பணியிடத்தில் சிக்கலா? கவலை வேண்டாம். அது நல்லதுதான்!
நம் பணிக்காலத்தின் ஏதாவது ஒரு சமயத்தில் கேட்கப்படும் கேள்விகள்தான் இவை. ஆனால் இதைக் கேட்க சிலர் அச்சம் கொள்கின்றனர்.

உங்கள் மேலதிகாரியுடன் நீங்கள் நட்புடன் பழக வேண்டுமா? இல்லை தொழில்முறையான உறவாக மட்டுமே அது இருக்க வேண்டுமா? வேலைக்கான நேர்காணலின்போது நீங்கள் பதில் சொல்லத் தேவை இல்லாத கேள்விகள் உள்ளனவா? சகபணியாளர்களுக்குள் பிரச்சனை இருப்பது வேலை நல்லபடியாக நடக்க உதவுமா?
இவை குறித்து சில முன்னணி மேலாண்மை பொறுப்பில் உள்ளவர்களின் பதிலைக் கேட்போம்.
ஜோயல் பீட்டர்சன், ஜெட்புளூ ஏர்வேஸ்
படைப்பாற்றலுடன் பணியாற்றுவது, நிதி மேலாண்மை, பணிகளை அமல்படுத்துவது உள்ளிட்டவை குறித்து பணி இடங்களில் ஒருவருக்கொருவர் கருத்துமோதலில் ஈடுபடுபவர். ஆனால், கேட்க வியப்பாக இருந்தாலும் இத்தகைய மோதல்கள் உண்மையில் நன்மை தருபவையே.
நன்றாக செயல்படாத ஒரு நிறுவனத்தில் பணியாளர்களுக்கு இடையே உண்டாகும் மோதலுக்கும் நன்னம்பிக்கையை பெற்ற ஒரு நிறுவனத்தில் உண்டாகும் மோதலுக்கும் பெரும் வேறுபாடு உள்ளது. அங்குள்ளவர்கள் எவ்வாறு அந்த மோதலை எதிர்கொள்கின்றனர் என்பதே அது.
கூச்சல் அதிகம் உள்ள பணியிடங்களில்தான் சிறப்பான செயல்பாடு இருக்கும். வெளியில் இருப்பவர்களுக்கு அங்கு அதிகமான பிரச்சனை இருப்பதாகத் தோன்றினாலும், இத்தகைய கருத்து மோதல்களால் உள்ளே இருப்பவர்களுக்கு பல்வேறு கண்ணோட்டங்கள் கிடைக்கும்.

இதில் முக்கியமானது என்னவென்றால், அந்த அலுவலகத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் இந்த கருத்து மோதல்களை எவ்வாறு கையாள்கிறார் என்பதே. இந்த மோதல்களை சிறப்பாகக் கையாண்டால் அமைப்புக்குள் நம்பிக்கை பெருகும்.
இந்தப் பிரச்சனைகளை வாய்ப்புகளாகவும், வளர்ச்சிக்கான பாடமாகவும் மாற்ற வேண்டும். அதற்காக சில ஆலோசனைகளையும் வழங்குகிறார் பீட்டர்சன்.
பணியாளர்கள் தெரிவிக்கும் ஆலோசனைகளில் சிறந்தது எதுவென்று கண்டறிந்து, அதைச் செயல்படுத்த வேண்டும். அவற்றை செயல்படுத்தாவிட்டால், சிக்கல் மேலும் மோசமாகும். சில நேரங்களில் மிகச்சிறந்த கருத்துகள் தொடக்கத்திலேயே ஊழியர்களால் வெளிப்படுத்தப்பட்டிருக்காது. இதனால், கடைநிலை ஊழியர்களின் சிறந்த ஆலோசனைகள் கேட்கப்படாமலேயே போகும் வாய்ப்பு உண்டு.
சில கருத்து மோதல்கள் கோபமாகவோ, பிறர் உணர்வுகளை காயப்படுத்தும் வகையிலோ அமைவதைத் தடுக்க முடியாது. ஏனெனில், அவர்கள் தங்கள் எண்ணங்களை மட்டுமல்ல, உணர்வுகளையும் வெளிப்படுத்துகிறார்கள். அது நல்லதுதான். அப்படி அவர்கள் உணர்வுகள் பாதிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
ஆலிவியர் ஃபுளூரோட், பப்லிசிஸ் குரூப்
அலுவலகத்தில் மிகவும் இளைய அல்லது உங்களைவிட மிகவும் குறைவான பணி அனுபவம் உடையவர்கள் தங்கள் மேலதிகாரியை ஒரு நண்பராக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். அவர்கள் அலுவலகத்தில் மேலதிகாரி, கீழ்நிலை பணியாளர் என்ற படிநிலைகளை அவர்கள் விரும்புவதில்லை. இளம் வயதினரின் மூன்றில் ஒரு பங்கினர் தங்கள் மேலதிகாரி அப்பதவிக்கு ஒரு முன்மாதிரியானவர் என்று நினைக்கவில்லை.

ஆனால், ஒப்பீட்டளவில் பழமையான மதிப்பீடுகளை பின்பற்றும் அலுவலகங்களில் அது சற்று சிரமம். அப்படியானால் இளம் திறமைசாலிகளை தக்கவைத்துக்கொள்ள நிறுவனங்கள் என்ன செய்ய வேண்டும்?
பல்வேறு வயதினரையும் உள்ளடக்கிய குழுக்களை நிர்வகிக்க மேலாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அதற்காக அவர்கள் சொல்லும் அனைத்தையும் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று கட்டாயமில்லை. அனைத்து பணியாளர்களின் கருத்தையும் கேட்டு, எல்லோரும் ஒப்புக்கொள்ளும் ஒரு முடிவை எடுக்க வேண்டும்.
இரண்டாவதாக, உங்கள் அலுவலகக் குழுவின் நோக்கம் இதுதான் என்று தெளிவாகத் தெரிந்தால் பணியாளர்களுக்கு கட்டளையிட்டுத்தான் வேலை வாங்க வேண்டும் எனும் பழைய முறையையே பின்பற்றத் தேவையில்லை. அவர்கள் செயல்பாடு குறித்த பின்னூட்டங்கள் மற்றும் பாராட்டுகளே போதுமானவை.
மேலதிகாரியாக இல்லாமல் ஒரு பயிற்றுநர் போலவும் பணி ஆலோசகர் போலவும் மேலாண்மை செய்பவர்கள் இளம் பணியாளர்களிடம் நடந்துகொள்ள வேண்டும்.
பெர்னார்டு மார், அட்வான்சுடு பெர்பார்மன்ஸ் இன்ஸ்டிட்யூட்
நேர்காணலின்போது ஒருவரிடம் முறையற்ற அல்லது சட்டவிரோதமான கேள்வி கேட்கப்படுவதாக கேள்விப்படும்போது எனக்கு மிகவும் கோபம் வருகிறது.

பட மூலாதாரம், Alamy
உங்கள் வயது என்ன? உங்களுக்கு குழந்தைகள் உள்ளனவா? உங்களுக்கு எவ்வளவு கடன் உள்ளது? நீங்கள் மது அருந்துவீர்களா? எந்த மத விடுமுறை நாட்களில் நீங்கள் விடுப்பு எடுப்பீர்கள்? வார இறுதி நாட்களில் என்ன செய்வீர்கள்? என்றெல்லாம் கேட்கப்படுகின்றன.
நேர்காணல் என்பது ஒருவர் அந்த வேலைக்கு தகுதியானவரா இல்லையா என்பதை அறியவே. அவரது நாடு, மதம், இனம், வயது, குடும்பச்சூழல், நிதி நிலைமை ஆகியவை குறித்த கேள்விகளுக்கு நாம் பதில் அளிக்கத் தேவை இல்லை. இப்படிப்பட்ட நேர்க்காணல்களை பாதியில் முடித்துகொண்டுகூட நீங்கள் வெளியேறலாம்.
ஒருவேளை இந்தக் கேள்விகளுக்கு நீங்கள் பதில் அளிக்க விரும்பினால், அது உங்கள் விருப்பம். பதில் கூறுவதும், கூற மறுப்பதும் உங்கள் உரிமை. சில நேரங்களில் இத்தகைய கேள்விகளை கேட்கும் நேர்காணல் செய்பவருக்கு உள்நோக்கங்கள் எதுவும் இல்லாமல் இருக்கலாம். இத்தகைய சூழல்களில் அந்தக் கேள்விகள் கேட்கப்படுவதற்கான நோக்கம் என்ன என்பதை அறிய முற்படுவதே சிறந்தது ஆகும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












