நிக்கி ஹேலி: ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதர் ராஜினாமா ஏன்?

அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார். இரண்டு வருட பணிக் காலத்துக்கு பிறகு அவரின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

தனது அலுவலகத்தில் ஹேலியுடன் தோன்றி பேசிய டிரம்ப், " நிக்கி ஹேலி வியக்கத்தக்க பணியை ஆற்றியுள்ளார்" என தெரிவித்தார்.

தெற்கு கரோலினாவின் முன்னாள் ஆளுநராக இருந்தவர் 46 வயது ஹேலி.

டிரம்ப் அமைச்சரவையில் இருக்கும் ஒரு சில பெண்களில் இவரும் ஒருவர். மேலும், ராஜிநாமாவுக்கான காரணத்தை ஹேலி தெரிவிக்கவில்லை.

அதே சமயம் 2020ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் அவர் போட்டியிடப்போவதாக எழுந்துள்ள ஊகங்களை மறுத்துள்ளார்.

Presentational grey line
Presentational grey line

நிக்கியின் ராஜிநாமாவை அடுத்து அப்பதவிக்கான பெயரை ஒரு சில வாரங்களில் அறிவிப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தனது முன்னாள் பாதுகாப்பு கவுன்சில் ஆலோசகரான டினா போவெல்லை இந்த பதவிக்கு அறிவிக்கலாம். அதே சமயம் தனது மகள் இவான்கா "இந்த பதவிக்கு வலு சேர்க்கும் விதமாக இருப்பார்" என்றும் ஆனால் தன் மகள் என்பதால் அவருக்கு வாய்ப்பளித்தாக பிறர் குற்றம் சுமத்தலாம் என்றும் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

சிறிது நேரத்தில் தான் பதவிக்கான போட்டியில் இல்லை என்று இவான்கா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

நிக்கியின் இந்த திடீர் முடிவுக்கு காரணம் என்ன?

தனது இந்த ராஜிநாமா குறித்தும் அல்லது தனது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும் நிக்கி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

பொது சேவையில் தனது பணிக்காலத்தை சுட்டிக்காட்டிய அவர், "எட்டு வருடங்கள் ஆகிவிட்டன எதற்கும் கால எல்லை உண்டு என்று நம்புபவள் நான்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து எந்த திட்டமும் இல்லை எனவும் தெரிவித்தார்.

Presentational grey line

தான் டிரம்புக்கு தேர்தல் பிரசாரம் செய்யப்போவதாகவும் தெரிவித்தார் நிக்கி.

தனது பணியிலிருந்து சிறிது காலம் ஓய்வு எடுக்க போவதாக சிறிது காலத்துக்கு முன் நிக்கி தெரிவித்திருந்தார் என டிரம்ப் கூறினார்.

"நிக்கி எனக்கு மிகவும் பிடித்தவர் தனது பணியை சிறப்பாக செய்தார் அவர் ஒரு அருமையான மனிதர்" என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

யார் இந்த நிக்கி ஹேலி?

நிக்கி

பட மூலாதாரம், Getty Images

  • தெற்கு கரோலினாவில் உள்ள பேம்பெர்கில் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்த குடியேறிகளுக்கு பிறந்தவர் நிக்கி. இவரின் இயற்பெயர் நிம்ரதா ரந்தாவா.
  • சீக்கிய மதத்தை சேர்ந்த இவர் பின் கிறித்துவ மதத்துக்கு மாறினார்.
  • 2010ஆம் ஆண்டு தெற்கு கரோலினாவின் ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், முதல் பெண் ஆளுநர், சிறுபான்மையினரிலிருந்து வந்த முதல் ஆளுநர், அமெரிக்காவின் இளம் வயது ஆளுநர் என்ற சிறப்புகளை பெற்றுள்ளார். 2014ஆம் ஆண்டு மீண்டும் ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 2015ஆம் ஆண்டு சார்லஸ்டனில் தேவலாயத்துக்கு செல்லும் கருப்பின மக்கள் மீது பெரும் அளவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு பிறகு மாநிலத்தின் தலைநகரிலிருந்து அடிமைத்தனம், வெறுப்பு, `வெள்ளை` இனத்தவர்களின் ஆதிக்கம் ஆகியவற்றை பறைசாற்றும் கொடியாக கருதப்படும் கூட்டமைப்பு கொடியை அகற்றியதற்காக நாடு முழுவதும் பாராட்டுக்கள் குவிந்தன.
  • 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில், ஃபுளோரிடாவின் செனடரை ஆதரித்தார் பின் தனது ஆதரவை டிரம்பிற்கு வழங்கினார்.
  • தேசிய பாதுகாப்புப் படையில் இருக்கும் கேப்டன் மிஷெல் ஹேலிதான் நிக்கியின் கணவர். இவர்களுக்கு பதின்ம வயதில் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

எப்படி இருந்தது நிக்கி ஹேலியின் பதவிக்காலம்?

தெற்கு கரோலினா தலைவர்களிடமிருந்து, விலையுயர்ந்த தனியார் விமான பயணங்களை பரிசாக பெற்றுள்ளார் என ஊழல் எதிர்ப்பு அமைப்பு ஒன்று நிக்கியின் மீது குற்றஞ்சாட்டிய அடுத்த நாளில் அவர் தனது ராஜாநாமாவை அறிவித்துள்ளார்.

2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க தேர்தலில் தொடர்ந்து டிரம்பை விமர்சித்தவர் ஹேலி.

டிரம்பின் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்திய பெண்களின் கருத்துக்கள் கேட்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் ஒரு தருணத்தில் டிரம்பின் சொல்லாடல் உலகப் போருக்கு வித்திடும் எனவும் ஹேலி தெரிவித்திருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :