You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'எஸ்.வி.சேகரை குற்றம் சாட்டியவர்கள் வைரமுத்து குறித்து வாய் திறக்காதது ஏன்?'
எஸ்.வி.சேகரை குற்றம் சாட்டியவர்கள் வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து வாய் திறக்காமல் இருப்பது ஏன் என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜக மகளிர் அணியின் மாநில செயற்குழு கூட்டம் சேலத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டார்.
அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழிசை, தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை வழங்குவதற்கு பாஜக முனைப்பு காட்டி வருவதாக தெரிவித்தார்.
"திமுக தலைவர் ஸ்டாலின் போன்றோர் தமிழகத்திற்கு பாஜக என்ன செய்தது என்று கேள்வி எழுப்புகின்றனர்.
ஐக்கிய முற்போக் கூட்டணியின் 10 ஆண்டுகால ஆட்சியில் தமிழகத்திற்கு என்ன செய்தார்கள் என்று கேள்வி எழுப்பினார்.
"பாஜக ஆட்சியில் தமிழகத்தில் நெல்லை, மதுரை, தஞ்சை மாவட்ட மருத்துவமனைகளில் 150 கோடி ரூபாயில் உயர்சிகிச்சை அளிக்கும் வகையில் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. "
"செங்கல்பட்டில் 600 கோடி ரூபாய் மதிப்பில் தடுப்பூசி தயாரிப்பு தொழிற்சாலை நிறுவப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக திட்ட மதிப்பீடு தயாரிப்பதற்கான குழு அமைக்கப்பட்டுள்ளது," என்று தமிழிசை தெரிவித்தார்.
பெண்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து உரிய விசாரணை நடத்தப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்ட தமிழிசை, "பெண்கள் குறித்து தவறாக சமூக வளைத்தளத்தில் பதிவிட்ட எஸ்வி.சேகர் நடவடிக்கை தவறு என்று கருதி அவர் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது."
"ஆனால், எஸ்.வி.சேகரை கண்டித்து பேசிய திமுக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சியினர் தற்போது வைரமுத்து மீது பகிரங்கமாக பெண் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளபோது வாய் திறக்காமல் இருப்பது அவர்களின் பாரபட்ச தன்மையை காட்டுகிறது," என்றார்.
"பெண்களுக்கு பாலியல் தொல்லை தருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், " என்றார்.
தொடர்ந்து பேசும்போது, "முதலமைச்சர் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கு அவர்கள் மேல்முறையீடு செய்வதாக பதிலளித்துள்ளனர்.
ஆனால் குற்றச்சாட்டுக்காக முதலமைச்சர் பதவி விலகவேண்டும் என்று கூறுவது தவறு. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் பதவி விலகவேண்டும் என்பது பாஜகவின் நிலைபாடு," என்றார்.
மேலும், 2ஜி குற்றச்சாட்டின்போது ஏன் திமுக பதவி விலகவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
"சபரி மலைக்கு பெண்கள் செல்லமாட்டோம் என்று கூறி வருகின்றனர். ஆனால் பெண்கள் சென்றால் கூட்டம் அதிகரிக்குமே என்று கமல் கருத்து கூறியுள்ளார். "
"அவர் சினிமா தியேட்டரில் கூட்டம் வருவதுபோல் நினைத்து சொல்கிறார், ஆனால் சபரி மலைக்கு செல்வது வழிபாட்டுக்காகதான்," என்றும் குறிப்பிட்டார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்