You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஏர் இந்தியா விமான பணிப்பெண் விமானத்தில் இருந்து கீழே விழுந்து காயம்
இந்தியாவின் மும்பை விமான நிலையத்தில் நிறுத்தப்பட்ட ஏர் இந்தியா விமானத்தின் கதவு வழியாக கீழே விழுந்த பணிப்பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.
திங்கட்கிழமையன்று காலை, மும்பையில் இருந்து டெல்லிக்கு செல்லவிருந்த விமானத்தில் பயணிகள் உள்ளே ஏறிய பிறகு, விமானத்தின் நுழைவாயிலை மூடும்போது, 52 வயது ஹர்ஷா லோபோ விமான ஓடுதளத்தில் விழுந்ததில் அவருக்கு அடிபட்டது.
கீழே விழுந்ததில் காயங்களும், எலும்பு முறிவும் ஏற்பட்ட லோபோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அரசின் விமான நிறுவனமான ஏர் இந்தியா, இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளது.
"இதுவொரு துரதிருஷ்டவசமான விபத்து. ஏர் இந்தியாவின் பணியாளர் ஹர்ஷா லோபோ போயிங்-777 விமானத்தின் நுழைவாயிலை மூடும்போது விமான ஓடுதளத்தில் விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்ட்து" என்று ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மும்பை விமான நிலையத்தில் இருந்த மருத்துவர்கள் விமான பணிப்பெண் லோபாவை பரிசோதித்த பின் மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
"அவருக்கு பெரிய அளவில் காயங்கள் ஏற்படவில்லை என்றாலும், வலது காலின் கீழ்புற எலும்புகளில் முறிவு ஏற்பட்டுள்ளது மற்றும் பல்வேறு இடங்களில் சிராய்ப்புகள் ஏற்பட்டுள்ளன" என்று விமான நிலைய அதிகாரி கூறியதாக ஹிந்து ஆங்கிலப் பத்திரிகை கூறுகிறது.
சில தினங்களுக்கு முன்னதாக திருச்சியில் இருந்து துபாய் புறப்பட்ட ஏர் இந்தியாவின் பயணிகள் விமானம் ஒன்று விமான நிலைய சுற்றுச்சுவரில் மோதி சேதம் அடைந்தது.
130 பயணிகள் மற்றும் 6 விமான பணியாளர்களை ஏற்றிச் சென்ற அந்த விமானம் மும்பைக்கு திசை திருப்பப்பட்டு அங்கு பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.
இந்த சம்பவம் விமான ஓழங்குமுறை ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டு, இது தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்து வருவதாக ஏர் இந்தியா கூறியுள்ளது.
இந்தியாவின் மிகப்பழமையான விமான நிறுவனங்களில் ஒன்றான ஏர் இந்தியா, 2007ஆம் ஆண்டிலிருந்த லாபமின்றி இயங்கி கொண்டிருக்கிறது.
2017ஆம் ஆண்டு ஜூன் மாதம், ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார்மையமாக்க இந்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. ஆனால், கட்டுப்படுத்தக்கூடிய அளவிற்கான பங்குகளை அரசு விற்க முன்வந்தது, யாரும் ஏர் இந்தியாவின் பங்குகளை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டவில்லை.
ஒரு வாரம் முன்பாக விமான கேபின் காற்றழுத்தத்தை ஒழுங்குபடுத்தும் விசையை இயக்க ஜெட் ஏர்வேஸ் விமானிகள் மறந்துவிட்டதால் விமானத்தில் பயணம் செய்த 30க்கும் மேற்பட்டோருக்கு மூக்கிலும், காதிலும் ரத்தம் வழிந்தது. பிறகு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :