மாயமான இண்டர்போல் தலைவர் - தேடும் பணி தீவிரம்
கடந்த சில மணி நேரங்களில் நிகழ்ந்த உலக நடப்புகளில் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம்.

பட மூலாதாரம், EPA
மாயமான இண்டர்போல் தலைவர்
சீனாவுக்கு பயணம் மேற்கொண்டபோது மாயமான சர்வதேச காவல்துறையான இண்டர்போலின் தலைவரை கண்டுபிடிக்கும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
பிரான்ஸ் நகரமான லியோனிலுள்ள இண்டர்போலின் தலைமை அலுவலகத்திலிருந்து கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி சீனாவுக்கு சென்ற மெங் ஹோங்வெயிடமிருந்து அன்றைய தினத்திலிருந்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என்று அவரது குடும்பத்தினர் கூறுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
"அவர் பிரான்சில் காணாமல் போகவில்லை" என்று இதுகுறித்த விசாரணையில் ஈடுபட்டுள்ளவர்களுடன் தொடர்புடைய ஒருவர் ஏஎஃப்பி செய்தி முகமையிடம் கூறியுள்ளார்.

விஞ்ஞானியின் சர்ச்சை பேச்சு

பட மூலாதாரம், CERN
"இயற்பியல் ஆண்களால் கட்டமைக்கப்பட்டது" என்ற பாலின பாகுபாடுடைய பேச்சை பதிவு செய்த இத்தாலிய ஆராய்ச்சியாளருக்கு எதிரான கண்டன குறிப்பில் இதுவரை 250 மேற்பட்ட விஞ்ஞானிகள் கையெழுத்திட்டுள்ளனர்.
இளம்பெண்கள் பெருமளவில் நிறைந்திருந்த கூட்டத்தில் ஆய்வு முடிவுகளை வெளியிட்டு பேசியபோது, இத்தாலியை சேர்ந்த விஞ்ஞானியும், பேராசிரியருமான அலெசான்ரோ ஸ்ட்ருமியா, இயற்பியலில் ஆண்களை விட பெண்களுக்கு திறன் குறைவு என்பது நிரூபணம் செய்யப்பட்டுள்ளதாக கூறியது பெரும் சர்ச்சைகளை எழுப்பியுள்ளன.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள செர்ன் எனப்படும் ஐரோப்பிய அணுஆராய்ச்சி நிறுவனம், இத்தாலிய ஆராய்ச்சியாளரின் கருத்து மனதை புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும், அவருக்கு எதிராக தங்களது கோப அலைகளை வெளிப்படுத்தி வரும் மற்ற ஆராய்ச்சியாளர்களை ஆதரிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

எது குடும்பம்?

பட மூலாதாரம், EPA
ஒரு குடும்பம் என்பது ஒரு திருமணமான ஆண் மற்றும் பெண்ணை மட்டுமே கொண்டிருக்க வேண்டுமா? என்பதை முடிவு செய்யும் வாக்கெடுப்பில் ரோமானியர்கள் இந்த வார இறுதியில் பங்கேற்க உள்ளனர்.
ரோமானியாவின் அரசமைப்பு சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்காக தொடர்ந்து இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள இந்த ஓட்டெடுப்பு, குடும்பங்களின் "பாரம்பரிய கட்டமைப்பை" காப்பாற்றுவதற்காக மேற்கொள்ளப்படுத்தாக ஆதரவாளர்களும், ஒருபாலின சேர்க்கையாளர்களின் உரிமையை தொடக்கத்திலேயே நசுக்கவதற்காக எடுக்கப்படும் நடவடிக்கை என்று எதிர் தரப்பும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
அதுமட்டுமின்றி, இந்த சட்ட திருத்தத்துக்கு ஒப்புதல் கிடைக்கும்பட்சத்தில், ரோமானியாவிலுள்ள ஒருபாலின சேர்க்கையாளர்கள் மட்டுமல்லாது, தாய்/ தந்தை அல்லது இருவருமே இல்லாதவர்கள், உறவினர்களால் வளர்த்தெடுக்கப்படுபவர்களின் நிலை மோசமாகும் என்று சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

ஓட்டெடுப்பில் உறுதியான பதவி

பட மூலாதாரம், Reuters
பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான அமெரிக்க நீதிபதி பிரெட் கேவனோவுக்கு முக்கிய செனட் உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளதால் உச்சநீதிமன்றத்தில் அவரின் பதவி உறுதி செய்யப்பட்டுள்ளது.
வெள்ளியன்று குடியரசுக் கட்சியை சேர்ந்த செனட்டர் சூசன் கோலின்ஸ் மற்றும் ஜனயாகக் கட்சியை சேர்ந்த ஜோ மன்சிலின் நீதிபதி கேவனோவுக்கு தங்களது ஆதரவை அளித்தனர்.
நீதிபதியின் பதவி உறுதியானால், அமெரிக்காவின் உயரிய நீதிமன்றம் பழமைவாத கட்சிக்கு ஆதரவான நிலைக்கு திரும்பும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












