ஜமால் கசோஜி: துருக்கி ஊடகம் வெளியிட்ட சிசிடிவி வீடியோவில் சௌதி உளவுக் குழு?

காணாமல் போன செளதி பத்திரிகையாளர் ஜமால் கசோஜி தொடர்புடைய சிசிடிவி காணொளியை வெளியிட்டது துருக்கி ஊடகம்.

செளதி உளவு அதிகாரி என கருதப்படும் ஒருவர் துருக்கிக்குள் இஸ்தான்புல் விமான நிலையம் வழியாக வந்து செல்லும் காட்சி அந்த காணொளியில் உள்ளது.

செளதியின் முடியாட்சியை தொடர்ந்து விமர்சித்த வந்த ஜமால், அக்டோபர் 2 ஆம் தேதி துருக்கியில் உள்ள செளதி தூதரகத்திற்கு சென்றார். அதன்பின் அவரை காணவில்லை.

துருக்கி அதிகாரிகள் அவர் கொல்லப்பட்டுவிட்டார் என்கிறார்கள். ஆனால், செளதி இந்த குற்றச்சாட்டை மறுக்கிறது.

வேறென்ன இருக்கிறது அந்த காணொளியில்?

பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருக்கும் கேமிராவிலிருந்து பெறப்பட்ட காணொளியை துருக்கியின் டி.ஆர்.சி உலக தொலைக்காட்சி வெளியிட்டிருக்கிறது. கறுப்பு வேன் உள்ளிட்ட வாகனங்கள் தூதரகத்திற்கு வரும் காட்சிகள் அந்த காணொளியில் உள்ளன.

செளதி ஆண்கள் குழு ஒன்று துருக்கிக்கு இஸ்தான்புல் விமான நிலையம் வழியாக வரும் காட்சிகள், பின் அவர்கள் விடுதிக்குள் செல்லும் காட்சிகளும், துருக்கியைவிட்டு வெளியேறும் காட்சிகளும் அந்த காணொளியில் உள்ளன.

ஜமால் தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு துருக்கி பெண் ஒருவரை திருமணம் செய்ய இருக்கிறார். விவாகரத்து தொடர்பான ஆவணங்களை பெறுவதற்காகத்தான் அவர் தூதரகம் சென்றார்.

ஜமால் தூதரகத்திற்குள் செல்லும் காட்சி அந்த காணொளியில் உள்ளது. அவர் திருமணம் செய்துக் கொள்ள இருக்கும் துருக்கிய பெண் வெளியே காத்துக் கொண்டிருக்கிறார்.

15 பேர் குழு

பதினைந்து பேர் கொண்ட உளவுக் குழு ஒன்றை தாங்கள் அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்கள்தான் ஜமால் காணாமல் போன விவகாரத்தில் தொடர்புடையவர்கள் என்றும் துருக்கி நாளிதழ் சபா செய்தி வெளியிட்டுள்ளது.

விசாரணையின் ஒரு பகுதியாக 150 சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆய்வுக்கு உட்படுத்தவுள்ளது துருக்கி காவல்துறை.

சில துருக்கி ஊடகங்கள் அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என்றும் செய்தி வெளியிட்டுள்ளன.

யார் இந்த ஜமால்?

ஒரு காலத்தில் செளதி அரச குடும்பத்தின் ஆலோசகராக இருந்தவர், பின் செளதி அரசாங்கத்திற்கு எதிராக திரும்பினார். அதற்கு பிறகு அவர் செளதியிலிருந்து வெளியேறினார்.

சரி யார் இந்த ஜமால். ஓர் ஊடகவியலாளர் காணாமல் போனது உலக அளவில் தலைப்பு செய்தியாக மாற என்ன காரணம்?

இஸ்லாமியர்களின் புனித நகரமான மதினாவில் 1958 ஆம் ஆண்டு பிறந்தவர் ஜமால். அமெரிக்காவில் உள்ள இந்தியானா பல்கலைக்கழகத்தில் வணிக மேலாண்மை பயின்றவர்.

பின் செளதி அரேபியா திரும்பியவர், பத்திரிகையாளராக தம் பணியை தொடங்கினார். ஆப்கனில் சோவியத் ஊடுருவியபோது அது தொடர்பான செய்திகளை உள்ளூர் ஊடகத்தின் சார்பாக சேகரித்தார்.

ஒசாமா பின் லேடனின் எழுச்சியை நேரில் கண்டவர் ஜமால். 1980 - 90 காலகட்டத்தில் பல முறை ஒசாமாவுடன் நேர்காணல் செய்துள்ளார்.

வியத்தகு பத்திரிகையாளர்

அங்கிருந்து பல முக்கிய நிகழ்வுகள் குறித்து எழுதி இருக்கிறார் ஜமால். குறிப்பாக முதல் வளைகுடா யுத்தம் குறித்து பல செய்திகளை அங்கிருந்து வழங்கி இருக்கிறார்.

1990 ஆம் ஆண்டு செளதி அரேபியாவுக்கு திரும்பினார். 1999 ஆம் ஆண்டு அரப் நியூஸ் எனும் ஆங்கில செய்திதாளில் துணை ஆசிரியராக பொறுப்பேற்றார்.

2003 ஆம் ஆண்டு அல் வாடன் நாளிதழுக்கு ஆசிரியராக பொறுப்பேற்றார். ஆனால், செளதி அரசின் ஒரு அலுவல் திட்டத்தை விமர்சித்ததற்காக அங்கிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டார்.

பின் அங்கிருந்து லண்டன் சென்றார். சில காலம் அங்கே வசித்தவர் வாஷிங்டன் சென்று செளதி அரேபியாவின் முன்னாள் உளவுத்துறை தலைவருக்கு ஊடக ஆலோசகராகப் பணியாற்றினார்.

மீண்டும் 2007 ஆம் ஆண்டு, 'அல் வாடன்' நாளிதழில் பணிக்கு சேர்ந்தவர், சில சர்ச்சைகளால் மீண்டும் அங்கிருந்து வெளியேறினார்.

அரபு வசந்த எழுச்சிக்குப் பின் 2011 ஆம் ஆண்டு, பல நாடுகளில் இஸ்லாமியக் குழுக்கள் அதிகாரம் அடைந்தன. அவர்களுக்கு தன் ஆதரவை வழங்கினார் ஜமால்.

கத்தார் அரசின் ஆதரவில் இயங்கும் 'அல் ஜசீரா'வுக்கு எதிராக செளதி ஆதரவில் அல் அரப் தொலைக்காட்சி 2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டபோது அதன் தலைமை பொறுப்பை ஏற்றார் இவர்.

ஆனால், 2015 ஆம் ஆண்டு பஹ்ரைனில் தொடங்கிய 24 மணி நேரத்திலேயே ஒளிப்பரப்பலை நிறுத்தியது அந்த தொலைக்காட்சி. அதற்கு பஹ்ரைனின் எதிர்க்கட்சித் தலைவரை பேச அழைத்ததுதான் காரணம்.

செளதியின் விவகாரங்கள் குறித்து காத்திரமாக எழுதும் செய்தியாளராக பார்க்கப்பட்டார் ஜமால்.

செளதியைவிட்டு வெளியேறினார்

ஜமால் 2017 ஆம் ஆண்டு கோடைகாலத்தில் செளதியைவிட்டு வெளியேறி அமெரிக்கா சென்றார்.

கைது செய்யப்படுவோம் என்ற பயத்தில் பலர் செளைதியைவிட்டு வெளியேறுவதாக வாஷிங்டன் போஸ்டில் செப்டம்பர் மாதம் எழுதிய முதல் பத்தியில் குறிப்பிட்டிருந்தார்.

தனது பத்தியை வெளியிட கூடாது என்று செளதி அரசு 'அல் ஹயாத்' பத்திரிகையின் வெளியீட்டாளருக்கு அழுத்தம் தருவதாக குற்றஞ்சாட்டி இருந்தார்.

ட்விட்டரில் 1.8 மில்லியன் பேர் ஜமாலை பின் தொடர்கிறார்கள்.

அவர் செளதியை கடுமையாக விமர்சித்தார். அதன் முடி இளவரசரை ரஷ்ய அதிபர் புதினுடன் ஒப்பிட்டர்.

அவர் காணாமல் போனதை குறிப்பிடுவதற்காக, வழக்கமாக பத்தி எழுதும் இடத்தில் ஜமால் பெயரை மட்டும் போட்டு வெற்றிடம் விட்டது வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :