டிரம்ப் - கிம் ஒப்பந்தம்: இந்த நூற்றாண்டின் ஒப்பந்தமா? வெறும் நீர்க்குமிழியா?
பல மாதங்களாக நிலவிய பெருத்த எதிர்பார்ப்புக்கு பின்னர் அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங்-உன் ஆகியோர் நேருக்கு நேர் சந்தித்துள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
இன்றைய சிங்கப்பூர் சந்திப்பில் அவர்கள் கையெழுத்திட்ட ஒப்பந்தம் 'இந்த நூற்றாண்டின் ஒப்பந்தமா' அல்லது 'ஒன்றுமில்லாத நீர்குமிழியா'?
அமெரிக்காவும் வடகொரியாவுக்கு ஒப்புக்கொண்டுள்ளவையும் அந்த ஒப்பந்தம் குறித்த விமர்சனங்களுக்கு டிரம்ப் அளித்துள்ள பதிலும் இதோ.
அணு ஆயுத நீக்கம்
கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத நீக்கத்தை நோக்கி வடகொரியா உறுதியுடன் செயல்படும் என்று இரு தரப்பும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எனினும், 'அணு ஆயுத நீக்கம்' என்பது வடகொரியா தனது அணு ஆயுத திட்டத்தைக் கைவிடுவதா இல்லை, தென்கொரியாவுக்கு ஆபத்து என்றால் அமெரிக்கா அணு ஆயுதங்களை பயன்படுத்தும் என்ற அமெரிக்காவின் உறுதிமொழியும் கைவிடப்படுமா என்று தெளிவாகக் கூறப்படவில்லை.
அணு ஆயுத நீக்கம் என்பது என்ன பொருள் தருவதாக இருந்தாலும், அது குறித்து பேசிய டிரம்ப்,"அணு ஆயுத நீக்கம் விரைவில் செயல்படுத்தப்படும். வடகொரியாவால் அணு ஆயுதங்கள் பயன்படுத்த முடியாமல் போகும் நிலை வரும்போது வடகொரியா மீதான தடைகள் ரத்து செய்யப்படும்," என்று கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
போர் விளையாட்டு
கூட்டறிக்கையில் இல்லாவிட்டாலும், அமெரிக்காவும் தென்கொரியாவும் ஆண்டுதோறும் நடத்தும் மிகப்பெரிய ராணுவ ஒத்திகை இனி நடத்தப்படாது என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அந்த ஒத்திகை நீண்ட காலமாக வடகொரியாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதை நிறுத்தினால் அணு ஆயுத சோதனைகளை நிறுத்திக்கொள்வதாகவும் அந்நாடு முன்பு கூறியுள்ளது.
இந்த போர் விளையாட்டுகளை முடிவுக்கு கொண்டுவருவது பணத்தை மிச்சப்படுத்துவது மட்டுமல்லாது பலரது பாராட்டையும் பெரும் என்று டிரம்ப் கூறியுள்ளார்.
"இவை ஒருவரை ஒருவர் தூண்டும் வகையிலும் அமைத்துள்ளன," என்கிறார் அவர்.

பட மூலாதாரம், AFP
ஏவுகணை சோதனைகள்
கூட்டறிக்கையில் இல்லாத இன்னொரு தகவல், தனது அணு ஆயுத சோதனைக்களம் ஒன்றை அழிப்பதாக வடகொரியா உறுதியளித்துள்ளது.
கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் ஏவுகணை சோதனைகளை கட்டுப்படுத்துவது குறித்து அமெரிக்கா எதையும் குறிப்பிடவில்லை என்று சில சர்வதேச அரசியல் நோக்கர்கள் வியப்படைந்துள்ளனர்.
"அவை விரைவில் அழிக்கப்படும். அது மிகப்பெரிய நடவடிக்கை," என்று டிரம்ப் கூறியுள்ளார்.
மனித உரிமைகள்
கிம் உடன் சந்திப்பை முடித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த டிரம்பிடம், மனித உரிமை மீறல்கள் குறித்து ஒப்பந்தத்தில் ஏன் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும் வடகொரியாவின் கடும் பணி தடுப்பு முகாம்களில் உள்ள அரசியல் கைதிகள் குறித்தும் ஏதேனும் விவாதிக்கப்பட்டதா என்றும் கேட்கப்பட்டது.
"அது குறித்து நான் இப்போது எதுவும் செய்ய முடியாது. காலம் வரும்போது கிம் இது குறித்து நடவடிக்கை எடுப்பார்," என்றார் டிரம்ப்.

பட மூலாதாரம், Reuters
வடகொரியாவின் உள்ள அரசியல் கைதிகள் இந்த பேச்சுவார்த்தை மூலம் பெரும் ஆதாயம் அடைபவர்களில் ஒருவராக இருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
நெருக்கமான உறவுகள்
கொரிய தீபகற்பத்தில் 'நீடித்த மற்றும் நிலையான வளர்ச்சி' பெற இரு நாடுகளும் உறுதி பூண்டுள்ளதாகவும், அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையே புதிய உறவு தொடங்கும் என்றும் கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அப்படியானால், வடகொரிய அதிபருக்கு அளவுக்கும் அதிகமான அங்கீகாரத்தை நீங்கள் வழங்குகிறீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், "நான் அப்படி எதையும் பார்க்கவில்லை. இந்த உலகை அமைதியான இடமாக எதையெல்லாம் செய்ய வேண்டுமோ அதைச் செய்வேன்," என்றார்.
"நான் வடகொரிய தலைவரை வெள்ளை மாளிகைக்கு அழைத்துள்ளேன். அது முக்கியமானதென்று கருதுகிறேன். அவரும் அதற்கு ஒப்புக்கொண்டுள்ளார்," என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஒப்பந்தத்தை கடைபிடிப்பது
சர்வதேச ஒப்பந்தங்களைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதில் இருந்து வடகொரியா எப்போதுமே தவறியுள்ளது. எனினும், இந்த ஒப்பந்தத்தை கிம் ஜாங்-உன் நிறைவேற்றுவார் என்று டிரம்ப் நம்புகிறார்.

பட மூலாதாரம், Getty Images
"அவர் இவற்றையெல்லாம் நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன். நான் சொல்வது ஒரு வேளை நடக்காமல் கூடப் போகலாம். ஆறு மாதங்கள் கழித்து நான் உங்களை சந்தித்து 'நான் சொன்னது தவறு' என்று கூட சொல்ல நேரிடலாம். ஆனால், எப்படியாவது அதற்கு ஒரு காரணத்தை கண்டுபிடித்து விடுவேன்," என்று டிரம்ப் கூறியுள்ளார்.
வெற்றியா தோல்வியா?
டிரம்ப்-கிம் சந்திப்பில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் வெற்றிபெற்றுள்ளதா தோல்வியடைந்துள்ளதா என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும். எனினும், 'இதுவரை யாரும் சாதிக்காத ஒன்றை டிரம்ப் சாதித்துள்ளார்,' என்று தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் பாராட்டியுள்ளார்.
கொரிய நாடுகளிடையே போரால் உண்டாக கருப்பு நாட்களையும் அவை விட்டுச்சென்ற சச்சரவுகளையும் போக்க இந்த ஒப்பந்தம் உதவும் என்று அவர் கூறியுள்ளார்.
எனினும், மற்றவர்கள் அவ்வளவு நம்பிகையுடன் இல்லை.

பட மூலாதாரம், Getty Images
"தற்போதைய பிரச்சனைகள் தற்காலிகமாக நின்றுள்ளன. இவை தற்போதைய நிலைமை மட்டுமே," என்கிறார் தென்கொரியாவிலுள்ள பூஷன் தேசிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளர் ராபர்ட் கெல்லி.
கிம் தனது பேரழிவு ஆயுதங்களைக் கைவிடுவார் என்று கெல்லி நம்பவில்லை.
"வடகொரியாவிடம் அணு ஆயுதங்கள் உள்ளன. அவற்றை அவர்கள் கைவிட மாட்டர்கள். இதை செய்யுமாறு நீண்ட நாட்களாக அவர்களை வலியுறுத்தி வருகிறோம். இதற்கு முன்னரும் அவர்கள் அணு ஆயுதங்களைக் கைவிட ஒப்புக்கொண்டுள்ளனர். ஆனால், செயல்படுத்தியதில்லை. எனவே இந்த சந்திப்பு ஒரு நீர்க்குமிழிதான்," என்று அவர் கருதுகிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












