You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஸ்பெயினில் குழந்தைகளைத் திருடிய 85 வயது மருத்துவர் விடுதலை
ஸ்பெயின் நாட்டில் ராணுவ ஆட்சி இருந்தபோது பிறந்த குழந்தைகளைத் திருடி குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு கொடுத்த மருத்துவர் ஒருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
தற்போது 85 வயதாகும் எட்வார்டோ வேலா எனும் அந்த மகப்பேறு மருத்துவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ள போதிலும் பல ஆண்டுகள் கடந்துவிட்டதாகக் கூறி நீதிமன்றம் அவருக்கு தண்டனை எதையும் விதிக்கவில்லை.
ஸ்பெயின் நாட்டில் 1936 முதல் 1939 வரை நடந்த உள்நாட்டு போரில் ஜெனெரல் ஃபிரான்கோ வென்றதைத் தொடர்ந்து உண்டான ராணுவ ஆட்சியின்கீழ், பாசிச ஆட்சியினரால் குடியரசு ஆதரவாளர்கள் என்று அடையாளம் காணப்பட்டவர்களின் குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள் அவர்களிடம் இருந்து பிரிக்கப்பட்டு, அந்தக் குழந்தைகளை வளர்க்கத் தகுதியான குடும்பங்கள் என்று கருதப்பட்ட குடும்பங்களிடம் வழங்கப்பட்டன.
ஃபிரான்கோவின் ஆட்சிக்குப் பிறகு, இவ்வாறு குழந்தைகள் சட்டவிரோதமாக தத்து கொடுக்கப்பட்டது குறித்து விசாரணை தொடங்கியபோது அது தொடர்பாக விசாரிக்கப்பட்ட முதல் நபர் வேலா ஆவார்.
இன்னும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் இவ்வாறு வழங்கப்பட்டன என்று சந்திக்கப்படுகிறது.
1969இல் ஐனெஸ் மேட்ரிகல் எனும் பெண் குழந்தை திருடப்பட்டது குறித்து வழக்கில் எட்வார்டோ வேலா முக்கிய குற்றவாளியாக விசாரிக்கப்பட்டு வந்தார்.
ஐனெஸ் 1987ஆம் ஆண்டே சட்டப்பூர்வ வயதை அடைந்திருந்த போதிலும் 25 ஆண்டுகள் தாமதமாக கடத்தல் குற்றச்சாட்டை முன்வைத்து மருத்துவர் வேலா மீது வழக்கு தொடுத்ததால் வழக்கை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஸ்பெயினில் சட்டபூர்வ வயதை அடைந்தபின் 10 ஆண்டுகளுக்குள் இத்தகைய புகார்களைத் தெரிவிக்க வேண்டும்.
உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக ஐனெஸ் மேட்ரிகல் தெரிவித்துள்ளார்.
ஜெனெரல் ஃபிரான்கோவின் ஆட்சிக்காலம் முடிந்த 1975ஆம் ஆண்டு முதல் 1990கள் வரை குழந்தை கடத்தல் தொடர்பான வழக்குகள் ஸ்பெயினில் பரவலாக பேசப்பட்டன.
அவரது ராணுவ ஆட்சியின்போது குழந்தைகள் பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்பட்டு சட்டவிரோதமாக தத்து கொடுப்பதில் தேவாலயங்களுக்கு முக்கிய பங்கு இருந்ததாக கூறப்படுகிறது.
பாதிரியார்களும் கன்னியாஸ்திரீகளும் குழந்தைக்காக காத்திருக்கும் தம்பதிகளின் பட்டியலை தயார் செய்வார்கள் என்றும் தங்களுக்கு பிறந்த குழந்தைகளின் நிலை குறித்து பெற்றோரிடம் மருத்துவர்கள் பொய்யான தகவலைக் கூறி திருட்டுத்தனமாக பிரித்தார்கள் என்றும் அப்போது கூறப்பட்டது.
அதன்பின் அமைந்த ஜனநாயக ஆட்சியில் நீதிமன்றங்களும் அரசியால்வாதிகளும் குழந்தைக் கடத்தல்கள் குறித்து விசாரிக்க மறுத்து, அந்தக் குற்றங்களில் ஈடுபட்டோருக்கு பொது மன்னிப்பு வழங்கும் சட்டம் ஒன்று இயற்றப்பட்டதால் பல சம்பவங்கள் வெளிவராமல் போயின.
2008இல் பல்டாசார் கர்ஸான் எனும் விசாரணை நீதிபதி ஃபிரான்கோவின் ஆட்சியில் சுமார் 30,000 குழந்தைகள் கடந்தப்பட்டதாக கூறினார்.
சுமார் 3,000 வழக்குகள் பதியப்பட்டாலும் மிகச்சில வழக்குகளே விசாரிக்கப்பட்டன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்