You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய பெண் மீது பா.ஜ.க அமைச்சர் அவதூறு வழக்கு - நடந்தது என்ன?
தன் மீது பாலியல் குற்றஞ்சாட்டிய பெண் மீது பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த வெளியுறவுத் துறை இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளார்.
தற்போதைய வெளியுறவுத் துறை இணை அமைச்சரும், முன்னாள் பத்திரிகை ஆசிரியருமான எம்.ஜே. அக்பர் பாலியல் தொந்தரவு கொடுத்தார் என #MeToo ஹாஷ்டாகின் கீழ் பத்திரிகையாளர் ப்ரியா ரமணி குற்றம் சாட்டினார்.
அவர் தனது பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் பொய் புகார்களை தெரிவிப்பதாகவும், தனது பெயரை கெடுக்கும் வண்ணம் அவதூறு கருத்துக்களை தெரிவிப்பதால் இந்திய தண்டனைச் சட்டம் 499 மற்றும் 500படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்.ஜே. அக்பர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
எம்.ஜே அக்பர் மீதான பாலியல் குற்றச்சாட்டு ட்விட்டரில் பதியப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் #MeToo ஓர் இயக்கமாகவே உருவெடுத்துள்ளது.
தனது பெயரை கெடுப்பதற்காக முழுக்க முழுக்க புனையப்பட்ட ஒரு குற்றச்சாட்டுகள் இவை என அக்பர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் அக்பர் தொடுத்த இந்த கருத்து குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பிரியா ரமணி, "ஒரு மத்திய அமைச்சர் பல்வேறு பெண்களால் கூறப்படும் குற்றச்சாட்டுகளை அரசியல் சதி என்று கூறி அதை புறக்கணிப்பது எனக்கு மிகவும் ஏமாற்றத்தை தருகிறது."
"என்மீது குற்றவியல் அவதூறு வழக்கு தொடுத்துள்ளது மூலம், தன்மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதை விடுத்து வழக்கு தொடுத்து மிரட்ட பார்க்கிறார் என்பது இதன்மூலம் தெரிய வருகிறது."
"எனக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு குறித்து நான் போராட தயாராக உள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.
தன் மீது குற்றம் சுமத்திய மற்றொரு பெண் மீதும் வழக்கு தொடுக்கப்போவதாக அக்பர் அச்சுறுத்தியுள்ளார்.
அக்பர் மீது குற்றம் சுமத்திய ஷுதாபா பால் இதுகுறித்து பிபிசியிடம் பேசியபோது, "இதுகுறித்து நான் யோசித்து வருகிறேன். உண்மையும் நீதியும் நிச்சயம் வெல்லும். நான் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளேன்."
"புகார் கூறிய எங்களை அவமரியாதை செய்வதே அக்பர் தனது அதிகாரத்தை எவ்வாறு பயன்படுத்தினார் என்பதற்கு ஒரு உதாரணம்."
"எங்களது போராட்டம் அனைத்து பெண்களுக்குமானது; நீதிக்கானது, அன்றாட வாழ்க்கையில் பணியிடங்களில் நடக்கின்ற வன்முறைக்கு எதிரானது." என்று அவர் தெரிவித்துள்ளார்.
தொடரும் குற்றச்சாட்டுகள்
நகைச்சுவை நடிகர்கள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், பாடலாசிரியர்கள், நடிகர்கள் மற்றும் திரைப்பட இயக்குநர்கள் என பல பேர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதில் இப்போது அக்பரும் இணைந்துள்ளார்.
தி ஏசியன் ஏஜ் மற்றும் தி டெலிகிராஃப் ஆகிய நாளிதழ்களின் ஆசிரியராக அக்பர் இருந்திருக்கிறார். மிகவும் சக்திவாய்ந்த இதழாளராக அவர் கருதப்பட்டார்.
சில மாதங்களுக்கு முன் பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வைன்ஸ்டீன் மீது நியூயார்க்கில், பாலியல் வன்புணர்வு மற்றும் பல்வேறு வகையான பாலியல் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன.
அது குறித்து அந்த சமயத்தில் ஓர் இதழில் ப்ரியா ரமணி கட்டுரை எழுதி இருந்தார்.
அந்த கட்டுரையை மீண்டும் ட்விட்டரில் பகிர்ந்த ரமணி, அந்த பதிவில் அக்பர் குறித்து குறிப்பிட்டுள்ளார்.
எம்.ஜி.அக்பர் மீது அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஊடகங்கள் அக்பரையும், அவரது துறை சார்ந்த அதிகார்பூர்வ நிகழ்வுகளையும் புறக்கணிக்க வேண்டும் என்று பத்திரிகையாளர் பர்கா தத் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
மேலும் பல பத்திரிகையாளர்கள் அக்பர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குற்றம்சுமத்திய பெண்களுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகிறனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :