உலகப் பார்வை: போலீசாரை குற்றஞ்சாட்டும் மலேசிய முன்னாள் பிரதமர்
கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.
போலீசாரை குற்றஞ்சாட்டும் மலேசிய முன்னாள் பிரதமர்

பட மூலாதாரம், Paul Kane
தனக்கு சொந்தமான இடங்களிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட ஆடம்பர பொருட்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்த போலீசாரின் நடவடிக்கையை மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் விமர்சித்துள்ளார்.
நாட்டின் வளர்ச்சி நிதியமான 1எம்டிபி தொடர்பான விசாரணையில், தலைநகர் கோலாலம்பூரில் உள்ள நஜிபுக்கு சொந்தமான இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன.

கியூபா விமான விபத்து: கருப்புப் பெட்டி கண்டெடுப்பு

பட மூலாதாரம், AFP
நேற்று கியூபாவின் தலைநகரான ஹவானா விமான நிலையத்துக்கு அருகே நிகழ்ந்த விமான விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் அதன் இரண்டு கருப்புப் பெட்டிகளில் ஒன்று "நல்ல நிலையில்" கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமானத்தின் இரண்டாவது கருப்புப் பெட்டி விரைவில் கண்டுபிடிக்கப்படும் என்று அந்நாட்டு போக்குவரத்து துறை அமைச்சரான அடெல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தேர்ந்தெடுத்து தாக்குதல் தொடுத்த துப்பாக்கிதாரி

பட மூலாதாரம், DIMITRIOS PAGOURTZIS/FACEBOOK
டெக்ஸாஸில் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஈடுபட்ட துப்பாக்கிதாரி, "தனது செயற்பாடுகளை வெளியே சொல்லுவதற்காக" தனக்கு பிடித்தவர்களை தேர்ந்தெடுத்து அவர்களை தாக்காமல் விட்டுவிட்டதாக, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணம் ஒன்று கூறுகிறது.
ஹூஸ்டன் நகருக்கு தெற்கே 40 மைல்களுக்கு அப்பால் உள்ள சாண்டா ஃபே ஹை ஸ்கூல் என்ற இந்த பள்ளியில் நடந்த தாக்குதலுக்கு பிறகு 17 வயதான டிமிட்ரியோஸ் பாகார்ட்ஸ் என்ற மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தாக்குதலில் இரண்டு ஆசிரியர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எத்தியோப்பியர்கள் விடுதலைக்கு சௌதி சம்மதம்

பட மூலாதாரம், AFP
செளதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததால் சிறையில் அடைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான எத்தியோப்பியர்களை விடுவிக்க செளதி அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக எத்தியோப்பிய அரசு கூறியுள்ளது. இந்த வாரம் செளதி அரேபியாவிற்குச் சென்ற எத்தியோப்பிய பிரதமர் அபீ அகமதின் வேண்டுகோள் விடுத்ததையடுத்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் 3 பேர் உயிரிழப்பு

பட மூலாதாரம், EPA
இஸ்ரேல் எல்லை அருகே போராட்டம் நடத்திய பாலத்தீனர்கள்மீது இஸ்ரேல் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் காயமடைந்த மேலும் 3 பேர் இறந்ததாக காசாவில் உள்ள மருத்துவ தகவல்கள் கூறுகின்றன. அமெரிக்காவின் இஸ்ரேல் தூதரகம் ஜெருசலேமிற்கு மாற்றப்பட்டதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட 60க்கும் மேற்பட்ட பாலத்தீனர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












