You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டு, கவிஞர் வைரமுத்து மறுப்பு
பிரபல சினிமா பாடலாசிரியர் வைரமுத்து தன்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயன்றதாக பின்னணிப் பாடகி சின்மயி குற்றம் சாட்டியுள்ளார். அதனை வைரமுத்து மறுத்துள்ளார்.
பிரபலமாகும் ஹாஷ்டாக்
#metoo என்ற ஹாஷ்டாகுடன் நாடு முழுவதும் உள்ள பெண்கள் தாங்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக சமூகவலைதளங்களில் பதிவுசெய்து வருகின்றனர்.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பாக பின்னணிப் பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் பாடலாசிரியர் வைரமுத்துவும் தன்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்டதாக பதிவிட்டார்.
அக்டோபர் 9ஆம் தேதியன்று அவர் வெளியிட்ட பதிவில், இந்த சம்பவம் 2005-2006ஆம் ஆண்டில் நடந்ததாகக் குறிப்பிட்டிருந்தார். இலங்கைத் தமிழர்களுக்காக 'வீழமாட்டோம்' என்ற ஆல்பத்தில் தானும் மாணிக்க விநாயகமும் பாடியிருந்ததாகவும் இது தொடர்பான வெளியீட்டு விழா, சுவிட்ஸர்லாந்தின் சூரிக் அல்லது பெர்ன் நகரில் நடந்ததாகவும் கூறிய சின்மயி, இந்த விழாவில் தாங்களும் கலந்துகொண்டு பாடியதாகக் கூறியுள்ளார்.
விழா முடிந்து எல்லோரும் புறப்பட்ட நிலையில், தன்னையும் தன் தாயாரையும் புறப்பட வேண்டாம் எனக் கூறியதாகவும் அப்போது விழா அமைப்பாளர்களில் ஒருவர் வைரமுத்துவை அவரது அறையில் சென்று சந்திக்குமாறு கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
எதற்காக எனக் கேட்டபோது, ஒத்துழைக்கும்படி அவர் கூறியதாகவும் இல்லாவிட்டால் இந்தத் தொழிலிலேயே இருக்க முடியாது என மிரட்டியதாகவும் சின்மயி தெரிவித்திருக்கிறார். ஆனால், தாங்கள் உறுதியாக நின்று, உடனடியாகத் தங்களை இந்தியாவுக்கு அனுப்பும்படி வலியுறுத்தியதாக சின்மயி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தார்.
தொடரும் குற்றச்சாட்டுகள்
சின்மயி தவிர, பெங்களூரைச் சேர்ந்த பத்திரிகையாளர் சந்தியா மேனன் என்பவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், வைரமுத்துவைக் குற்றம்சாட்டி தனக்கு சிலர் அனுப்பிய வாட்ஸப் செய்தியைப் பதிவுசெய்திருந்தார்.
இது தொடர்பாக ஊடகத்தினர் வைரமுத்துவைத் தொடர்புகொள்ள முயற்சித்து அது முடியாத நிலையில், புதன் கிழமையன்று வைரமுத்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பாக மறுப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்." என்று தன் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளார்.
ஆனால், வைரமுத்து பொய் சொல்வதாக சின்மயி மீண்டும் தெரிவித்திருக்கிறார்.
வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து தேசிய ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், தமிழகத்திலிருந்து வெளியாகும் பெரும்பாலான ஊடகங்கள் அதைப் பற்றிய செய்திகளை வெளியிடவில்லை. இது தொடர்பாகவும் சின்மயி விமர்சனம் செய்திருக்கிறார்.
"வைரமுத்து இரக்கமில்லாமல் மற்றவர்களை பாலியல் ரீதியாக துய்ப்பவர். இதை சாகும்வரை சொல்வேன். இது தொடர்பாக ஒரு டிக்கரைக்கூட வெளியிடாத தமிழ் செய்தி சானல்கள், தில்லி செய்திச் சானல்கள் இது தொடர்பான செய்திகளை வெளியிட்டதும் என்னிடம் 'பைட்' கேட்கிறார்கள். முடியாது" என்று கூறியிருக்கிறார்.
சின்மயிக்கு நடிகர் சித்தார்த், இயக்குனர் சி.எஸ். அமுதன் போன்றவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பிற செய்திகள்:
- ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுர ராஜிநாமா - யார் இந்த நிக்கி ஹேலி?
- விமான பாதுகாப்பில் ஈடுபட்டால் அதிகம் சிரிக்கக்கூடாது - இந்திய போலிஸாருக்கு உத்தரவு
- கடலூரில் 2500 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி
- மாயமான பத்திரிகையாளர் எங்கே? சௌதியிடம் கேட்கும் பிரிட்டன்
- "இதுவே இறுதி" - பருவநிலை மாற்றம் குறித்து எச்சரிக்கும் விஞ்ஞானிகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: