You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சோமாலியா தலைநகரில் குண்டுவெடிப்பு: 3 பேர் பலி
சோமாலியாவின் தலைநகர் மொகதீஷுவில் உள்ள அரசு அலுவலகம் ஒன்றை தற்கொலை தாக்குதல்தாரி தாக்கியதில் அருகில் இருந்த பள்ளியும் இடிந்து விழுந்தது என போலிஸார் தெரிவித்தனர்.
மூன்று சிப்பாய்கள் பலியாகினர் மற்றும் குழந்தைகள் உட்பட 14 பேர் காயமடைந்துள்ளனர் என உள்ளூர் அதிகாரிகள் பிபிசி சோமாலி சேவையிடம் தெரிவித்தனர்.
இந்த குண்டு வெடிப்பில் அருகில் இருந்த வீடுகளும் சேதமடைந்தன மேலும் மசூதி ஒன்றின் கூரையும் சேதமடைந்தது.
பத்து வருடத்திற்கும் மேலாக கிளர்ச்சியில் ஈடுபட்டு வரும், தீவிரவாத குழுவான அல் ஷபாப் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.
வெடிகுண்டுகள் இருந்த காரை அரசு அலுவலக வளாகத்துக்குள் வர விடாமல் தடுத்து நிறுத்தியதில் அந்த மூன்று சிப்பாய்களும் பலியாகினர் என்று உள்ளூர் அதிகாரி சலா ஹாசன் உமர் தெரிவித்துள்ளார்.
குண்டு வெடிப்பு சமயத்தில் அந்த வளாகத்திற்குள் இருந்த ரகியா மஹமத் அலி, "சம்பவம் நடைபெறும் சமயத்தில் நாங்கள் எங்கள் பணிக்கு மத்தியில் இருந்தோம். மேசைக்கு அடியில் ஒளிந்து கொண்டோம். எங்கள் நுழைவு வாயிலில் துப்பாக்கிச் சூடு சத்தம் பல கேட்டது. நாங்கள் வெளியே வந்து பார்த்தபோது பலர் காயமடைந்து தரையில் விழுந்து கிடந்தனர். மேலும் பலர் பலியாகி கிடந்தனர்" என்று தெரிவித்தார்.
சோமாலியாவில் ராணுவ ஆட்சி கலைக்கப்பட்ட 1991ஆம் ஆண்டிலிருந்து அங்கு ஸ்திரமற்ற தன்மையும் வன்முறைகளும் நிகழ்ந்து வருகின்றன.
முஹமத் சியட் பரே அதிபர் பதவியிலிருந்து நீக்கப்பட்டது அங்கு உள்நாட்டு போருக்கு வித்திட்டது.
சோமாலியாவின் பெரும்பாலான பகுதி, போர் நடைபெறும் இடங்களாக இருந்து வருகின்றன.
சோமாலியாவில் ஐ.நாவின் ஆதரவோடு 2012 கூட்டு அரசு அமைக்கப்பட்டது. அப்போதிலிருந்து, அல் ஷபாப் நகர்புற பகுதிகள் பலவற்றிலிருந்து விரப்பட்டது. ஆனால், கிராமப்புறங்களில் சில பகுதிகள் அல் ஷபாபின் கட்டுப்பாட்டில் உள்ளன. அங்கே ராணுவத்தினர் மீதும், பொது மக்கள் மீதும் துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதல்களை அல் ஷபாப் அமைப்பு நடத்தி வருகிறது.
அல்-ஷபாப் அமைப்பு தன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் கடுமையான ஷரியா சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. அதில் திருட்டு குற்றத்தில் ஈடுபட்டால் கைகளை வெட்டுவது போன்றவை அடங்கும்.
கடந்த வருடம் அக்டோபர் மாதம் சோமாலியாவில் நடைபெற்ற வெடிகுண்டு சம்பவம் ஒன்றில் குறைந்தது 500 பேர் பலியாகினர்.
அல் ஷபாப் பிரிவு ஒன்றின் தலைவர் என்று கூறப்பட்டவர் இந்த தாக்குதலை நடத்தியதாக தூக்கிலிடப்பட்டார்.
பிற செய்திகள்:
- வாக்காளர் பட்டியலில் பேரை சேர்க்க 3 நாட்களாக வரிசையில் காத்திருந்த மக்கள்
- தாமதமான விசாவால் தமிழக வீராங்கனைக்கு நழுவிய வாய்ப்பு
- ரஷ்யா: சோச்சியில் தீப்பற்றி கொளுந்துவிட்டு எரிந்த விமானம்
- "நீங்கள் ஆணா? பெண்ணா?” - விரும்பிவாறு வாழும் றிஸ்வான் சந்திக்கும் கேள்வி
- பணமதிப்பு நீக்கம்: சாமானிய மனிதன் பெற்ற பலன் என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்