You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாகிஸ்தானில் #MeToo தாக்கத்தை ஏற்படுத்துமா?
இந்தியா உள்பட உலகம் முழுவதும் உள்ள பெண்கள் #MeToo என்ற ஹாஷ்டாக் மூலம் தங்கள் எதிர்கொண்ட பாலியல் குற்றச்சாட்டுகளை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். தற்போது, #MeToo இயக்கம் பாகிஸ்தானிலும் அடியெடுத்து வைத்துள்ளது.
சமூக ஊடகங்கள், அரசியல், திரைப்படத் துறை, பத்திரிகைத் துறை என பல துறைகளிலும் உள்ள இந்திய பிரமுகர்கள், பிரபலங்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகள் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
சில நாட்களுக்கு முன்னதாக பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா, நடிகர் நானா பட்டேகர் மீது பாலியல் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து பலரும் வெளிப்படையாக புகார் அளிக்க தொடங்கினர்.
இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள், நடிகர்கள் மற்றும் திரைப்பட இயக்குநர்கள் வரை பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் உள்ளன.
#MeToo பாகிஸ்தானில் பிரபலமாகாதது ஏன்?
சமீபத்தில் ட்விட்டரில் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்ட சில பாகிஸ்தானிய பெண்கள், சில பிரபலங்கள் தங்களிடம் ரீதியாக முறைகேடாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டினர். இந்தியாவைப் போன்றே பாகிஸ்தானிலும் பல பிரபலங்கள் மீது குற்றம் சாட்ட வைக்கப்படுமா? இதுபோன்ற விவகாரங்களில் பாகிஸ்தான் பெண்களின் நிலைப்பாடு இதுவரை எப்படி இருந்திருக்கிறது?
பாகிஸ்தான் பத்திரிகையாளர் சபாஹத் ஜகாரியாவின் கருத்தப்படி, "பாகிஸ்தானில் பெண்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைப்பதே சிரமமானது என்ற நிலையில், பணி தொடர்பாக பாலியல் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டால் அவர்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம். இதுபோன்ற விஷயங்கள் வெளிவந்தால் அவர்கள் வேலைக்கு போவதற்கும் தடை ஏற்படலாம்".
"இங்கு அதிகாரம் என்பது சிலரின் கைகளுக்குள் இருக்கிறது. அவர்கள் ஒருவருடன் மற்றொருவர் ஏதாவது ஒருவிதத்தில் தொடர்பு கொண்டிருப்பதால், முன்னெடுக்கப்படும் குற்றச்சாட்டுகள் அழுத்தப்பட்டு, நீர்த்து போக செய்யப்படும். எனவே, பாகிஸ்தான் பிரபலங்களுக்கு #MeToo எந்த பெரிய பாதிப்பையும் ஏற்படுத்தாது."
"இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை முன் வைப்பவரும் அதிகாரம் மிக்க ஒருவராகவோ அல்லது பிரபலமானவராக இருக்க வேண்டும், இல்லாவிட்டால் பயனேதும் இருக்காது. ஆனால் அவர்களும் குரல் எழுப்புவார்களா என்பது சந்தேகமே" என்கிறார் சபாஹத் ஜகாரியா.
குற்றச்சாட்டை முன்வைப்பவர்களே பாதிக்கப்படுகிறார்களா?
இந்தியா, பாகிஸ்தான் மட்டுமல்ல, உலகில் எந்த நாடாக இருந்தாலும், இதுபோன்ற தங்கள் வருத்தங்களை வேதனையுடன் பதிவு செய்யும் பெண்கள், அனுதாபத்துடன் பார்க்கப்படுவதில்லை. மாறாக அவர்கள் பல்வேறு கேள்விகளையும், துணையாக பல குற்றச்சாட்டுகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
இதற்கு காரணம் பாலியல் குற்றச்சாட்டுகளை நிரூபிப்பது கடினமானது என்பதே. சிலர் அதற்கான ஆதாரங்களையோ அல்லது ஸ்க்ரீன் ஷாட்களையோ கொடுத்தால் அதை பிறர் நம்ப மறுக்கிறார்கள்.
"ஆனால் எனக்கு இன்னமும் நம்பிக்கை இருக்கிறது. எந்தவொரு இயக்கமும் தொடங்கப்பட்டவுடனே வெற்றியடைவதில்லை. விளைவுகள் தெரிவதற்கு கொஞ்சம் காலம் ஆகும். இப்போது குறைந்தபட்சம் இதைப்பற்றி பேசலாமா அல்லது வேண்டாமா என்ற கேள்வியாவது எழுந்திருக்கிறதே? பெண்கள் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் உதவுகிறார்கள், மேலும் வலுவடைகிறார்கள், இந்த விஷயத்தைப் பற்றி சிந்திக்க வேண்டிய கட்டாயத்தை ஆண்களுக்கு ஏற்படுத்துகின்றனர்" என்று நம்பிக்கையை விதைக்கிறார் சபாஹத் ஜகாரியா.
பெண்களுக்கு இப்போது எப்படி தைரியம் ஏற்பட்டது?
பிரபலமானவர்கள் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட பின், இது போன்ற விஷயங்களை வெளியிடலாம் என்ற தைரியம் ஏற்படுவது ஒரு புறம் என்றால், தங்களுக்கு நீதி கிடைக்கலாம் என்ற நப்பாசையும் தான் காரணம்.
பத்திரிகையாளர் பெனாசீர் ஷா இவ்வாறு கூறுகிறார்: "அலி ஜஃபர் மீது பாடகி மிஷா ஷஃபி டிவிட்டரில் குற்றச்சாட்டு சுமத்திய பிறகு, வேறு சில பெண்களும் தைரியமடைந்து, ஜஃபர் மீது குற்றம் சுமத்தினார்கள். ஆனால் அலி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? அவருக்கு இதனால் எதாவது பாதிப்பு ஏற்பட்டதா என்றால் இல்லை என்றே சொல்லலாம். அவர் தனது வேலையை வழக்கம் போல தொடர்கிறார். அவர் பணிபுரிந்த திரைப்படம் அண்மையில் வெளியாகியிருக்கிறது."
இது பற்றி மேலும் கூறும் பெனாசீர், "இந்த விவகாரத்தில் ஊடகங்களின் பங்களிப்பும் கணிசமானது. அவரது திரைப்படம் வெளியாகும்போது ஊடகங்கள் அதை பெரிய அளவில் விளம்பரப்படுத்தின. இந்த சூழ்நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டு நீர்த்துப் போனதால், மிஷாவும் மெளனமாகிவிட்டார். இது ஜஃபருக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. மீஷா போன்ற புகழ்பெற்ற மற்றும் வெற்றிபெற்ற பெண்ணாலே எதையும் செய்ய முடியாவிட்டால், தங்களால் என்ன செய்ய முடியும் என்று பெண்கள் நினைப்பார்கள்."
பெண்களுக்கு அரசில் முக்கிய பங்கு கிடைப்பதற்கு முன்னர் தங்கள் சொந்த வாழ்க்கை பற்றிய முடிவை எடுப்பதற்கு அவர்களால் பெரிய அளவில் பங்காற்ற முடியுமா என்பது கேள்விக்குறியே என்கிறார் பெனாசீர் ஷா.
"நமது அரசில் எத்தனை பெண்கள் இருக்கிறார்கள்? நமது நீதித்துறையில் பெண்களின் பங்களிப்பு எந்த அளவில் இருக்கிறது? பெண்களின் உரிமைகளுக்காக எத்தனை சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன? உருவாக்கப்பட்ட சட்டங்களும், பிரச்சனைகளை எழுந்த பின்னரே அவற்றின் தொடர்ச்சியாகவே வந்தன என்பதையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியிருக்கிறது. நீதி மற்றும் நிர்வாகத்துறையில் பெண்களின் பங்களிப்பு போதுமான அளவில் இல்லாவிட்டால் #MeToo மட்டுமல்ல, எந்தவொரு இயக்கங்கள் வந்தாலும் பெண்களின் நிலைமையில் மாற்றம் ஏற்படாது" என்கிறார் பெனாசீர் ஷா.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :