You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
எதிர்காலத்துக்காக வங்கியில் பாதுகாக்கப்படும் அரிசி வகைகள்
கடந்த சில மணி நேரங்களில் நடந்த உலக நிகழ்வுகளில் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம்.
எதிர்காலத்துக்காக வங்கியில் பாதுகாக்கப்படும் அரிசி வகைகள்
எதிர்காலத்துக்காக ஆயிரக்கணக்கான அரிசி வகைகள் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பல்வேறு அரிசி வகைகளின் மாதிரிகள் பிலிஃபைன்ஸில் உள்ள உலகின் மிகப்பெரிய அரிசி வங்கியில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. கடுமையான வறட்சி மற்றும் வெள்ள பாதிப்புகள் ஏற்படும்போது, இவற்றை பயன்படுத்தி விவசாயிகளால் மீண்டும் அரிசி பயிரிட்டு உருவாக்க முடியும்.
புவி வெப்பமாகுதல் அதிகரிக்கும் நிலையில், இந்த வங்கி உணவை பாதுகாத்து வைக்கிறது. மேலும், சர்வதேச முயற்சியின் ஒரு அங்கமாக விதைகளும் பாதுகாக்கப்படுகின்றன.
உடை மீதான விமர்சனத்திற்கு பதிலளித்த மெலினியா
"I don't care" ஜாக்கெட் அணிந்து கொண்டது, ஒரு விதமான செய்தியை வெளிப்படுத்துவதற்குதான் என அமெரிக்க அதிபர் டிரம்பின் மனைவி மற்றும் முதல் பெண்மணியான மெலனியா டிரம்ப் ஒப்புக்கொண்டுள்ளார்.
கடந்த ஜூன் 21ஆம் தேதி, டெக்ஸாசில் உள்ள குடியேறி குழந்தைகள் பாதுகாப்பு விடுதிக்கு சென்றிருந்த அவர் "I really don't care, do you?" என்று அணிந்திருந்த ஜாக்கெட் பெரும் சர்ச்சையை எழுப்பியது.
அதற்கு தற்போது பதிலளித்துள்ள மெலனியா, "அது குழந்தைகளுக்கானது அல்ல என்பது அனைவரும் அறிந்ததே. நான் விமானத்தில் ஏறும் போதும், இறங்கும் சமயத்தில்தான் அதனை அணிந்திருந்தேன். அது என்னை விமர்சனம் செய்த மக்கள் மற்றும் இடதுசாரி ஊடகங்களுக்கு நான் கொடுத்த செய்தி" என அவர் ஏபிசி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
பிரிட்டன் அரச குடும்ப திருமணம்
பிரிட்டன் அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசி யூஜீன் மற்றும் ஜாக் ப்ரூக்ஸ்பாங்க் திருமணம் அக்டோபர் 12ஆம் தேதி நடைபெற்றது.
திருமணத்தின்போது இளவரசி யூஜீன் அணிந்திருந்த ஆடை, அவரது முதுகில் உள்ள தழும்பை வெளிக்காட்டும் வகையில் அமைந்திருந்தது. இளவரசிக்கு 12 வயது இருக்கும்போது, அவர் முதுகெலும்பு வளைந்திருந்ததற்கு அறுவை சிகச்சை செய்து கொண்டதினால் ஏற்பட்ட தழும்பு அது.
அழகு என்பது இப்படிதான் என வகை செய்யப்பட்டிருப்பதை மாற்ற வேண்டும் என்றும், தழும்புகளை வெளியே காண்பித்து தைரியமாக நிற்பது அவசியம் என்றும் இளவரசி யூஜீன் தெரிவித்துள்ளார்.
மாயமான பத்திரிகையாளர் : மாநாட்டை புறக்கணிக்க முக்கிய நாடுகள் யோசனை
செளதி அரேபியா பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மாயமானதையடுத்து, செளதி அரேபியாவில் நடைபெறவுள்ள முக்கிய மாநாடு ஒன்றை புறக்கணிப்பது குறித்து பிரிட்டன் மற்றும் அமெரிக்க யோசித்து வருவதாக பிபிசிக்கு தெரியவந்துள்ளது.
செளதியின் முடியாட்சியை தொடர்ந்து விமர்சித்த வந்த ஜமால் கசோஜி, அக்டோபர் 2ஆம் தேதி துருக்கியில் உள்ள செளதி தூதரகத்திற்கு சென்றார். அதன்பின் அவரைக் காணவில்லை.
துருக்கி அதிகாரிகள் அவர் செளதியில் கொல்லப்பட்டிருக்கலாம் என நம்புகிறார்கள். ஆனால் அந்தக் குற்றச்சாட்டுகள் "பொய்" என செளதி மறுத்துள்ளது.
பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு சௌதி அரசுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா சௌதி அரசுக்கு கடுமையான தண்டனையை வழங்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்திருந்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்