மாயமான பத்திரிகையாளர் எங்கே? சௌதியிடம் கேட்கும் பிரிட்டன்

பட மூலாதாரம், Getty Images
கடந்த சில மணி நேரங்களில் நிகழ்ந்த உலக நடப்புகளில் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம்.
மாயமான பத்திரிகையாளர் எங்கே? சௌதியிடம் கேட்கும் பிரிட்டன்
சௌதி பத்திரிகையாளர் ஜமால் கஷோஜி மாயமானது குறித்து, சௌதி அரேபியா உடனடியாக பதில் அளிக்க வேண்டும் என எதிர்பார்ப்பதாக பிரிட்டனின் வெளியுறவுச் செயலர் தெரிவித்துள்ளார்.
சௌதியின் வெளியுறவு அமைச்சர் அடெல் - அல் - ஜூபேரை தொலைபேசியில் தொடர்புகொண்ட வெளியுறவு செயலர் ஜெரீமி ஹன்ட், '' நட்பு என்பது ஒருவரையொருவர் மதித்து நடப்பதை பொருத்தது'' என தெரிவித்துள்ளார்.
கசோஜி கடைசியாக இஸ்தான்புல்லில் உள்ள சௌதி தூதரகத்துக்கு சென்றார். அங்கே அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என துருக்கி தெரிவிக்கிறது. ஆனால் சௌதி இதனை மறுத்துள்ளது.
இந்த விவகாரத்தை பொருத்தவரையில் ஊடகங்களில் வெளியான செய்திகள் உண்மை எனில் இந்நிகழ்வினை பிரிட்டன் மிகவும் தீவிரமான ஒன்றாக கருதி அதற்கேற்ப அணுகும் என பிரிட்டன் வெளிநாட்டு விவகாரங்கள் தொடர்பான அலுவலகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
காணாமல் போன சௌதி பத்திரிகையாளர் ஜமால் கசோஜி-யை இஸ்தான்புல்லிலுள்ள சௌதி அரேபிய துணைத் தூதரகத்தில் தேடப் போவதாக துருக்கி கூறியுள்ளது.
ஜமால் கசோஜி விவகாரத்தில் புலனாய்வுக்கு ஒத்துழைக்கத் தயராக இருப்பதாக சௌதி அரேபியா கூறியுள்ள நிலையில், துருக்கி வெளியுறவு அமைச்சகம், புலனாய்வின் ஒரு பகுதியாக தூதரக கட்டடத்திற்குள் தேடுதல் நடத்தப்படலாம் என்று தெரிவித்துள்ளது.



பட மூலாதாரம், Reuters
மீண்டும்கிம் ஜாங் உன் - டிரம்ப் சந்திப்பு?
வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னுடனான இரண்டாவது சந்திப்பு நடக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருக்கிறார். இருவரின் சந்திப்பதற்கான ஏற்பாடு வேலைகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
நவம்பர் மாதம் நடக்கவுள்ள இடைதேர்தலுக்கு பிறகே இந்தச் சந்திப்பு நடக்கும் என அவர் பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளார்.
அதிபர் டிரம்ப் - கிம் இடையிலான முதல் உச்சிமாநாடு கடந்த ஜூன் மாதம் நடந்தது. அதில் கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற மண்டலமாக்க வடகொரியா ஒப்புக்கொண்டது.
எனினும் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத ஆராய்ச்சிகளை தொடர்வதாகவும் அணு ஆயுதமற்ற பிராந்தியமாக்குவதற்கான வேலைகளில் ஈடுபடவில்லை என்றும் செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில் கிம் - டிரம்ப் சந்திப்பு குறித்து ஓர் அறிவிப்பு வந்திருக்கிறது.
''இம்முறை இரு தலைவர்களும் சந்திப்பதற்கு மூன்று நான்கு இடங்கள் பரிசீலனையில் உள்ளன. பெரும்பாலும் சிங்கப்பூரிலேயே அடுத்த சந்திப்பும் நடக்காது '' என டிரம்ப் தெரிவித்துள்ளார்.



ஆப்கானிஸ்தான் : இளம் வேட்பாளர் உள்ளிட்ட எட்டு பேர் பலி
ஆப்கானிஸ்தான் தேர்தலில் போட்டியிடும் ஒரு இளம் வேட்பாளர் உள்ளிட்ட எட்டு பேர் ஹெல்மண்ட்டில் நடந்த ஒரு தற்கொலை குண்டுதாரியின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லஸ்கர் கா நகரத்தில் சலீம் மொஹம்மத் அசக்சாய் அலுவலகத்துக்குள் சென்று தற்கொலை குண்டுதாரி தனது குண்டுகளை வெடிக்கவைத்தார். இதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
ஆப்கனில் இம்மாதம் நடக்கவுள்ள தேர்தலுக்காக பிரசாரத்தில் ஈடுபட்டுவரும் ஒரு வேட்பாளரை குறிவைத்து தாக்குதல் நடத்துவது இது இரண்டாவது முறை.
மக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என தாலிபன் மற்றும் ஐஎஸ் குழு இரண்டுமே வலியுறுத்தியுள்ளது.
இதுவரை எந்தவொரு குழுவும் சமீபத்தில் நடந்துள்ள இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை என AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


பட மூலாதாரம், Getty Images
ஐ.நாவுக்கான அமெரிக்க தூதர் ராஜிநாமா
ஐ.நாவுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார். இரண்டு வருட கால பணிக் காலத்துக்கு பிறகு அவரின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
தனது அலுவலகத்தில் ஹேலியுடன் தோன்றி பேசிய டிரம்ப், நிக்கி ஹேலி, "வியக்கத்தக்க பணியை ஆற்றியுள்ளார்" என தெரிவித்தார்.
தெற்கு கரோலினாவின் முன்னாள் ஆளுநராக இருந்தவர் 46 வயது ஹேலி.
டிரம்ப் அமைச்சரவையில் இருக்கும் ஒரு சில பெண்களில் இவரும் ஒருவர். மேலும், ராஜாநாமாவுக்கான காரணத்தை ஹாலி தெரிவிக்கவில்லை.
அதே சமயம் 2020ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் அவர் போட்டியிடப்போவதாக எழுந்துள்ள ஊகங்களை மறுத்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












