பன்னீர்செல்வம் பற்றி டிடிவி: உள்கட்சி விரிசலை அதிகமாக்கும் முயற்சியா?

பழனிச்சாமி, பன்னீர்செல்வம், தினகரன்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் பதவியில் இறக்கிவிட்டு தன்னை முதல்வராக அமர்த்துவதாக துணை முதல்வர் பன்னீர்செல்வம் கூறினார் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக (அமமுக) தலைவர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இன்று தனது வீட்டில் பத்திரிகையாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் 2017ம் ஆண்டு ஜூலை 12ம் தேதி துணை முதல்வர் பன்னீர்செல்வம் தன்னை சந்தித்ததாக கூறியுள்ளார்.

இந்த தகவலை ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்னர் தெரிவிப்பதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்று கூறியுள்ள அவர், பன்னீர்செல்வம் தன்னை மீண்டும் மீண்டும் சந்திக்க முயற்சிப்பதை தடுக்கவே இந்த தகவலை இப்போது வெளியிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பின்போது, "தர்மயுத்தம்" நடத்தியதற்கு பன்னீர் செல்வம் மன்னிப்பு கேட்டார் என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

டிடிவி தினகரன்

இது பற்றி கட்சி நிர்வாகிகள் வெற்றிவேல், தங்க.தமிழ்ச்செல்வன், பழனியப்பன், செந்தில்பாலாஜி ஆகியோருடன் கலந்தாலேசித்து விட்டு பொதுவான இடத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றதாகவும் தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நேரத்தில் இத்தகைய தகவலை டிடிவி தினகரன் வெளியிடுவதன் நோக்கம் என்ன? இதனால் யாருக்கு பாதிப்பு, யாருக்கு ஆதாயம் என்று மூத்த பத்திரிகையாளர் ஆர். கே. ராதாகிருஷ்ணனிடம் கருத்து கேட்டோம்.

இந்த தகவலை இந்த நேரத்தில் வெளியிடுவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம் அவர் கூறினார்.

முதலாவதாக, ஏதோ ஒரு பேரம் பேசப்பட்டுள்ளது. அந்த முயற்சி வெற்றியடையவில்லை. அந்த முயற்சி தோல்வியடைந்த பின்னர், இதனை தானே முதலில் வெளியிடுவதால் கிடைக்கும் பயனை எதிர்பார்த்து டிடிவி தினகரன் இந்த தகவலை வெளியிட்டிருக்கலாம் என்று அவர் கருத்து தெரிவித்தார்.

எடப்பாடி பழனிச்சாமி

பட மூலாதாரம், Getty Images

இரண்டாவதாக, தற்போது இருக்கின்ற அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக (அஇஅதிமுக) அரசில் சின்ன விரிசல்கள் தென்படுகிறது.

விஜய பாஸ்கர் வீட்டில் சோதனை, அடுத்த வாரம் வரவுள்ளதாக எதிர்பார்க்கப்படும் சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு மற்றும் சேலம் - சென்னை 8 வழிச்சாலை 6 வழிச்சாலையாக சுருங்கியது போன்றவற்றை வைத்து பார்த்தால், இந்த அரசு திடமாக நின்று முடிவுகளை எடுக்க முடியாமல் திணறுவதாகத் தெரிகிறது.

இலங்கை
இலங்கை

இவ்வாறு அரசிடம் ஏற்கெனவே இருக்கின்ற தோய்வு மற்றும் விரிசல்களை மேலும் விரிவடைய செய்வதற்கு இந்த தகவலை இப்போது அவர் வெளியிட்டிருக்கலாம் என்று ராதாகிருஷ்ணன் கூறினார்.

இந்நிலையில், டிடிவி தினகரனுடன் இந்த சந்திப்பு இருவருக்கும் நண்பரான ஒருவரின் வீட்டில் இடம்பெற்றதை பன்னீர்செல்வம் ஒப்புக்கொண்டுள்ளார்.

தினகரன் திருந்தி வந்திருப்பார் என்று எண்ணியதாகவும், இந்த சந்திப்பை அரசியல் செய்வார் என்று நினைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆளுநர் முன்னிலையில் இணைந்த எடப்பாடி மற்றும் பன்னீர் செல்வம்

ஜூன், ஜூலை மாதங்களில் ஒரு சந்திப்பு நடைபெற்றதாகவும், அதன் பிறகு போன வாரம் கான்டிராக்டர் வீட்டில் இன்னொரு சந்திப்பு நடைபெற்றதாகவும் தங்க தமிழ்செல்வன் தொலைக்காட்சியில் கூறுகிறார்.

பன்னீர்செல்வமும், தினகரனும் சேர்ந்து வருவது அந்த வீட்டிலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஓ.பன்னீர்செல்வம் தந்துள்ள விளக்கம் பற்றிப் பேசிய ராதாகிருஷ்ணன், "இந்த தகவல் வெளிவருவதால் இரண்டு பேருக்கும் பிரச்சனைதான். இந்த தகவலை முதலில் தினகரன் வெளியிட்டாலும், பன்னீர்செல்வம் கொடுக்கும் விளக்கத்தையும் புறந்தள்ளிவிட முடியாது" என்று கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: