தேசபக்தியை அதிகரிக்கும் முயற்சி: பள்ளிகளில் கார்ட்டூன்களுக்கு தடை
கடந்த சில மணி நேரங்களில் நிகழ்ந்த உலக நடப்புகளில் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம்.

பட மூலாதாரம், Twitter
தேசபக்தியை அதிகரிக்கும் முயற்சி: பள்ளிகளில் கார்ட்டூன்களுக்கு தடை
எகிப்தின் வடக்கு கெய்ரோ மாகாணத்தை சேர்ந்த பள்ளிகளில் இனி பிரபல கார்ட்டூன் கதாபாத்திரங்களான 'மிக்கி மௌஸின்' படங்கள் பயன்படுத்தப்படக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
அமெரிக்கா உருவாக்கிய கார்ட்டூன் கதாபாத்திரங்களுக்கு மாற்றாக அம்மாகாணத்திலுள்ள தொடக்கப் பள்ளிகளில், எகிப்து ராணுவ வீரர்களின் புகைப்படங்கள் அவர்களுக்கு முன்னுதாரணமாக வைக்கப்பட வேண்டுமென்று அதன் கவர்னர் கூறியுள்ளதாக யூம்7 என்ற செய்தி இணையதளம் தெரிவித்துள்ளது.
இந்த மாற்றத்தின் மூலம் மாணவர்களுக்கு நாட்டுப்பற்றும், தேசத்தின் மீதான அன்பும் அதிகரிக்கும் என கருதுவதாக மாகாணத்தின் கவர்னர் கூறுகிறார்.

கவானா மீதான பாலியல் குற்றச்சாட்டு - எஃப்.பி.ஐ விசாரணை

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்கு தான் பரிந்துரை செய்த கவானா மீது பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதை அடுத்து அதுகுறித்து அந்நாட்டின் சிறப்பு புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ விசாரணைக்கு அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக, செனட் அவையில் சாட்சியம் அளித்தபோது, கவனாவ் தன்னை கொல்ல போகிறார் என்று பயந்துவிட்டதாக கூறிய கிறிஸ்டைன் பிளாசே ஃபோர்டு, விருந்து ஒன்றில் அவர் தன் மீது பாலியல் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்திருந்தார்.
இந்த சம்பவம் தன்னுடைய வாழ்க்கையையே புரட்டி போட்டது என்று தெரிவித்த பேராசிரியர் ஃபோர்டு, நீண்டகாலமாக இது பற்றி பிறரிடம் கூறுவதற்கு மிகவும் பயந்திருந்ததாக கூறியிருந்தார்.

மூடப்படுகிறது அமெரிக்க துணைத்தூதரகம்

பட மூலாதாரம், Reuters
இரான் மற்றும் இரான் தலைமையிலான படைகளின் அதிகரித்து வரும் அச்சுறுத்தலின் காரணமாக தெற்கு இராக்கின் பஸ்ரா நகரிலுள்ள அமெரிக்க துணை தூதரகத்தை மூடவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வரும் பஸ்ரா நகரில் கடந்த சில வாரங்களாக வன்முறை போராட்டங்கள் நடைபெற்று வருவதால் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தலை தொடர்ந்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக வெள்ளை மாளிகையின் அறிக்கை கூறுகிறது.

ஃபேஸ்புக்கில் பெரியளவிலான தகவல் திருட்டு

பட மூலாதாரம், Reuters
பாதுகாப்பு குறைப்பாடு காரணமாக சுமார் 50 மில்லியன் பயனாளர்களின் தகவல்கள் வெளியே கசிந்துவிட்டதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த தகவல் திருட்டு செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்றுள்ளது. இது குறித்து போலிஸாரிடம் புகார் அளித்துள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வெள்ளியன்று இந்த தகவல் திருட்டால் பாதிக்கப்பட்ட பயனாளிகள் மீண்டும் லாக்கின் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












