அமெரிக்க உச்ச நீதிமன்ற நியமனம்: செனட் அவையில் வாக்கெடுப்பு

நீதிபதி கவானாவ் மற்றும் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய கிறிஸ்டைன் பிலாசெ ஃபோர்டு

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாக கவானாவை நியமித்தது குறித்து செனட் அவையின் முதல் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

நீதிபதி கவானாவ் மற்றும் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய கிறிஸ்டைன் பிலாசெ ஃபோர்டு ஆகியாரின் சாட்சியங்களை தொடர்ந்து இந்த முதல் வாக்கெடுப்பு திட்டமிடப்பட்டுள்ளது.

செனட் அவையில் சாட்சியம் அளித்தபோது, கவனாவ் தன்னை கொல்ல போகிறார் என்று பயந்துவிட்டதாக கூறிய கிறிஸ்டைன் பிளாசே ஃபோர்டு, விருந்து ஒன்றில் அவர் தன் மீது பாலியல் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்தார்.

இந்த சம்பவம் தன்னுடைய வாழ்க்கையையே புரட்டி போட்டது என்று தெரிவித்த பேராசிரியர் ஃபோர்டு, நீண்டகாலமாக இது பற்றி பிறரிடம் கூறுவதற்கு மிகவும் பயந்திருந்ததாக கூறியுள்ளார்.

செனட் அவை உறுப்பினர்கள் அனைவரும் தனது நியமன உறுப்பினரான கவானாவை ஏற்க வேண்டும் என்று அதிபர் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். இதற்கான வாக்கெடுப்பு அடுத்த வாரம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செனட் அவையில் ஆளும் குடியரசு கட்சியினர் 51க்கு 49 என்ற அளவிலேயே மெல்லிய பெரும்பான்மை பெற்றுள்ளனர். ஆனால், குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி செனட் அவை உறுப்பினர்களின் முடிவு கணிக்க இயலாததாக உள்ளது.

வாஷிங்டனில் வாழும் ஜூலி ஸ்வட்நிக்

பட மூலாதாரம், MICHAEL AVENATTI

படக்குறிப்பு, 1980களில் வீட்டு விருந்துகளில் கவானாவ் பாலியல் தாக்குதல் நடத்தியதாக குற்றஞ்சாட்டும் வாஷிங்டனில் வாழும் ஜூலி ஸ்வட்நிக்

போராசிரியர் ஃபோர்டு மற்றும் பிற பெண்களின் குற்றச்சாட்டுக்களை ஃபெடரல் புலனாய்வு துறை விசாரிக்கும் வகையில் இரண்டு வாக்கெடுப்புக்களையும் தாமதப்படுத்த வேண்டுமென அமெரிக்க வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு அழைப்புவிடுத்துள்ளது.

அமெரிக்க அரசியலில் உச்ச நீதிமன்றம் முக்கிய பங்காற்றுகிறது. இங்கு நியமிக்கப்படும் 9 நீதிபதிகளும் தங்களின் வாழ்நாள் முழுவதும் உச்ச நீதிமன்ற நீதிபதியாகத் தொடர்வதோடு, அமெரிக்க சட்டத்தில் இறுதி முடிவை இவர்கள்தான் எடுக்கிறார்கள்.

கருக்கலைப்பு போன்ற சர்ச்சைக்குரிய சமூக பிரச்சனைகளிலும், அரசு கொள்கைகளுக்கு விடுக்கப்படும் சவால்களிலும் இவர்களின் அதிகாரம் பெரியது.

இலங்கை
இலங்கை

உச்ச நீதிமன்ற நீதிபதியாக காவனாவ் நியமிக்கப்படுவதன் மூலம் இன்னும் பல ஆண்டுகளுக்கு, உச்ச நீதிமன்றத்தில் கன்சர்வேட்டிவ் தரப்பினருக்கு ஆதரவான ஒரு சாய்வு இருக்கும்.

இதன் காரணமாக, நவம்பரில் நடைபெறும் இடைத்தேர்தல் வரை, உச்ச நீதிமன்ற நீதிபதி நியமனத்தை உறுதி செய்வதை ஜனநாயக கட்சியினர் தாமதப்படுத்துவதாக குடியரசு கட்சியினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இந்த இடைத்தேர்தலில் போதிய இடங்களைப் பெற்று இந்த நியமனத்தை முற்றாக நிறுத்திவிட முடியும் என்ற நம்பிக்கையில் ஜனநாயக கட்சியினர் இருப்பதாக குடியரசுக் கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :