப்பது எளிதாக இருக்காது'' என கவலை தெரிவிக்கிறார் ராகேஷ் குப்தா.

இன்று, ஹ்ரிஷிகேஷ் பத்தாவது படித்துக் கொண்டிருக்கிறார். பாகிஸ்தான் குறித்த தனது எண்ணங்களை தன் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். ஆனால் இந்தியா குறித்த தனது நண்பன் சமியுல்லாவின் எண்ணங்களை அறிய விரும்புகிறார்.

ஒருநாள் பாகிஸ்தான் செல்ல முடியும் என அவர் நம்புகிறார். ஹ்ரிஷிகேஷ் என்ன சொல்கிறார்? '' சமியுல்லாவால் என்னை இனி அடையாளம் கண்டுகொள்ள முடியுமா என தெரியவில்லை. நாங்கள் இனிமேல் தொடர்பில் இருக்கப்போவதில்லை. ஆனால் நான் அவனை சந்திக்கவே விரும்புகிறேன். என்னைப் பொருத்தவரையில் அவன் எனக்கு நண்பன்''.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: