திருமணி முத்தாறு - கழிவுகளால் பொங்கும் நுரையால் அவதியுறும் பொதுமக்கள்

பெய்யும் மழைக்காக மகிழ்வதா, வருத்தப்படுவதா என குழப்பத்தில் உள்ளதாக தெரிவிக்கின்றனர் சேலம் திருமணி முத்தாற்று கரை பகுதி மக்கள். சேலத்தின் முக்கிய ஆற்றுபகுதியாக இருந்து தற்போது கழிவு நீர்வாய்க்காலாக மாறியுள்ள திருமணிமுத்தாற்றில் சாயக்கழிவுகளால் நுரை பொங்குகின்றது என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ள சேலம் மாநகரத்தில், மழையின் காரணமாக அதிகரித்துள்ள நீர்வரத்தால், திருமணிமுத்தாற்றில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் அளவுக்கு அதிகமான சாயக்கழிவுகளை கலந்ததால் சுற்றுச்சூழலை பாதிக்கும் அளவிற்கு நுரை பொங்கியதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சாதாரணமாகவே இவ்வாறு வெளியேற்றப்படும் கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதோடு, தொற்றுநோய் ஏற்படுத்தும் சூழலில் உள்ள நிலையில், தற்போது அதுவும் மழைகாலத்தில் இவ்வறாக திறக்கப்படும் கழிவு நீரால் பொதுமக்கள் அவல நிலையை அதிகரிக்கும் என்கின்றார் இம்மணிமுத்தாறு கரை பகுதிக்கு அருகில் விவசாயம் செய்து வரும் ரவி .

சேலத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்த நிலையில், நேற்றிரவு சுமார் இரண்டு மணி நேரம் சுமார் 7 சென்டிமீட்டர் அளவிற்கு கனமழை கொட்டித்தீர்த்து. இதன்காரணமாக திருமணிமுத்தாற்றில் வெள்ளம் ஏற்பட்டது. புகழ் பெற்ற திருமணிமுத்தாறு ஆக்கிரமிப்புகளால் ஏற்கனவே கழிவுநீர்க்கால்வாயாக மாறி அடையாளம் தெரியாமல் போனது. இந்த நிலையில் சாயக்கழிவுகளும் கலப்பதால் சுற்றுச்சூழல் பெருமளவில் பாதிக்கப்படுகிறது.

குறிப்பாக மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளத்தின் போது சாயப்பட்டறைகளில் சுத்திகரிப்பு செய்யப்படாமல் தேக்கி வைக்கப்படும் ரசாயன கழிவுநீர் திருமணிமுத்தாற்றில் அப்படியே திறந்துவிடுவது வாடிக்கையாக உள்ளது.

இதன் காரணமாக சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஆங்காங்கே வெள்ளை நிறத்தில் நுரை பொங்கி சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கிறது. இதனால் நிலத்தடி நீர் மாசடைவதோடு, விளைநிலங்களும் பாதிக்கப்படுவதாகவும், சுற்றுவட்டார குடியிருப்புவாசிகளுக்கு தோல் வியாதி, மூச்சுத்திணறல் போன்ற உபாதைகள் ஏற்படுவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர் இப்பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள்.

ரசாயன கழிவு கலந்த இந்த தண்ணீரானது நேரடியாக காவிரி ஆற்றில் கலப்பதால் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கும் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகிறது. சேலத்தில் இயங்கி வரும் சாயப்பட்டறைகள், சலவை ஆலைகள் போன்றவற்றிலிருந்து முறையாக சுத்திகரிப்பு செய்யாமல் கழிவு நீர் வெளியேற்றப்படுவதே இதற்கு முக்கிய காரணமாகும்.

நீண்டகாலமாக நீடித்து வரும் இப்பிரச்சனை குறித்து அடுக்கடுக்கான புகார்கள் வந்த போதும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொள்ளும் நடவடிக்கை கண்துடைப்பாகவே உள்ளது என்ற குற்றசாட்டும் முன் வைக்கப்படுகிறது. முறைப்படி தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படுமேயானால் இவ்வறான நிகழ்வுகள் தடுக்க இயலும், இதற்கு மாசுகட்டுபாடு வாரியம் முன்வருமா என கேள்வி எழுப்புகின்றனர்.

சடத்திற்க்கு புறம்பாக சாயக்கழிவுகளை சுத்திரிப்பு செய்யாமல் வெளியேற்றும் ஆலைகள், கழிவுகளை அதிக அளவில் தேக்கி வைத்து மழைகாலங்களில் மழைநீர் ஓட்டம் அதிகரிக்கும் வேளையில் கழிவுகளை அதிக அளவில் வெளியேற்றும் சாயப்பட்டறைகள் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அவ்வப்போது ஏற்படும் இதுபோன்ற பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணமுடியும் என்கின்றனர் பொதுமக்கள்.

இது குறித்து மாவட்ட மாசுகட்டுபாடு வாரிய உதவி நிர்வாக பொறியாளார் விஸ்வநாதன் கூறும் போது, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டம் வழியாக செல்லும் இந்த திருமணிமுத்தாற்றில் மழை நீர் அதிகரித்துள்ளது. இந்த ஆற்றில் கலக்கபடும் கழிவுகளால் அகற்றவும், மேலும் கழிவுகள் கலக்காமல் இருக்க நாமக்கல் மற்றும் சேலம் மாவட்ட மாசுகட்டுபாடு வாரியஅதிகரிகளால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: